சென்னை அண்ணாநகரில் அதிவேகமாக ஓட்டிச் சென்ற கார் ஏற்படுத்திய விபத்தில் இருவர் உயிரிழந்ததாக வரும் செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது. அதே விபத்தில் மேலும் மூவர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வரும் நிலையில் கல்லூரி மாணவர்கள் கஞ்சா போதையின் காரணமாகவே அதிவேகமாக காரை ஓட்டிச் சென்று விபத்து ஏற்படுத்தியதாக செய்திகள் வெளியாகியுள்ளன். தலைநகர் உட்பட தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் நாள்தோறும் நிலவும் சட்டம் ஒழுங்கு சீர்குலைவுக்கு காரணமான கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் நடமாட்டத்தை திமுக அரசு கட்டுப்படுத்த தவறியதன் விளைவே இது போன்ற விபத்துக்களும் உயிரிழப்புகளும் ஏற்படக் காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே, மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் என அனைவர் மத்தியிலும் தலைவிரித்தாடும் போதைக் கலாச்சாரத்தை அடியோடு ஒழித்து நிரந்தர முற்றுப்புள்ளி வைப்பதோடு, அதனால் ஏற்படும் தீமைகள் குறித்து மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் எனவும் தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.

தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் முல்லைப் பெரியாறு அணையில் மத்திய சுரங்கத்துறையின் கீழ் இயங்கும் தேசிய பாறை மற்றும் இயந்திரவியல் ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் முகாமிட்டு ஆய்வு மேற்கொள்வது அதிர்ச்சியையும் சந்தேகத்தையும் ஏற்படுத்துகிறது. சுரங்கம், அணுமின் திட்டங்கள், எண்ணெய் எரிவாயு ஆகியவை குறித்து ஆலோசனை வழங்கி வரும் தேசிய பாறை மற்றும் இயந்திரவியல் ஆராய்ச்சி நிலையத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் முல்லைப் பெரியாறின் பிரதான அணை, பேபி அணை, சுரங்கப்பகுதி மற்றும் நீர் கசியும் அளவை பார்வையிட்டு ஆய்வு செய்து வருவதாக நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியாகியுள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவின்படி, பருவகால மாறுபாடுகளின் போது முல்லைப் பெரியாறு அணையின் நீர் நிலவரம் மற்றும் உறுதித்தன்மையை மத்திய கண்காணிப்புக்குழு அதிகாரிகள் மட்டுமே ஆய்வு செய்து வந்த நிலையில், வழக்கத்திற்கு மாறாக பாறை மற்றும் இயந்திரவியல் ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் குழு ஆய்வு செய்திருப்பது விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. எனவே, முல்லைப் பெரியாறு அணையில் திடீரென நடைபெற்ற ஆய்வுக்கான காரணத்தை விவசாயிகளுக்கு விளக்குவதோடு, ஐந்து மாவட்ட விவசாயிகளின் ஜீவாதாரமாக விளங்கும் முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் மாநில உரிமையைப் பாதுகாக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:
தலைமைக் கழக அலுவலகம்
எண்: 15, வெஸ்ட் காட் ரோடு, ராயப்பேட்டை,
சென்னை – 600 014
மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2022 AMMK. All Rights Reserved.