நாமக்கல் அருகே சட்டவிரோதமாக நடைபெற்ற சிறுநீரகத் திருட்டில் திமுக நிர்வாகிக்குத் தொடர்பிருப்பதாகப் புகார் – ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து மனிதர்களையும் கடிக்கத் துணிந்துவிட்டனரா திமுகவினர்?நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம், குமாரப்பாளையம் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசித்து வரும் ஏழைத் தொழிலாளர்களின் சிறுநீரகங்கள் கொள்ளையடிக்கப்பட்டு வருவதாக ஊடகங்களிலும் நாளிதழ்களிலும் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. வேலைவாய்ப்பில்லாமல் வறுமையில் வாடும் எளிய மக்களிடமிருந்து சட்டவிரோதமாகக் கொள்ளையடிக்கப்படும் சிறுநீரகங்கள், ஆந்திரா, தெலங்கானா போன்ற அண்டை மாநிலங்களில் பல லட்ச ரூபாய் அளவிற்கு விற்பனை செய்யப்படுவதன் பின்னணியில் திமுக நிர்வாகி ஒருவர் இடைத்தரகராகச் செயல்பட்டிருப்பதும் விசாரணையில் தெரியவந்திருப்பதாகக் கூறப்படுகிறது.தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளுக்கும், போதைப் பொருள் கடத்தல் மற்றும் விற்பனையிலும் தொடர்பிலிருந்த திமுகவினர், தற்போது சட்டவிரோத சிறுநீரகத் திருட்டு சம்பவங்களுக்கும் இடைத்தரகர்களாகச் செயல்பட்டிருப்பதன் மூலம், ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து கடைசியாக மனிதனையும் கடிக்கும் சூழலுக்கு திமுகவினர் துணிந்துவிட்டனரா? என்று கேட்கத் தோன்றுகிறது.<எனவே, ஏழைத் தொழிலாளர்களிடம் சட்டவிரோதமாகச் சிறுநீரகத்தைக் கொள்ளையடித்த கும்பல், இடைத்தரகாக செயல்பட்ட திமுக நிர்வாகி, உடந்தையாக இருந்த தனியார் மருத்துவமனைகள் உட்பட அனைவரின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, இனிவரும் காலங்களில் இதுபோன்ற சிறுநீரகத் திருட்டுச் சம்பவங்கள் நடைபெறாத வகையில் குழு அமைத்துக் கண்காணிக்க வேண்டும் எனத் தமிழக அரசு வலியுறுத்துகிறேன்.

நேர்மையாகப் பணியாற்றுவதால் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாவதாக மயிலாடுதுறை காவல் துணைக் கண்காணிப்பாளர் புகார் – காவல்துறையில் நேர்மையாகவும், உண்மையாகவும் பணியாற்றும் அதிகாரிகளுக்கு திமுக அரசு கொடுக்கும் பரிசுதான் இந்த நெருக்கடியா?காவல்துறையில் நேர்மையாகப் பணியாற்றுவதால் தாங்க முடியாத அளவிற்கு நெருக்கடிக் கொடுப்பதாக உயர் அதிகாரிகள் மீது மயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்குத்துறை துணைக் கண்காணிப்பாளர் திரு.சுந்தரேசன் அவர்கள் தெரிவித்திருக்கும் புகார் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. மயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்குத்துறையின் துணைக் கண்காணிப்பாளராகப் பொறுப்பேற்ற நாள் முதல் அங்கு நடைபெற்ற சட்டவிரோத மதுவிற்பனைகளைத் தடுத்து நிறுத்தியதோடு, அச்செயல்களில் ஈடுபடுவோரைக் கைது செய்து சிறையில் அடைத்த நேர்மையான அதிகாரியின் வாகனத்தைப் பறித்து அவருக்கு பல்வேறு விதமான நெருக்கடிகளைக் கொடுத்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.பந்தோபஸ்து எனும் பெயரில் அடுத்தடுத்து பல்வேறு மாவட்டங்களுக்கு அலைக்கழித்திருப்பதோடு, தான் பயன்படுத்தி வந்த வாகனத்தையும் திட்டமிட்டுப் பறித்ததில் மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தொடங்கி அரசின் உளவுத்துறை உயர் அதிகாரிகள் வரை தொடர்பிருப்பதாகத் திரு.சுந்தரேசன் அவர்கள் தனக்கு துறைரீதியாக ஏற்பட்ட அழுத்தங்களை ஆதங்கத்துடன் வெளிப்படுத்தியுள்ளார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பேணிக்காத்து பொதுமக்களுக்குப் பாதுகாப்பு வழங்கும் மகத்தான பணியைச் செய்யும் காவல்துறையில் உண்மையாகவும், நேர்மையாகவும், அர்ப்பணிப்பு உணர்வுடனும் செயல்படும் அதிகாரிகளை ஊக்குவிக்க வேண்டிய பொறுப்பு திமுக அரசுக்கு இருந்தும், அதற்கு நேர்மாறாக பாலியல் வன்கொடுமை உட்பட பல்வேறு குற்றச்சம்பவங்களில் ஈடுபடும் சமூக விரோதிகளை ஊக்குவித்து, அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முயலும் அதிகாரிகளையும் உயர் அதிகாரிகளின் வழியாக நெருக்கடி கொடுப்பதன் மூலம் திமுக அரசு சமூக விரோதிகளுக்கான அரசு என்பதனை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது. எனவே, மயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்குத்துறை காவல் துணை கண்காணிப்பாளர் எழுப்பியிருக்கும் குற்றச்சாட்டுகளை விரிவான விசாரணைக்கு உட்படுத்தி அவருக்கு நெருக்கடி கொடுத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதோடு, தமிழகத்தில் குற்றவாளிகளை இரும்புக்கரம் கொண்டு அடக்கும் வகையில், காவல்துறையினர் சுதந்திரமாகச் செயல்படுவதற்கான சூழலை ஏற்படுத்த வேண்டும் என முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.

தலைமைக் கழக அறிவிப்பு: கழகத்தின் கொள்கை குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், திருவாரூர் மாவட்ட இதயதெய்வம் அம்மா பேரவை செயலாளர் திரு.P.G.பாரதி அவர்கள் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் இன்று முதல் நீக்கி வைக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத்தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது எனக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

பணிநிரந்தரம் கோரி பத்தாவது நாளாகப் போராடும் பகுதி நேர ஆசிரியர்கள் வலுக்கட்டாயமாகக் கைது – போராடுவோரை அடக்கி ஒடுக்குவதில் திமுக அரசு செலுத்தும் கவனத்தைத் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் செலுத்த வேண்டும்.பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை பள்ளிக்கல்வித்துறை வளாகத்தில் பத்தாவது நாளாகத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த பகுதிநேர ஆசிரியர்கள் காவல்துறையினரால் வலுக்கட்டாயமாகக் கைது செய்யப்பட்டிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. ஓவியம், இசை, உடற்கல்வி, கணினி என பல்வேறு பாடங்களைப் பயிற்றுவிக்க நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் தங்களை பணிநிரந்தரம் செய்யுமாறு பலமுறை கோரிக்கை விடுத்தும் செவிசாய்க்காத திமுக அரசால், சுமார் 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களின் வாழ்வாதாரமும் எதிர்காலமும் கேள்விக்குறியாகியுள்ளது.சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் 181வது வாக்குறுதியான பகுதிநேர ஆசிரியர்கள் பணிநிரந்தரம் செய்யப்படுவார்கள் என்ற வாக்குறுதியை இதுவரை நிறைவேற்றாத திமுக அரசு, அதற்காகப் போராடும் ஆசிரியர்கள் மீது அடக்குமுறையை ஏவியிருப்பதோடு வழக்குப்பதிவு செய்து மிரட்டுவதும் கடும் கண்டனத்திற்குரியது.ஒவ்வொரு போராட்டத்தின் போதும் அழைத்துப் பேசி கோரிக்கைகள் நிறைவேற்றித் தரப்படும் என பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளின் மூலம் வாக்குறுதியை அளித்த திமுக அரசு, ஆட்சி நிறைவடையும் தருவாயிலும் அவர்களை பணிநிரந்தரம் செய்ய மறுப்பது ஒட்டுமொத்த ஆசிரியர்களுக்கும் இழைக்கும் நம்பிக்கைத் துரோகம் ஆகும். எனவே, காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு மண்டபத்தில் அடைக்கப்பட்டுள்ள பகுதிநேர ஆசிரியர்களை எந்தவித நிபந்தனையுமின்றி உடனடியாக விடுவிப்பதோடு, அவர்களின் பிரதிநிதிகளை அழைத்துப் பேசி தேர்தலுக்கு முன்பாக திமுக அளித்த பணிநிரந்தரம் என்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றிட வேண்டும் என முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.