“மக்களால் நான் மக்களுக்காகவே நான்” எனும் தாரக மந்திரத்தை தன் வாழ்க்கையாக கொண்டு நாடு போற்றும் எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி மக்களின் இதயங்களில் என்றென்றும் நிலைத்திருக்கும் இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் ஏழாம் ஆண்டு நினைவு தினம் இன்று. அடக்குமுறைகள் ஆயிரம் வழியில் வந்தாலும் அதனை துணிச்சலுடன் எதிர்கொண்ட அம்மா அவர்களின் வழியில் பயணித்து அவரின் லட்சியங்களை மீட்டெடுப்பதோடு, தீய சக்தியையும், துரோகக் கூட்டத்தையும் அடியோடு அகற்ற அம்மா அவர்களின் நினைவுநாளில் உறுதியேற்போம்.

இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் ஏழாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி நாளை சென்னை மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து நிர்வாகிகளும், தொண்டர்களும் சென்னை நோக்கி இன்றே புறப்பட இருப்பதை நான் அறிவேன். மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையாலும், வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையாலும் வெளி மாவட்டங்களில் இருந்து சென்னை நோக்கி வரும் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தங்களின் பயணத்தைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன். மாறாக, அவரவர் வசிக்கும் பகுதிகளில் அம்மா அவர்களின் திருவுருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தி மக்கள் விரோத ஆட்சியை வீழ்த்தி, துரோக கூட்டத்தை அகற்றி அம்மா அவர்களின் உண்மையான ஆட்சியை அமைக்க உறுதியேற்குமாறு அனைவருக்கும் வேண்டுகோள் விடுக்கிறேன்.

”சாதிப்பதற்கு மாற்றுத்திறன் தடையல்ல” என்ற தன்னம்பிக்கை வரிகளுக்கு ஏற்ப, தடைகளை தகர்த்தெறிந்து ஒவ்வொரு துறைகளையும் தனக்கான துறைகளாக மாற்றிக் கொண்டிருக்கும் மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். உரிமைகளை பேசும் தினமாக நின்றுவிடாமல், கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரம் என அனைத்திலும் சம வாய்ப்பு வழங்கி, ஒவ்வொரு மாற்றுத்திறனாளியும் சமுதாயத்தில் சுயமரியாதையுடன் வாழ எளிதில் அணுகக்கூடிய சமமான உலகத்தை உருவாக்க இந்நாளில் உறுதியேற்போம்.

செஸ் போட்டியின் உயரிய பட்டமான கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை பெற்ற தமிழ்நாட்டின் முதல் செஸ் வீராங்கனை என்ற சாதனையை படைத்திருக்கும் வைஷாலி அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். கடுமையான உழைப்பு மற்றும் விடா முயற்சியின் மூலம் இந்தியாவின் 84 வது கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை பெற்றிருக்கும் வைஷாலி அவர்கள், அடுத்தடுத்து நடைபெறும் உலகளவிலான போட்டிகளில் பதக்கங்களை குவித்து தாய்நாட்டிற்கு மென்மேலும் பெருமை சேர்க்கவும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

சென்னையில் பெய்துவரும் தொடர் மழையால் குடியிருப்புகளை சூழ்ந்திருக்கும் மழை நீரை போர்க்கால அடிப்படையில் அகற்றுவதோடு, பொதுமக்களை பாதுகாக்க நிரந்தர வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன். சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இடைவிடாமல் பெய்துவரும் கனமழை காரணமாக சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் மழைநீரால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு வீடுகளுக்குள்ளேயே முடங்கியிருக்கும் சூழல் உருவாகியுள்ளது. ஆட்சிக்கு வந்த இரண்டரை ஆண்டுகளில் மழைநீர் பாதிப்பிலிருந்து பொதுமக்களை பாதுகாக்க எவ்வித நடவடிக்கைகளையும் திமுக அரசு மேற்கொள்ளவில்லை என்பதற்கு முதலமைச்சர் அவர்களின் தொகுதியான கொளத்தூரில் குளம்போல தேங்கியிருக்கும் மழைநீரே சிறந்த உதாரணம் . சாலைகள் மற்றும் குடியிருப்புகளை சூழந்திருக்கும் மழைநீரால் சுகாதார சீர்கேடு நிலவுவதோடு, மழைநீர் வடிகால் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் முறையாக மூடப்படாமல் இருப்பதன் மூலம் விபத்து ஏற்படும் அபாயமும் இருப்பதாக சென்னையைச் சேர்ந்த பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். எனவே, சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் தேங்கியிருக்கும் மழைநீரை வெளியேற்ற போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுப்பதோடு, மழைநீர் பாதிப்பிலிருந்து பொதுமக்களை பாதுகாக்க நிரந்தர வெள்ளத் தடுப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

பள்ளிக் குழந்தைகளுக்கான காலை உணவுத் திட்டத்தை தனியாருக்கு தாரை வார்க்கும் சென்னை மாநகராட்சியின் முடிவு கண்டனத்திற்குரியது – மாமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை உடனடியாக திரும்ப பெற வேண்டும். சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட சுமார் 350 பள்ளிகளில் நாள்தோறும் 65ஆயிரம் மாணவ, மாணவியர்களுக்காக செயல்படுத்தப்பட்டு வந்த காலை உணவுத்திட்டத்தை தனியாருக்கு தாரைவார்க்கும் தீர்மானம் சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இத்தீர்மானம் தமிழக முதலமைச்சரின் ஒப்புதலோடு தான் நிறைவேற்றப்பட்டதா ? ஒருவேளை முதலமைச்சரும் இத்தீர்மானத்திற்கு அனுமதி அளித்திருந்தால், திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் போக்குவரத்து துறை தொடங்கி அனைத்து துறைகளையும் தனியாருக்கு தாரை வார்ப்பதாக பொதுமக்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கள் உண்மை தானோ? என்று எண்ணத் தோன்றுகிறது. எனவே, காலை உணவுத்திட்டத்தை தனியாருக்கு தாரைவார்க்கும் தீர்மானத்தை திரும்ப பெறுவதோடு, ஏழை, எளிய மக்களின் பசியைப் போக்கிய அட்சயப்பாத்திரமான அம்மா உணவகங்களை மேம்படுத்தி அதன் மூலம் பள்ளிக் குழந்தைகளுக்கு தரமான உணவு தயார் செய்து வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சென்னை மாநகராட்சியையும், தமிழக அரசையும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி சில்க்யாரா சுரங்கப் பாதை விபத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களும் 17 நாட்களுக்கு பிறகு பாதுகாப்பாக மீட்கப்பட்டிருப்பது ஏக்கத்துடன் எதிர்பார்த்து காத்திருந்த அனைவருக்கும் மனநிறைவை தந்திருக்கிறது. பல்வேறு இன்னல்களை கடந்து இக்கட்டான சூழலிலும் சுரங்கத்தினுள் சிக்கிய தொழிலாளர்களை மீட்கும் பணியில் ஈடுபட்ட தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புபடையினர், இந்திய ராணுவத்தினர், பல்வேறு நாடுகளில் இருந்து வரவழைக்கப்பட்டிருந்த சுரங்கப்பாதை நிபுணர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், காவல்துறையினர் உள்ளிட்ட அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். வெளிநாடுகளை சேர்ந்த நிறுவனங்களின் தொழில்நுட்பங்களை மிஞ்சும் அளவுக்கு அதிநவீன வசதிகளுடன் கூடிய இயந்திரங்களை வழங்கிய நாமக்கல்லைச் சேர்ந்த நிறுவனம், மீட்பு மற்றும் குழாய் அமைக்கும் பணிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர்களின் பங்கு, தொழிலாளர்களை உயிருடன் மீட்க பேருதவியாக இருந்திருப்பது இரட்டிப்பு மகிழ்ச்சியளிக்கிறது. சுரங்கத்திலிருந்து மீட்கப்படும் தொழிலாளர்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சை வழங்குவதோடு, இந்த சுரங்க விபத்தை முன்னுதாரணமாக கொண்டு ஆபத்தான பணிகளில் ஈடுபடும் போது தொழிலாளர்களுக்கு உயிர் பாதுகாப்பு உபகரணங்கள், விபத்து ஏற்படும் பட்சத்தில் மீட்பதற்கான மாற்று ஏற்பாடுகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். #UttarakhandTunnelRescue

கழகம்

அலுவலகம்

முகவரி:
தலைமைக் கழக அலுவலகம்
எண்: 15, வெஸ்ட் காட் ரோடு, ராயப்பேட்டை,
சென்னை – 600 014
மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2022 AMMK. All Rights Reserved.