தமிழ்நாட்டின் தென்கோடியான ராமேஸ்வரத்தில் பிறந்து தாய்மொழியான தமிழ் வழியில் கல்வி பயின்று ஏவுகணை தொழில்நுட்பத்தில் உலகமே வியக்கும் அளவிற்கு பல்வேறு சாதனைகளை புரிந்த இந்தியாவின் ஏவுகணை நாயகரும் குடியரசு முன்னாள் தலைவருமான பாரத ரத்னா டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் அவர்களின் நினைவுதினம் இன்று. இளம் தலைமுறையினருக்கு ஊக்கமூட்டும் உந்து சக்தியாக, புகழ்பெற்ற அறிவியல் அறிஞராக, நாட்டுமக்களின் அன்பிற்குரிய குடியரசுத் தலைவராக என ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் வழிகாட்டியாக திகழ்ந்த பாரத ரத்னா ஏ.பி.ஜே. அப்துல்கலாம் அவர்கள் வகுத்துக் கொடுத்த பாதையில் தொடர்ந்து பயணிக்க அவரது நினைவுநாளான இந்நாளில் உறுதியேற்போம்.

மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் அவலம் அப்பட்டமான மனித உரிமை மீறல் – தடைச் சட்டத்தை முழுமையாக அமல்படுத்த தவறிய திமுக அரசின் அலட்சியப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது. கடலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பாதாளச் சாக்கடைகளில் ஏற்பட்ட அடைப்புகளை, எந்தவித பாதுகாப்பு உபகரணங்களுமின்றி தொழிலாளர்கள் சுத்தம் செய்வது போல வெளியாகியிருக்கும் வீடியோ காட்சிகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. நாட்டு மக்கள் அனைவரும் நவீன விஞ்ஞான உலகத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கும் இந்த காலகட்டத்திலும் மனிதக் கழிவுகளையும், பாதாள சாக்கடைகளையும் மனிதர்களே இறங்கி சுத்தம் செய்யும் மனித உரிமை மீறல் சம்பவங்கள் மட்டும் தொடர்ந்து கொண்டே இருப்பது வேதனையளிக்கிறது. இந்திய அளவில் மனிதக் கழிவுகளை சுத்தம் செய்யும் தொழிலாளர்களின் மரணத்தில் தமிழகம் முதலிடம் வகித்து வரும் அவல நிலையிலும், அதனை தடுக்கவோ, மாற்றுவழிகளை கண்டறியவோ எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளாத திமுக அரசின் அலட்சியப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது. மாநில அரசின் மூலம் கொண்டுவரப்பட்ட மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் தடைச் சட்டம் முறையாக பின்பற்றப்படவில்லை என்பதையும், அதனை அமல்படுத்த அமைக்கப்பட்ட கண்காணிப்புக் குழுவும் வெறும் காகித அளவில் மட்டுமே இருப்பதையும் அடிக்கடி நடைபெறும் இதுபோன்ற அவலச் சம்பவங்கள் வெளிச்சம் போட்டு காட்டுகின்றன. எனவே, இனியாவது மனிதக் கழிவுகளை மனிதர்களே சுத்தம் செய்வதற்கு விதிக்கப்பட்ட தடைச்சட்டத்தை தீவிரப்படுத்துவதோடு, அப்பாவி தொழிலாளர்களை இதுபோன்ற செயல்களில் ஈடுபடுத்துவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

கன்னியாகுமரி கிழக்கு மற்றும் கன்னியாகுமரி மேற்கு என கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டுவரும் மாவட்டக் கழகங்களின் நிர்வாக வசதிகளுக்காக “கன்னியாகுமரி கிழக்கு”, “கன்னியாகுமரி மத்தியம்” மற்றும் “கன்னியாகுமரி மேற்கு” என மூன்று மாவட்டக் கழகங்களாக மறுசீரமைக்கப்படுகிறது. கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட கழக செயலாளராக திரு.N.ராகவன் அவர்களும், கன்னியாகுமரி மத்திய மாவட்ட கழக செயலாளராக திரு.M.ஸ்டீபன் அவர்களும், கன்னியாகுமரி மேற்கு மாவட்ட கழக செயலாளராக திரு.A.ஸ்டெல்லஸ் அவர்களும் நியமிக்கப்படுகிறார்கள்.

ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிபெற்று பத்து ஆண்டுகளுக்கு மேல் பதவி நியமனத்திற்காக காத்திருக்கும் பட்டதாரி ஆசிரியர்கள் – நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோர் உட்பட வேலைக்காக காத்திருக்கும் அனைவருக்கும் பணி நியமன ஆணை வழங்குவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக பணி நியமனம் செய்யப்படாமல் இருக்கும் சுமார் 40 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் தமிழக அரசின் கவனத்தை ஈர்க்க பல்வேறு தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். 2013 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற தங்களை 2018 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட நியமனத் தேர்வின்றி பணி நியமனம் செய்ய வேண்டும் என்ற பட்டதாரி ஆசிரியர்களின் கோரிக்கைக்கு திமுக அரசு செவி சாய்க்காத நிலையில், நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த 410 ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்க வேண்டும் என ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கும், தமிழக அரசுக்கும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2018-ம் ஆண்டுக்கு முன்பாக பின்பற்றப்பட்ட ஆசிரியர் நியமன நடைமுறையின்படியே அப்போது நடைபெற்ற தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு விரைந்து பணி வழங்க வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவை பின்பற்றி வழக்கு தொடுத்தவர்கள் மட்டுமல்லாது 2018 ஆம் ஆண்டுக்கு முன்பாக நடைபெற்ற தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று பணிக்காக காத்திருக்கும் அனைவருக்கும் பணி நியமன ஆணை வழங்கப்பட வேண்டும் என ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நலச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. எனவே, தங்களின் பணிக்காலத்தின் பாதி காலத்தை போராட்டங்களிலேயே கழித்திருக்கும் பட்டதாரி ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்று 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக காத்திருக்கும் அனைவருக்கும் விரைந்து பணி நியமன ஆணைகளை வழங்குமாறு ஆசிரியர் தேர்வு வாரியத்தையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:
தலைமைக் கழக அலுவலகம்
எண்: 15, வெஸ்ட் காட் ரோடு, ராயப்பேட்டை,
சென்னை – 600 014
மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.