பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு கூடுதல் இழப்பீடு கோரி போராடினால் மிரட்டுவதா? – விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் அதிகாரப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது.சிவகாசியில் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு கூடுதல் இழப்பீடு வழங்க கோரி போராடிய பொதுமக்களை விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மிரட்டும் தொனியில் பேசிய வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. சிவகாசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் அடிக்கடி அரங்கேறும் பட்டாசு ஆலை விபத்துகளையும், அதன் மூலம் பறிபோகும் அப்பாவி உயிர்களையும் தடுக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்காத மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் உரிய நிவாரணம் வழங்கக்கோரி போராடும் பாதிக்கப்பட்ட மக்கள் மீது காவல்துறையின் மூலம் அடக்குமுறையை ஏவியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. சட்டம் ஒழுங்கை பேணிக்காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள காவல்துறையின் உயர் அதிகாரி ஒருவரே, பொதுமக்களை பார்த்து ”ஒழுங்காக இருந்துக்கோ இல்லைனா வேறு மாதிரி ஆகிவிடும்” என மிரட்டும் தொனியில் பேசியிருப்பது தமிழகத்தில் சமூக விரோதிகள் மட்டுமல்ல காவல்துறையினரையும் பார்த்து பொதுமக்கள் அச்சப்படும் சூழலை ஏற்படுத்தியுள்ளது. தங்களுடைய பிரச்னைகளுக்கு தீர்வு கிடைத்திடும் என நாடி வரும் பொதுமக்களின் நம்பிக்கையை காப்பாற்றிடும் வகையில் காவல்துறை செயல்பட வேண்டும் என முதலமைச்சர் அறிவுறுத்தி 24 மணி நேரம் கூட ஆகாத நிலையில், காவல் கண்காணிப்பாளர் ஒருவரே பொதுமக்களை மிரட்டும் தொனியில் பேசியிருப்பது காவல்துறை யார் கட்டுப்பாட்டில் இருக்கிறது? என்ற கேள்வியை எழுப்புகிறது.எனவே, பாதிக்கப்பட்ட மக்களின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றி அவர்களுக்கு உரிய இழப்பீடை வழங்கிட வேண்டும் எனவும், பொதுமக்களை காக்க வேண்டிய காவல்துறையினர் தங்களது பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து செயல்பட தேவையான அறிவுரையை வழங்கிட வேண்டும் எனவும் முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.

காவிரியின் குறுக்கே மேகதாது அணையை கட்டுவதற்கான அடிப்படை பணிகளை தொடங்கிய கர்நாடக அரசு – டெல்டா பகுதிகளை பாலைவனமாக்கும் கர்நாடகத்தின் செயல்பாடுகளை கூட்டணி தர்மத்திற்காக ஆதரிக்கிறதா திராவிட மாடல் திமுக அரசு?காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கான அடிப்படை பணிகள் தொடங்கிவிட்டதாக கர்நாடக மாநில துணை முதலமைச்சரும் நீர்வளத்துறை அமைச்சருமான திரு.சிவக்குமார் அவர்கள் தெரிவித்திருப்பதாக ஊடகங்களிலும் நாளிதழ்களிலும் செய்திகள் வெளியாகியுள்ளன. எங்களின் அனுமதியின்றி எந்த கொம்பனாலும் காவிரியின் குறுக்கே அணை கட்ட முடியாது என திமுக அரசு வீரவசனம் பேசிக் கொண்டிருக்கும் அதே நேரத்தில், மறுபுறம் மேகதாது அணை கட்டுமானப் பணிகளுக்கான நிலம் கணக்கீட்டு பணிகளை நிறைவு செய்து, அவற்றை கையகப்படுத்தும் நடவடிக்கைகளையும் கர்நாடக அரசு தொடங்கியிருக்கிறது.கடைமடை பாசன மாநிலங்களின் அனுமதியின்றி எந்த ஒரு இடத்திலும் புதிய அணையை கட்ட முடியாது என உச்சநீதிமன்றமும், காவிரி நடுவர் மன்றமும் தெளிவாக அறிவுறுத்திய பின்னரும் சட்டவிரோதமாக மேகதாது அணையை கட்டியேத் திருவோம் என கர்நாடக அரசு பிடிவாதம் பிடிப்பது கடும் கண்டனத்திற்குரியது. ஒவ்வொரு பாசன ஆண்டிலும் ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான மிக முக்கியமான காலகட்டத்தில் தமிழகத்திற்கு சட்டப்படி வழங்க வேண்டிய நீரை கர்நாடகத்திடம் இருந்து கேட்டுப்பெற முடியாத திமுக அரசு, இதற்கு மேலும் கூட்டணி தர்மத்திற்காக மவுனம் காத்தால், அது காவிரி டெல்டா விவசாயிகளுக்கு இழைக்கும் மாபெரும் அநீதி ஆகும்.கர்நாடக மாநில முதலமைச்சரின் பதவியேற்பு விழாவுக்கும், கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்திற்கும் ஓடோடிச் செல்லும் முதலமைச்சர், தமிழகத்திற்கு வருகை தரும் கர்நாடக மாநில துணைமுதலமைச்சரை சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கும் முதலமைச்சர், தமிழகத்தின் உயிர்நாடியான காவிரி விவகாரத்திற்காக எத்தனை முறை சந்தித்திருக்கிறார்? என்ற கேள்வி விவசாயிகள் ஒவ்வொருவர் மத்தியிலும் எழுந்துள்ளது. எனவே, காவிரி டெல்டா பகுதிகளை பாலைவனமாக்கும் கர்நாடக அரசின் முயற்சியை சட்டரீதியாக எதிர்கொண்டு முறியடிப்பதோடு, அரசியல் ரீதியாகவும் அழுத்தம் கொடுக்க வேண்டும் என முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.

திமுக அரசின் மின்கட்டண உயர்வுக்கு தமிழக தொழில்துறை கூட்டமைப்பினர் கடும் எதிர்ப்பு – தொழில் நிறுவனங்களையும் அதனை சார்ந்திருக்கும் தொழிலாளர்களையும் முடக்கும் மின்கட்டண உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.தமிழகத்தில் பெரிய கடைகள், தொழில் மற்றும் வணிக நிறுவனங்களுக்கான மின்சாரக் கட்டணத்தை 3.16 சதவிகிதத்திற்கு குறையாமல் உயர்த்தி தமிழக அரசு பிறப்பித்திருக்கும் உத்தரவு தொழில்துறையினர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மின் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை, போர்க்கால அடிப்படையில் தடையற்ற மின்சாரம், மாதம் ஒருமுறை மின் பயன் அளவீடு என தேர்தலுக்கு முன்பாக அள்ளி வீசிய வாக்குறுதிகளில் ஒன்றைக்கூட நிறைவேற்ற முன்வராத திமுக அரசு, ஆண்டுதோறும் மின் கட்டணத்தை உயர்த்திக் கொண்டே இருப்பது கடும் கண்டனத்திற்குரியது. திமுக ஆட்சிக்கு வந்த பின்பு உயர்த்தப்பட்ட மின்கட்டண உயர்வால் மட்டும் ஏராளமான சிறு, குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டு அங்கு பணியாற்றிக்கொண்டிருந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியிருக்கும் நிலையில், நடப்பாண்டிலும் மின்கட்டணத்தை உயர்த்தியிருப்பது தொழில்துறையை முற்றிலும் முடக்கும் செயலாகும்.அண்டை மாநிலங்கள் அனைத்தும் பல்வேறு சலுகைகளை வழங்கி தொழில்முனைவோருக்கு அழைப்பு விடுத்து வரும் நிலையில், தமிழக அரசோ மின்கட்டணத்தை பன்மடங்கு உயர்த்தி தொழில்முனைவோரை தமிழகத்தை விட்டு வெளியேற்றிக் கொண்டிருப்பதாக தொழில்துறை கூட்டமைப்பினர் குற்றம் சாட்டியுள்ளனர். பெரிய வணிக நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கான மின்சாரக் கட்டணம் தொடர்ந்து உயர்த்தப்படுவதன் மூலம் அன்றாடம் பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருட்களின் விலை மென்மேலும் உயர்ந்து சாமானிய பொதுமக்களை கூடுதல் சிரமத்திற்கு உள்ளாக்கும் சூழலை ஏற்படுத்தியுள்ளது. எனவே, தொழில்துறையினரை நேரடியாகவும், பொதுமக்களை மறைமுகமாகவும் பாதிக்கும் இந்த மின்கட்டண உயர்வை உடனடியாக திரும்பப் பெறுவதோடு, ஏற்கனவே இருந்த நடைமுறையே தொடர அனுமதிக்க வேண்டும் என மின்சாரத்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.