தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் அரசு உதவி வழக்கறிஞர் தேர்வில் குளறுபடியா ? – தேர்வர்களின் அரசுப் பணி கனவை சிதைக்கும் திமுக அரசின் அலட்சியப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது. தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் இன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த அரசு உதவி வழக்கறிஞர் பணியிடங்களுக்கான தேர்வில் பல்வேறு குளறுபடி ஏற்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அரசு உதவி வழக்கறிஞர் தேர்வுக்கு முறைப்படி விண்ணப்பித்த பல தேர்வர்களின் பெயர்கள் விடுபட்டிருப்பதாகவும், மதுரை, கும்பகோணம் உள்ளிட்ட பல்வேறு தேர்வு மையங்களில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக தேர்வர்கள் தேர்வெழுத முடியாத சூழல் ஏற்பட்டிருப்பதாகவும் புகார் எழுந்துள்ளது. இரண்டு ஆண்டுகளாக தலைவர் இல்லாமல் இயங்கி வந்த அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்ட நிலையில், தற்போது தலைவர் நியமிக்கப்பட்ட பின்னரும் அதே குளறுபடிகள் தொடர்வது நம்பிக்கையின்மையை ஏற்படுத்துவதாக தேர்வர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். எனவே, குளறுபடிகள் நிறைந்த அரசு உதவி வழக்கறிஞர் தேர்வை ரத்து செய்துவிட்டு, முறையான அறிவிப்பை வெளியிட்டு மறு தேர்வு நடத்த வேண்டும் என தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தையும் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

இலங்கை அதிபரின் இந்திய வருகையின் போது தமிழக மீனவர்கள் மீதான அந்நாட்டு கடற்படையின் அடக்குமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் – இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் அனைவரும் தாயகம் திரும்புவதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் . இலங்கையின் புதிய அதிபராக பொறுப்பேற்றிருக்கும் மாண்புமிகு அனுர குமார திசநாயக அவர்கள் இரண்டு நாள் பயணமாக நாளை இந்தியாவிற்கு வர இருப்பதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இலங்கை அதிபரின் இந்திய வருகையை பயன்படுத்தி நீண்ட நாட்களாக நீடித்துவரும் இலங்கை கடற்படையின் தொடர் அத்துமீறலுக்கும், அட்டூழியத்திற்கும் முடிவுகட்டி தங்களின் மீன்பிடித் தொழிலையும், வாழ்வாதாரத்தையும் பாதுகாத்திட வேண்டும் என ஒட்டுமொத்த தமிழக மீனவர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். எனவே, இருநாட்டு நல்லுறவை வலுப்படுத்தும் விதமாக இந்தியா வரும் இலங்கை அதிபரிடம் பேச்சுவார்த்தை நடத்தி இலங்கை கடற்படையின் அராஜகப்போக்கிற்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைப்பதோடு, இதுவரை அந்நாட்டு கடற்படையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் தமிழக மீனவர்களையும், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளையும் விடுவிக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வெளியுறவுத்துறையையும் மத்திய அரசையும் வலியுறுத்துகிறேன்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான திரு.ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் உடல்நலக்குறைவால் உயிரிழந்த செய்தி மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் அளிக்கிறது. சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத தலைவராக திகழ்ந்த திரு.ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

தென்மாவட்டங்களில் தொடரும் கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிப்பு – கடந்த ஆண்டு மழை பாதிப்பிலிருந்து பாடம் கற்காத திமுக அரசின் நிர்வாகத் தோல்வியே பொதுமக்களின் பாதிப்புக்கு முக்கிய காரணம். திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி உட்பட பல்வேறு தென்மாவட்டங்களில் கடந்த இரு தினங்களாக பெய்துவரும் தொடர்மழையால் அம்மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியுள்ளது. கடந்த ஆண்டு இதே மாதத்தில் பெய்த தொடர் மழையால் தாமிரபரணியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு ஏற்படுத்திய பாதிப்பிலிருந்து மீண்டு வருவதற்குள், தற்போது பெய்து வரும் கனமழை அப்பகுதி மக்களை மீளவே முடியாத அளவிற்கான துயரத்திற்கு உள்ளாக்கியுள்ளது. வானிலை ஆய்வு மையம் மூலமாக அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்ட பின்பும் கூட எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காத திமுக அரசால், ஆயிரக்கணக்கான குடியிருப்புகள் வெள்ளநீரில் தத்தளித்துக் கொண்டிருப்பதாக பாதிக்கப்பட்ட மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஒவ்வொரு பருவமழையின் போதும் குடியிருப்புகள் மற்றும் விளைநிலங்களை மழைநீர் சூழ்வதும், உடமைகளை முழுமையாக இழந்து உணவு, குடிநீர் போன்ற அத்தியாவசியத் தேவைகள் கூட கிடைக்காமல் மக்கள் போராடுவதும் வாடிக்கையாகி வருவது ஒட்டுமொத்த அரசு நிர்வாகத்தின் தோல்வியையே வெளிப்படுத்துகிறது. எனவே, மேலும் இரு தினங்களுக்கு கனமழை நீடிக்கும் என்ற வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையை முறையாக பின்பற்றி மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை துரிதப்படுத்துவதோடு, பாதிப்புக்குள்ளான மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை போர்க்கால அடிப்படையில் செய்து தருமாறு தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.