தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று ஒரே நாளில் அரங்கேறியிருக்கும் 6 படுகொலைச் சம்பவங்கள் – சட்டம் – ஒழுங்கை அதளபாதாளத்திற்கு கொண்டு சென்றிருக்கும் திமுக அரசின் அலட்சியப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது. சென்னை பெரும்பாக்கத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர், கோவையில் கூலித் தொழிலாளி, ராமநாதபுரத்தில் ஜாமினில் வெளிவந்தவர் என தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று ஒரே நாளில் 6 பேர் படுகொலை செய்யப்பட்டிருப்பதாக நாளிதழ்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன. தமிழகத்தில் சாதாரண பொதுமக்கள் தொடங்கி அரசியல் கட்சித் தலைவர்கள் வரை கூலிப்படைகள் மற்றும் அடையாளம் தெரியாத கும்பல்கள் மூலம் திட்டமிட்டு கொலை செய்யப்படும் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், அதனை கட்டுப்படுத்த எந்தவித நடவடிக்கையும் எடுக்காத காவல்துறையின் அலட்சியப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது. ஆளுங்கட்சி பிரமுகர்களின் ஆதரவோடு தமிழகத்தின் பட்டிதொட்டியெங்கும் தாராளமாக புழங்கிக் கொண்டிருக்கும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனையை கட்டுப்படுத்த தவறியதன் விளைவே இதுபோன்ற சட்டம் ஒழுங்கு சீர்கேடுகள் அரங்கேற முக்கிய காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதயதெய்வம் அம்மா அவர்களின் ஆட்சிக்காலத்தில் அமைதிப்பூங்காவாக திகழந்த தமிழகத்தில் தற்போது நாள்தோறும் அரங்கேறும் கொலை, கொள்ளை மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் பொதுமக்களுக்கு மிகுந்த அச்ச உணர்வை ஏற்படுத்தியிருப்பதோடு திமுக அரசின் நிர்வாகத் தோல்வியையும் வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. எனவே, தமிழகத்தில் அடியோடு சீர்குலைந்திருக்கும் சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளை சீர் செய்வதற்கு தேவையான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

இரண்டு மாதங்களாக ஊதியமின்றி தவிக்கும் மகளிர் பண்டக சாலையின் கீழ் இயங்கும் நியாய விலைக்கடை ஊழியர்கள் – கார் பந்தயத்திற்கும், விளம்பரத்திற்கும் நிதி ஒதுக்கிவிட்டு, நியாய விலைக்கடை ஊழியர்களுக்கு ஊதியம் வழங்காமல் அலைக்கழிப்பது தான் திராவிட மாடலா ? சென்னை பட்டினம்பாக்கம், அபிராமபுரம், மயிலாப்பூர், மந்தைவெளி உள்ளிட்ட 7 மகளிர் பண்டக சாலைகளின் கீழ் இயங்கி வரும் 59 நியாய விலைக்கடைகளில் பணியாற்றும் நூற்றுக்கும் அதிகமான ஊழியர்களுக்கு கடந்த இரண்டு மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை என நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. மகளிர் பண்டக சாலைகளின் கீழ் இயங்கும் நியாய விலைக்கடைகளுக்கு வழங்கப்பட வேண்டிய மானியத்தை முறையாக ஒதுக்காமல், அங்கிருக்கும் பொருட்களை விற்பனை செய்து அதன் மூலம் கிடைக்கும் வருவாயில் ஊதியத்தை வழங்க வேண்டும் என அறிவுறுத்தியிருக்கும் கூட்டுறவுத்துறையின் நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது. மக்களின் வரிப்பணத்தில் தனியார் கார் நிறுவனத்தின் கார் பந்தயத்தை நடத்துவதற்கும், விளம்பரம் செய்வதற்கும் பல கோடி ரூபாயை ஒதுக்கி செலவு செய்யும் திமுக அரசிடம், நியாய விலைக்கடைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க நிதி இல்லையா? என பொதுமக்களே கேள்வி எழுப்பத் தொடங்கியுள்ளனர். எனவே, மகளிர் பண்டக சாலைகளின் கீழ் சென்னையில் இயங்கி வரும் நியாய விலைக்கடைகளில் பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு நிலுவையில் உள்ள இரண்டு மாத ஊதியத்தை உடனடியாக வழங்குவதோடு, இனி வரும் காலங்களில் மாதந்தோறும் தடையின்றி ஊதியம் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu

அரசுப் பள்ளியில் தன்னம்பிக்கையூட்டும் நிகழ்ச்சி எனும் பெயரில் அரங்கேறியிருக்கும் விரும்பத்தகாத நிகழ்வுகள் – மாணவ, மாணவியர்களின் அறிவாற்றலை மேம்படுத்த வேண்டிய அரசுப் பள்ளிகளில் சர்ச்சைக்குரிய நிகழ்வுகளை அனுமதிக்க கூடாது. சென்னை அசோக்நகர் பெண்கள் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு தன்னம்பிக்கை ஊட்டுகிறோம் எனும் பெயரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேச்சாளர் ஒருவர் மாற்றுத்திறனாளிகளின் மனதை புண்படுத்தும் வகையில் பேசியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. தன்னம்பிக்கையை எதிர்கொள்ளவும், அறிவாற்றலை கூர்மைப் படுத்திக் கொள்ளவும் தேவையான கல்வியை கற்றுத்தர வேண்டிய அரசுப் பள்ளியில், இது போன்ற நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்கியிருப்பது ஏற்றுக்கொள்ளத் தக்கதல்ல. சென்னையின் முன்மாதிரிப் பள்ளியாக திகழும் அசோக்நகர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பங்கேற்ற தனிநபரின் பின்புலம் என்ன ? யாருடையை அனுமதியின் பேரில் அவர் சொற்பொழிவு நிகழ்ச்சி நடத்தினார் ? என்ற கேள்விகளுக்கு விடை தெரியும் முன்பாகவே அப்பள்ளி தலைமை ஆசிரியர் அவர்களை பணியிடை மாற்றம் செய்திருப்பது சக ஆசிரியர்கள் மத்தியிலேயே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. எனவே, இச்சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட அனைவரின் மீதும் நடவடிக்கை எடுப்பதோடு, இனி வரும் காலங்களில், பள்ளிகளில் மாணவ, மாணவியர்களுக்கு அவசியமற்ற இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்கக் கூடாது என பள்ளிக்கல்வித் துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.

மதுரை ஆவின் நிறுவனத்தில் நடைபெற்ற முறைகேடுகளை அம்பலப்படுத்திய ஊழியர் பணியிடை நீக்கம் – அரசு நிர்வாகத்தின் தவறுகளை சுட்டிக்காட்டும் ஊழியர்களின் மீது அடக்குமுறையை கையாளும் திமுக அரசின் அதிகாரப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது. உசிலம்பட்டி தாலுக்கா கோப்பம்பட்டி மொத்த பால் குளிரூட்டும் நிலையத்திலிருந்து மதுரை ஆவின் நிறுவனத்திற்கு அனுப்பப்பட்ட பாலில் தண்ணீர் கலப்படம் செய்ததை வீடியோ எடுத்து வெளியிட்ட ஊழியர் ஒருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆவின் பால் குளிரூட்டும் மையங்களில் நடக்கும் தண்ணீர் கலப்படம் தொடர்பாக எழுந்த புகார்களை விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டிய ஆவின் நிர்வாகம், அதற்கு மாறாக தவறை சுட்டிக்காட்டிய ஊழியர் மீது நடவடிக்கை எடுத்து அடக்குமுறையை கையாண்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது மதுரை மாவட்டத்தில் உள்ள 686 கிராம அளவிலான கூட்டுறவுச் சங்கங்களுக்கு பால் வழங்கும் உற்பத்தியாளர்களுக்கு பாலின் தரம் குறித்தோ, அளவு குறித்தோ உடனடி ஒப்புகைச் சீட்டு வழங்கப்படாமல் இருப்பதற்கும், இதுபோன்ற தண்ணீர் கலப்பட முறைகேடுகளுக்கும் ஆவின் உயர் அதிகாரிகள் உடந்தையாக இருப்பதாக பால் முகவர்கள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. எனவே, ஆவின் நிர்வாகத்தில் நடைபெற்ற முறைகேடுகளை சுட்டிக்காட்டிய ஊழியர் மீதான பணியிடை நீக்க உத்தரவை உடனடியாக திரும்பப் பெறுவதோடு, ஆவின் நிர்வாகத்தில் நடைபெறும் முறைகேடுகளையும் குளறுபடிகளையும் களையத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:
தலைமைக் கழக அலுவலகம்
எண்: 15, வெஸ்ட் காட் ரோடு, ராயப்பேட்டை,
சென்னை – 600 014
மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.