விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே ராமதேவன்பட்டியில் இயங்கிவந்த தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் 9 தொழிலாளர்கள் உயிரிழந்ததாக வரும் செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் அதே விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் தொழிலாளர்கள் அனைவரும் பூரண உடல்நலம்பெற்று விரைவில் வீடு திரும்ப எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக பின்பற்றாத ஆலை உரிமையாளர்களாலும், பல உயிரிழப்புகள் ஏற்பட்ட பின்னரும் விபத்துக்களை அலட்சியமாக எதிர்கொள்ளும் அரசு நிர்வாகத்தாலும் பட்டாசு ஆலைகளில் பணியாற்றும் பல்லாயிரக் கணக்கான தொழிலாளர்களின் உயிர்பாதுகாப்பு கேள்விக்குறியாகியிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே, இனியாவது ஆபத்து நிறைந்த பட்டாசு தொழிலில் உரிய சீர்திருத்தங்களை மேற்கொண்டு அத்தொழிலை மட்டுமே வாழ்வாதாரமாக கொண்டிருக்கும் தொழிலாளர்களின் உயிர் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

காவிரியின் குறுக்கே மேகதாது அணைகட்டும் பணிகளில் தீவிரம் காட்டும் கர்நாடக அரசின் பிடிவாதப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது – தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழிக்க முயற்சிக்கும் கர்நாடக அரசின் நடவடிக்கையை தடுத்து நிறுத்தி மாநில உரிமையை பாதுகாக்க வேண்டும். கர்நாடக மாநில நிதிநிலை அறிக்கையை இன்று தாக்கல் செய்த அம்மாநில முதலமைச்சர் திரு.சித்தராமையா அவர்கள், மத்திய அரசின் அனுமதியை பெற்று விரைவில் மேகதாது அணை கட்டப்படும் எனவும், அணைகட்டும் பணிகளை மேற்கொள்ள பிரத்யேக குழுக்கள் அமைக்கப்பட்டிருப்பதாகவும் கூறியுள்ளார். கடந்த பிப்ரவரி 1 ஆம் தேதி நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் உச்சநீதிமன்ற உத்தரவுக்கு முரணாக மேகதாது அணை குறித்து நடைபெற்ற விவாதத்தில் தமிழக அரசு அதிகாரிகள் பங்கேற்றது விவசாயிகளுக்கு இழைத்த மாபெரும் துரோகம் ஆகும். தமிழ்நாட்டின் ஜீவாதாரமான காவிரி நதிநீர் விவகாரத்தில், இதயதெய்வம் அம்மா அவர்கள் நடத்திய தொடர் சட்டப் போராட்டத்தினால் பெற்ற உரிமையை காக்க தவறிய திமுக அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் விவசாய சங்கங்கள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்துள்ளன. எனவே, டெல்டா மாவட்டங்களை பாலைவனமாக்க முயற்சிக்கும் கர்நாடக அரசின் நடவடிக்கையை சட்டரீதியாக தடுத்து நிறுத்துவதோடு, காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் மேகதாது அணைக்கு ஆதரவாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தையும் ரத்து செய்வதற்கான முயற்சிகளை மேற்கொள்ளுமாறு தமிழக முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:
தலைமைக் கழக அலுவலகம்
எண்: 15, வெஸ்ட் காட் ரோடு, ராயப்பேட்டை,
சென்னை – 600 014
மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.