மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்குத் திறக்கப்படும் தண்ணீர் வீணாகக் கடலில் கலக்கும் அவலம் – விவசாயத்திற்கும், விவசாயிகளுக்கும் பயனின்றி கடலில் கலக்கும் நீரை ஏரி, குளங்களில் நிரப்பி பாசனத்திற்குப் பயன்படுத்த வேண்டும்.மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காகக் கடந்த ஜூன் மாதம் 12 ஆம் தேதி திறக்கப்பட்ட தண்ணீர், தற்போது வரை கடைமடைப் பகுதிக்கு வரவில்லை எனத் தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட மாவட்ட விவசாயிகள் நேற்று நடைபெற்ற குறைதீர்ப்பு கூட்டத்தில் தங்களின் வேதனையைப் பதிவு செய்துள்ளனர். முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களால் மேட்டூர் அணையிலிருந்து திறந்து வைக்கப்பட்ட தண்ணீர் 50 நாட்களைக் கடந்தும் கடைமடைக்கு வராமல் வீணாகக் கடலில் கலக்கும் நிலையில், கடைமடை பயிர் சாகுபடி சிறப்பாக நடைபெற்று வருவதாக நீர்வளத்துறை அமைச்சர் திரு.துரைமுருகன் அவர்கள் அறிக்கை வெளியிட்டிருப்பது டெல்டா விவசாயிகள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மேட்டூர் அணையைத் திறக்கும் முன்பு காவிரி டெல்டா பகுதிகளின் கிளை ஆறுகளையும், கால்வாய்களையும் முறையாகத் தூர்வார வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கைக்குச் செவிசாய்க்காத நிர்வாகத் திறனற்ற திமுக அரசால், நடப்பாண்டிலும் டெல்டா பாசன விவசாயிகள் முழு அளவிலான சாகுபடி செய்ய முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். எனவே,காவிரி டெல்டா கிளை ஆறுகள் மற்றும் கால்வாய்களைத் தூர்வாருவதற்காக ஆண்டுதோறும் ஒதுக்கப்படும் நிதியை முறையாகப் பயன்படுத்துவதோடு, வீணாகக் கடலில் கலக்கும் உபரிநீரை ஆறு,குளங்களில் சேமித்து பாசனத்திற்குத் திருப்பி விடத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனத் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

புவியின் மேற்பரப்பு மாற்றங்களைக் கண்காணிக்க அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு அமைப்பான நாசாவுடன் இணைந்து நிசார் செயற்கைக்கோளை (NASA-ISRO Synthetic Aperture Radar) வெற்றிகரமாக விண்ணில் ஏவியிருக்கும் இஸ்ரோ விஞ்ஞானிகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இரு நாடுகளின் கூட்டு முயற்சியின் மூலம் விண்ணில் ஏவப்பட்டிருக்கும் நிசார் செயற்கைக் கோள் புவியின் சுற்றுச்சூழல் அமைப்புகள், பருவநிலை மாற்றங்கள், பேரிடர் மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு விதமான தரவுகளை வழங்கி இந்திய விண்வெளி ஆராய்ச்சிக்கு புதிய மைல்கல்லாக அமைய வாழ்த்தி மகிழ்கிறேன்.

கள்ளர் விடுதிகளின் பெயரைச்சமூகநீதி விடுதிகள் எனப் பெயர் மாற்றம் செய்த தமிழக அரசின் நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு -கள்ளர் சமூக மக்களின் கல்வி மேம்பாட்டிற்கும், முன்னேற்றத்திற்கும் தொடங்கப்பட்ட பள்ளிகளும், விடுதிகளும் அதே பெயரில் இயங்க அரசு அனுமதிக்க வேண்டும்.கள்ளர் விடுதிகளின் பெயரைச் சமூகநீதி விடுதி எனப் பெயர் மாற்றம் செய்த தமிழக அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து தேனி, திண்டுக்கல் மற்றும் மதுரை மாவட்டங்களில் முன்னாள் மாணவர் சங்கத்தினர், கள்ளர் கூட்டமைப்பினர் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.கள்ளர் சமுதாய மக்களின் கல்வி மேம்பாட்டிற்காகவும், எதிர்கால நலனுக்காகவும் உருவாக்கப்பட்ட கள்ளர் பள்ளிகளை பள்ளிக்கல்வித்துறையுடன் இணைப்பதும், விடுதிகளை சமூக நீதி விடுதிகள் எனப் பெயர் மாற்றம் செய்வதும் அதன் தனித்துவத்தை இழக்கும் என்பதோடு அவர்களின் வாழ்வியல் நடைமுறையை மாற்றும் நடவடிக்கையாக அமையும் என அவர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.தேனி, திண்டுக்கல் மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களில் செயல்பட்டு வரும் நூற்றுக்கும் அதிகமான அரசு கள்ளர் விடுதிகளில் தங்கி கல்வி பயிலும் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவியர்களுக்கான அடிப்படை வசதிகளைக் கூடச் செய்து தர முன்வராத திமுக அரசு, அவற்றின் பெயரை மாற்றத் தன்னிச்சையாக முடிவு செய்து அறிவித்திருப்பது அச்சமூக மக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.சேதமடைந்த கட்டடங்கள், தரமற்ற உணவு, சுகாதாரமற்ற இருப்பிடம் என அவலமாகக் காட்சியளிக்கும் விடுதிகளைச் சீரமைக்க வேண்டும் என்ற பல ஆண்டு கோரிக்கைகளைக் கண்டு கொள்ளாத திமுக அரசு, விடுதிகளின் பெயர்களை மட்டும் சமூகநீதி விடுதிகள் என மாற்றுவதால் எந்தவித மாற்றமும் ஏற்படப் போவதில்லை என மாணவ, மாணவியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். எனவே, கள்ளர் சமுதாய மக்கள் முன்னேற்றத்திற்காகத் தொடங்கப்பட்ட பள்ளிகளும், விடுதிகளும் அதே பெயரிலேயே தொடர்ந்து செயல்பட அனுமதி வழங்குவதோடு, அவ்விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கான அடிப்படை வசதிகளை முழுமையாக ஏற்படுத்தித் தர வேண்டும் எனத் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.