அன்பின் வடிவமாக, மகிழ்ச்சியின் ஊற்றாக, கள்ளங்கபடமற்ற உள்ளங்களாக, எதிர்கால இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரங்களாக திகழும் குழந்தைகளின் நலன், கல்வி மற்றும் வளர்ச்சியை உறுதி செய்யும் வகையில் கொண்டாடப்படும் குழந்தைகள் தினம் இன்று. குழந்தைகளின் நல்வாழ்வுக்கும், சமச்சீரான வளர்ச்சிக்கும் இடையூறுகளாக இருக்கும் அத்தனை தடைகளையும் தகர்த்தெறிந்து, அன்பு மற்றும் அரவணைப்போடு, அவர்களின் எதிர்காலம் சிறக்க அனைத்து வழிகளிலும் உறுதுணையாக இருக்க நாம் அனைவரும் இந்நாளில் உறுதியேற்போம்.

தீபாவளி போனஸாக வழங்கிய தொகையை ஊதியத்தில் பிடித்தம் செய்வதா ? தூய்மைப் பணியாளர்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்த தொகையை உடனடியாக விடுவிக்க வேண்டும். தீபாவளி பண்டிகைக்கு வழங்கிய போனஸ் தொகையை நடப்பு மாத ஊதியத்தில் பிடித்தம் செய்துவிட்டதாகக் கூறி தூத்துக்குடி மாநகராட்சியைச் சேர்ந்த தூய்மைப் பணியாளர்கள் வேலைநிறுத்தம் அறிவித்து போராட்டம் நடத்தி வருவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. தூய்மைப் பணிகளைத் தனியார் மயமாக்க எதிர்ப்பு, ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தின் தூய்மைப் பணியாளர்கள் போராடி வரும் நிலையில், தீபாவளி போனஸாக வழங்கப்பட்ட தொகையை ஊதியத்தில் பிடித்தம் செய்திருப்பது மனிதாபிமானமற்ற செயலாகும். சென்னை மாநகராட்சி தொடங்கி, கோவை, திருப்பூர், மதுரை, தூத்துக்குடி என பல்வேறு பகுதிகளில் தங்களின் வாழ்வாதாரத்திற்காகப் போராடிக் கொண்டிருக்கும் தூய்மைப் பணியாளர்களை அடக்கி ஒடுக்குவதும், அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்வதும் தொடர்கதையாகி வருவதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. எனவே,கோவிட் பெருந்தொற்று காலம் தொடங்கி மழை, வெள்ளம், புயல் என அத்துனை இயற்கை பேரிடர்களையும் எதிர்கொண்டு நகரத்தைத் தூய்மையாக வைத்திருக்கவும், மக்களின் சுகாதாரத்தைப் பேணிக்காக்கும் பணியிலும் அயராது பாடுபட்டுவரும் தூய்மைப் பணியாளர்களிடம் பிடித்தம் செய்த தொகையை உடனடியாக விடுவிப்பதோடு, அவர்களின் நீண்டகால கோரிக்கையான பணிநிரந்தர கோரிக்கையை நிறைவேற்றித் தந்திட வேண்டும் எனத் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

நெல் உள்ளிட்ட பயிர்களுக்குக் காப்பீடு செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க விவசாயிகள் கோரிக்கை – 15ஆம் தேதியுடன் நிறைவடையும் கால அவகாசத்தை நவம்பர் 30 வரை நீட்டிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.பிரதமரின் பயிர்க்காப்பீடு திட்டத்தின் கீழ் நெல் உள்ளிட்ட 11 வகையிலான பயிர்களுக்குக் காப்பீடு செய்வதற்கான கால அவகாசம் வரும் 15 ஆம் தேதியுடன் நிறைவடைய இருக்கும் நிலையில், கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கை விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது. தீபாவளி, ஆயுதபூஜை உள்ளிட்ட பண்டிகைகளுக்கான தொடர் விடுமுறையின் காரணத்தாலும், காவிரி டெல்டா மாவட்டங்களில் பெய்த தொடர் மழையாலும் ஏராளமான  விவசாயிகள் தங்களின் பயிர்களுக்குக் காப்பீடு செய்ய முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர்.பயிர்காப்பீடு செய்வதற்கான அடங்கல் உள்ளிட்ட பல்வேறு சான்றிதழ்களை வழங்க வேண்டிய வருவாய் நிர்வாக அலுவலர்களும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதால் விவசாயிகளுக்கு பல்வேறு சிக்கல்களையும், காலதாமதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. எனவே, விவசாயிகளின் நலன் கருதி பிரதமரின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசத்தை நவம்பர் 30 ஆம் தேதிவரை நீட்டிக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மத்திய மாநில அரசுகளை வலியுறுத்துகிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.