பணிச்சுமையை அதிகரிப்பதாக கூறி வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை புறக்கணித்த வருவாய்த்துறை ஊழியர்கள் – பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருப்பதால் பாதிப்புக்குள்ளாகியிருக்கும் பொதுமக்கள். பழைய ஓய்வூதியத் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ சங்கத்தினர் இன்று ஒருநாள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், பணிச்சுமை அதிகளவில் இருப்பதாக கூறி வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை வருவாய்த் துறை சங்கங்களும் முழுமையாக புறக்கணித்துள்ளன. அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நீண்டகால கோரிக்கையான பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி, பல்வேறுகட்ட கவன ஈர்ப்பு போராட்டங்கள் நடத்தியும் எந்தவித நடவடிக்கைகையும் தமிழக அரசு மேற்கொள்ளாததே, வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளியிருப்பதாக ஜாக்டோ ஜியோ சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். அதே போல, உரிய திட்டமிடல் மற்றும் போதிய பயிற்சியில்லாமல் தொடங்கப்பட்ட வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளில் விடுமுறை தினத்தன்றும் கட்டாயப்படுத்தி ஈடுபட வைப்பதால் பணிச்சுமையோடு மன உளைச்சலும் அதிகரித்திருப்பதாக வருவாய்த் துறை ஊழியர்கள் தங்களின் வேதனையையும், ஆதங்கத்தையும் பதிவு செய்துள்ளனர். கிராம உதவியாளர்கள் தொடங்கி, நிர்வாக அலுவலர்கள், ஆய்வாளர்கள், வாட்டாட்சியர்கள் வரை அனைத்து நிலை வருவாய்த்துறை அலுவலர்களும் தங்களின் பணிகளை புறக்கணித்திருக்கும் நிலையில், மறுபுறம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருப்பதால் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளோடு அரசின் சேவைகளை பொதுமக்கள் பெறுவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் பிரதான கோரிக்கையான பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை உடனடியாக தொடங்குவதோடு, வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளில் ஈடுபட்டிருக்கும் வருவாய்த்துறை ஊழியர்களுக்கு முறையான பயிற்சி வழங்கி, அவர்களுடைய பணிச்சுமையை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

சேலம் ஜவுளிப் பூங்காவில் சாயப்பட்டறை ஆலை அமைக்கும் முடிவுக்கு எதிராக விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தொடர் போராட்டம் – நீர்நிலைகளோடு நிலத்தடி நீர்மட்டத்தையும் பாதிக்கும் சாயப்பட்டறை ஆலை அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும். சேலம் மாவட்டம் ஜாகீர் அம்மா பாளையத்தில் சுமார் 800 கோடி ரூபாய் செலவில் அமையவிருக்கும் ஒருங்கிணைந்த ஜவுளிப்பூங்கா வளாகத்தில் சாயப்பட்டறை ஆலை அமைக்கும் முடிவுக்கு எதிராக அப்பகுதி மக்கள் ஒன்று திரண்டு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மாவட்டத்தின் வளர்ச்சியோடு, உள்ளூர் மக்களுக்கான வேலைவாய்ப்பும் பெருகும் என்பதால் ஜவுளிப்பூங்கா அமைக்கும் திட்டத்தை வரவேற்ற அப்பகுதி மக்களுக்கு, தற்போது நடைபெற்றுவரும் ஆபத்து நிறைந்த சாயப்பட்டறை ஆலை அமைக்கும் பணி கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு, பெருந்துறை, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டிருக்கும் சாயப்பட்டறை ஆலைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரால் நீர்நிலைகள் மட்டுமல்லாது நிலத்தடி நீர்மட்டமும் கடுமையாக பாதிப்பை சந்தித்து வரும் நிலையில், சேலத்தில் அமையும் இந்த சாயப்பட்டறை ஆலைகளால் அம்மாவட்டத்தின் ஒட்டுமொத்த நீர் ஆதாரமும் மாசடையக் கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சேலம் மாவட்டம் மக்கள் மற்றும் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று நீர்நிலைகள், நிலத்தடி நீர்மட்டம் மற்றும் சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய சாயப்பட்டறை ஆலை அமைக்கும் முடிவை நிரந்தரமாக கைவிட வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

நாடும், நாட்டு மக்களும் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை அடைவதற்காக சுதேசியத்தைக் கட்டியெழுப்பிய சுதந்திரப் போராட்ட வீரரும், தமிழ்ச் சமூகத்தின் நல்வாழ்வுக்காக தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்துக் கொண்ட மாமனிதருமான செக்கிழுத்தச் செம்மல் வ.உ.சிதம்பரனார் அவர்களின் நினைவுதினம் இன்று. வழக்கறிஞராக, எழுத்தாளராக, தொழிற்சங்க தலைவராக, ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தின் அடக்குமுறையையும், அவர்கள் கொண்டுவந்த கொடூரமான சட்டங்களையும் எதிர்த்து இறுதிவரை போராடி உயிர்நீத்த தியாகி வ.உ.சிதம்பரனார் அவர்களின் பன்முக ஆற்றலையும் தியாக உணர்வையும் எந்நாளும் போற்றி வணங்கிடுவோம்.

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.