மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாட ஏதுவாக பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரொக்கப் பணமும் வழங்குமாறு தமிழக அரசை வலியுறுத்துகிறேன். கடந்த ஆண்டு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்ட மக்கள் மழை, வெள்ளத்தாலும், காவிரி நீரை உரிய நேரத்தில் பெற முடியாத காரணத்தினால் டெல்டா பகுதிகளைச் சேர்ந்த பெருமளவு விவசாயிகளும் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு சார்பில் அறிவிக்கப்பட்ட ரூ.6000 நிவாரணத் தொகை, பலருக்கு கிடைக்கப்பெறவில்லை என்றும், டோக்கனில் தொடங்கி ரொக்கப் பணம் வழங்குவது வரை ஆளுங்கட்சியினரின் தலையீடு இருந்ததால் முறைகேடு நடந்திருக்க வாய்ப்பிருப்பதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்த நேரத்தில், தமிழக அரசு சார்பாக அறிவிக்கப்பட்டுள்ள பொங்கல் பரிசுத் தொகுப்பில் ரொக்கப் பணம் வழங்குவது குறித்து எவ்வித அறிவிப்பும் இடம்பெறாதது எதிர்பார்த்து காத்திருந்த மக்கள் அனைவருக்கும் மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, அரசு சார்பாக வழங்கப்படும் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரொக்கப் பணம் வழங்குவதோடு, மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு விநியோகம் செய்ய ஒதுக்கப்பட்ட நிவாரணத் தொகை முழுவதும் பொங்கல் பண்டிகைக்கு முன்பாகவே முறையாக சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும் என தமிழக முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

சென்னையில் அளவு குறைவான ஆவின் பால் பாக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டிருப்பதாக எழுந்திருக்கும் புகார் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன். சென்னை மாநகர் மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இன்று காலை விநியோகம் செய்யப்பட்ட ஆவின் பச்சை நிற பால் பாக்கெட்டுகளின் எடையளவு மிகவும் குறைவாக இருப்பதாக நுகர்வோர் மத்தியில் புகார் எழுந்துள்ளது. 518 முதல் 520 கிராம் வரை இருக்க வேண்டிய ஒவ்வொரு பால் பாக்கெட்டுகளும் சுமார் 70 கிராம் வரை குறைவான எடையில் விநியோகம் செய்யப்பட்டிருப்பதாகவும், இந்த நிலை தொடர்ந்தால் ஆவின் நிர்வாகத்தில் மிகப்பெரிய ஊழலுக்கு வழிவகுக்கும் என பால் முகவர்கள் சங்கத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். எனவே, அளவு குறைவான ஆவின் பால் பாக்கெட்டுகள் விநியோகம் செய்யப்பட்ட புகார் மீது உரிய விசாரணை நடத்தி கவனக்குறைவாக செயல்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதோடு, வரும் காலங்களில் இது போன்ற தவறுகள் நடைபெறாத வகையில் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டும் பால் பாக்கெட்டுகளின் எடை சரியான அளவு இருப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் ஆவின் நிர்வாகத்தையும் தமிழக அரசையும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்

நாடெங்கும் உரம், ஊட்டச்சத்து, மருந்து என பயிரோடு சேர்த்து மண்ணையும் மலடாக்கிக் கொண்டிருக்கும் காலகட்டத்தில் உழவர் பெருமக்களை சந்தித்து இயற்கை விவசாயம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திய வேளாண் விஞ்ஞானி ஐயா நம்மாழ்வார் அவர்களின் நினைவு தினம் இன்று.நமது பாரம்பரிய உழவுமுறையான பயிர்சுழற்சி உழவு மூலம் இயல்பாகவே மண்ணில் நைட்ரஜன் சத்து அதிகரிப்பதை நிரூபித்து காட்டிய ஐயா நம்மாழ்வாரின் வழியில் நாம் அனைவரும் இயற்கை விவசாயத்தை நோக்கிய பாதையில் பயணிக்க இந்நாளில் உறுதியேற்போம்.

கழகம்

அலுவலகம்

முகவரி:
தலைமைக் கழக அலுவலகம்
எண்: 15, வெஸ்ட் காட் ரோடு, ராயப்பேட்டை,
சென்னை – 600 014
மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.