திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியில் தனியார் ஒருவர் நடத்திய நிகழ்வில் இலவச வேஷ்டி சேலை பெறுவதற்காக டோக்கன் வாங்க குவிந்த பெண்களில் 4 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்திருப்பது வேதனையளிக்கிறது. முன்அனுமதி பெற்று நிகழ்வு நடந்தபோதிலும் காவல்துறையினர் அதிக அளவு கூட்டம் குவிந்ததை கட்டுப்படுத்த தவறியது கண்டிக்கத்தக்கது. உயிரிழந்த பெண்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதோடு, அலட்சியமாக செயல்பட்ட காவல்துறையினர் மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

வசீகரிக்கும் குரலால் தமிழர்களின் மனதைக் கட்டிப் போட்ட பிரபலப் பின்னணிப் பாடகி வாணி ஜெயராம் மறைந்த செய்தி அறிந்து அதிர்ச்சியடைந்தேன். புரட்சித்தலைவர் பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர், புரட்சித்தலைவி அம்மா அவர்கள் நடித்த திரைப்படங்களில் பாடி சிறப்பு சேர்த்தவர். அண்மையில் அவருக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் எதிர்பாராத விதமாக உயிரிழந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவால் வாடும் குடும்பத்தினர், உற்றார் உறவினர் மற்றும் ரசிகர்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

டெல்டா மாவட்டங்களில் பெய்துவரும் கனமழையின் காரணமாக அறுவடைக்கு தயாராகி வரும் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி வீணாகியுள்ளன. ஏற்கனவே, வடகிழக்கு பருவமழையினால் சம்பா சாகுபடி ஒரு மாத காலம் தாமதமான நிலையில் மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்பட்ட நீரும் நிறுத்தப்பட்டது. எனவே, பயிரிடப்பட்ட சம்பா நெற்பயிர்கள் போதிய நீர் இல்லாததால் அறுவடை செய்ய முடியாத சூழல் ஏற்பட்டிருந்த நிலையில் தற்போது பெய்து வரும் கனமழையின் காரணமாக நெற்பயிர்கள் நீரில் மூழ்கி விவசாயிகளுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், போதிய கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படாததால் தேக்கிவைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகளும் மழையில் நனைந்து வீணாகியுள்ளது. ஆகவே, பாதிக்கப்பட்ட இடங்களில் முறையான ஆய்வை உடனடியாக மேற்கொண்டு விவசாயிகளுக்கான உரிய இழப்பீட்டை தமிழ்நாடு அரசு வழங்கிட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

கடந்த ஆண்டு மேட்டூர் அணையிலிருந்து மே 24ஆம் நாள் பாசனத்திற்காக நீர் திறந்தபொழுதும், மழை வெள்ள பாதிப்புகளால் சம்பா சாகுபடி ஒரு மாத காலம் தாமதமாக தொடங்கியதால் பயிர்கள் இன்னும் அறுவடைக்கு தயார் நிலையை எட்டவில்லை. இந்நிலையில் வழக்கமான நிகழ்வாக ஜனவரி 28ஆம் தேதியே தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டிருப்பது, டெல்டா விவசாயிகளை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது. சம்பா சாகுபடி நிறைவடையாத நிலையில், சுமார் 2 லட்சம் ஏக்கர் விவசாய நிலம் பாதிப்புக்குள்ளாகும் என்பதால், விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று மேலும் 15 நாட்களுக்கு தண்ணீரைத் திறக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:
தலைமைக் கழக அலுவலகம்
எண்: 15, வெஸ்ட் காட் ரோடு, ராயப்பேட்டை,
சென்னை – 600 014
மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2022 AMMK. All Rights Reserved.