அரசுப் பேருந்துகளின் குறிப்பேடு பதிவை தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு மாற்றுவதா ? தாய்மொழி தமிழை புறக்கணிக்கும் திமுக அரசின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது. சென்னைப் போக்குவரத்துக் கழகத்தின் கீழ் இயங்கும் அரசுப் பேருந்துகளின் வழித்தட எண், புறப்படும் நேரம், பழுதுகள் மற்றும் குறைபாடுகள் உள்ளிட்டவற்றை குறிப்பிடும் வாகனக் குறிப்பேடு படிவம் தமிழில் இருந்து ஆங்கிலத்திற்கு மாற்றப்பட்டிருப்பதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. பல ஆண்டுகளாக தமிழில் இருந்த வாகனக் குறிப்பேடு எந்தவித முன்னறிவிப்புமின்றி திடீரென ஆங்கிலத்திற்கு மாற்றப்பட்டிருப்பதால் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு கல்வித்தகுதியில் பணிக்குச் சேர்ந்த ஓட்டுநர்களும், நடத்துனர்களும் வாகனப் பழுது மற்றும் குறைபாடு விவரங்களை எழுதுவதில் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இந்திக்கு எதிராக மேலும் ஒரு மொழிப்போரை சந்திக்கக் தயாராக இருப்பதாக வீரவசனம் பேசும் முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள், தன் சொந்த மாநிலமான தமிழ்நாட்டிலேயே தாய்மொழி தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டிருப்பதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார் ? அரசுப்போக்குவரத்துக் கழக பேருந்துகளில் பயன்படுத்தப்படும் வாகனக் குறிப்பேடுகளை கூட தமிழில் வழங்க முடியாத திமுக அரசும் அதன் முதலமைச்சர் அவர்களும், இந்திக்கு எதிராக தமிழ் காக்கும் அறப்போரில் பங்கேற்க பொதுமக்களை அழைப்பது முழுக்க முழுக்க ஏமாற்றும் செயலாகும். எனவே, ஏற்கனவே இருந்த நடைமுறையைப் பின்பற்றி அரசுப்பேருந்துகளின் ஓட்டுநர்களுக்கும், நடத்துனர்களுக்கும் வழங்கப்படும் வாகன குறிப்பேடு படிவத்தை தமிழில் மட்டுமே வழங்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும் என போக்குவரத்துத்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.

இந்திய அரசியலில் தவிர்க்க முடியாத சக்தி, தமிழக அரசியல் வரலாற்றின் தனிப்பெரும் அத்தியாயம், தமிழக மக்களின் துயர் துடைத்த தங்கதாரகை, தமிழக மக்களால் மனதார அம்மா என அழைக்கப்பட்ட வரலாற்றுத் தலைவி நம் இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பிறந்தநாள் இன்று. எத்தனை இடர்பாடுகள் குறுக்கிட்டாலும், தடைகள் பல நேரிட்டாலும் அகிலமே வியந்து பாராட்டும் அளவிற்கு எண்ணற்ற நல்ல பல திட்டங்களை செயல்படுத்தி தமிழக மக்கள் மனதில் நிரந்தரமாக குடியிருக்கும் இதயதெய்வம் அம்மா அவர்கள் பிறந்த இந்நாளில் மக்களை வஞ்சித்து ஏமாற்றும் திமுக அரசையும், சுயநலமிக்க துரோகக் கூட்டத்தையும் அடியோடு வீழ்த்திட நாம் அனைவரும் உறுதியேற்போம்.

திருப்பூரில் கணவர் கண் முன்னே கத்தி முனையில் மிரட்டி கூட்டுப்பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட இளம்பெண் – குழந்தைகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதை விட முதலமைச்சருக்கு வேறு என்ன முக்கியமான வேலை இருக்கிறது ? திருப்பூரில் இருந்து சொந்த மாநிலத்திற்கு செல்வதற்காக பேருந்து நிலையத்தில் காத்திருந்த இளம்பெண் ஒருவர், தனது கணவர் மற்றும் குழந்தையின் கண் முன்னே மூன்று பேர் கொண்ட கும்பலால் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. கோவையில் 17 வயது சிறுமி ஒருவர், தனியார் கல்லூரியைச் சேர்ந்த ஏழு மாணவர்களால் கூட்டுப் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானதாக வெளியான செய்திகள் ஏற்படுத்திய அதிர்வலைகள் அடங்குவதற்கு முன்பாகவே மேலும் ஒரு கொடூரச் சம்பவம் அரங்கேறியிருப்பது தமிழகத்தில் சட்டமும் இல்லை ஒழுங்கும் இல்லை என்பதையே வெளிச்சம் போட்டு காட்டுகிறது. குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்குவதில் பிற மாநிலங்களுக்கு முன் உதாரணமாக திகழ்ந்த தமிழகத்தில், திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பின் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் நடைபெறாத நாட்களே இல்லை என்று சொல்லும் சூழல் தான் நிலவிக் கொண்டிருக்கிறது. அப்பா… அப்பா… என யாரோ எழுதிக் கொடுத்ததை பல நாட்கள் பயிற்சி எடுத்து ஒப்புவிக்கும் நேரத்தில் தமிழகத்தில் நாள்தோறும் அரங்கேறும் சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளை களைவதில் கவனம் செலுத்தியிருந்தால் பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் பாதியளவு குறைந்திருக்கும் என பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே, இனியாவது விளம்பர மோகத்திலிருந்து வெளியே வந்து தமிழகத்தில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைச் சம்பவங்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குவதோடு, அதற்கு முதன்மைக் காரணமாக திகழும் கஞ்சா உள்ளிட்ட கொடிய வகைப் போதைப்பொருட்களை அடியோடு ஒழித்திடுவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.