என்.எல்.சி நிறுவனத்தின் பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்யும் முடிவை தடுத்து நிறுத்திய பெருமை இதயதெய்வம் அம்மா அவர்களையே சாரும் – வரலாற்றை மாற்றித் திரிக்க முயற்சிக்கும் முதலமைச்சரின் அறிக்கை கடும் கண்டனத்திற்குரியது. நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் சங்க அங்கீகாரத்திற்கான தேர்தல் இன்று நடைபெறும் நிலையில், மத்திய அரசு என்.எல்.சி பங்குகளை விற்று தனியார் மயத்தை புகுத்த முயற்சித்த நேரத்தில் திமுக எடுத்த நடவடிக்கையால் அது தடுத்து நிறுத்தப்பட்டதாக முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் தன் அறிக்கையின் மூலம் உலக மகா பொய்யை மக்கள் மத்தியில் பரப்ப முயற்சி செய்திருக்கிறார். இந்தியாவின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிப்பதோடு, கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக எரிசக்தித் துறையில் அளப்பரிய சாதனைகளை படைத்துக் கொண்டிருக்கும் என்.எல்.சி நிறுவனத்தின் பங்குகளை கடந்த 2013 ஆம் ஆண்டு தனியாருக்கு விற்பனை செய்ய முன்வந்த அப்போதைய மத்திய காங்கிரஸ் அரசின் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்திய பெருமைக்குரியவர் இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் மட்டுமே என்பதை அந்நிறுவனத்தில் பணியாற்றும் ஒவ்வொரு தொழிலாளர்களும் நன்கு அறிவர். தமிழக மக்களின் உயிரோடும் உணர்வோடும் கலந்திட்ட நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் பங்குகளை 2013 ஆம் ஆண்டு தனியாருக்கு விற்பனை செய்ய முன்வந்த போது காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் அங்கம் வகித்து கள்ள மவுனம் காத்த திமுக, தற்போது அதனை தடுத்து நிறுத்தியது நாங்கள் தான் என தம்பட்டம் அடிப்பது முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் செயலாகும். 2013 ஆம் ஆண்டு மத்திய காங்கிரஸ் ஆட்சியில் திமுக அங்கம் வகித்த போது மட்டுமல்ல, அதற்கு முன்பாக 2003, 2006 காலகட்டங்களிலும் என்.எல்.சி நிறுவனத்தின் பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்ய மத்திய அரசு முயன்ற போதெல்லாம் தன்னுடைய துணிச்சலான நடவடிக்கைகளால் அவற்றை தடுத்து நிறுத்தியதோடு, என்.எல்.சி யின் பங்குகளை தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்களின் மூலம் வாங்கிய பெருமை புரட்சித்தலைவி அம்மா அவர்களையே சாரும் என்பதை எவராலும் மறுக்க முடியாது. எனவே, தான் செய்த துரோகங்களை மறைக்க வரலாற்றை மாற்றித் திரிக்க பார்க்கும் திமுகவிற்கு இன்று நடைபெறும் என்.எல்.சி சங்க அங்கீகார தேர்தலில் அந்நிறுவன தொழிலாளர்கள் மட்டுமல்லாது அடுத்து வரும் சட்டமன்றத் தேர்தலில் ஒட்டுமொத்த தமிழக மக்களும் தகுந்த பாடத்தை புகட்டுவார்கள் என்பதை தெரிவித்து கொள்கிறேன்.

ஜம்மு – காஷ்மீரின் பகல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நிகழ்த்திய துப்பாக்கிச் சூட்டில் 20 க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்திருப்பதாகவும் பலர் காயமடைந்திருப்பதாகவும் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த சுற்றுலா பயணிகளின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்ளும் இதே நேரத்தில், இந்த தாக்குதலை நடத்தியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, ஜம்மு – காஷ்மீருக்கு சுற்றுலா செல்லும் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்துகிறேன்.

நியாய விலைக்கடை பணியாளர்களின் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தால் பொதுமக்கள் பாதிப்பு – நியாய விலைக்கடை பணியாளர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற மறுக்கும் திமுக அரசின் சர்வாதிகாரப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது. நியாய விலைக்கடை ஊழியர்களுக்கு கல்வித் தகுதிக்கேற்ப ஊதியம், தரமான பொருட்களை சரியான எடையில் வழங்க வேண்டும் உள்ளிட்ட 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நியாய விலைக்கடை பணியாளர்கள் மூன்று நாள் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தை இன்று தொடங்கியிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. நீண்டநாள் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள நியாய விலைக்கடை பணியாளர்களின் பிரதிநிதிகளை அழைத்துப் பேச வேண்டிய அரசு நிர்வாகம், அவர்களுக்கு ஊதியம் வழங்கப்படாது என சர்வாதிகார போக்கில் எச்சரிக்கை விடுத்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
தமிழகம் முழுவதும் நடைபெறும் நியாய விலைக்கடை பணியாளர்களின் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தால் ஏழை, எளிய நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களுக்கு தேவையான அன்றாட, அத்தியாவசிய மிக்க உணவுப் பொருட்களை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே, தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நியாய விலைக்கடை பணியாளர்களின் பிரதிநிதிகளை அழைத்துப் பேசி அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதோடு, இந்த வேலை நிறுத்தத்தால் பொதுமக்கள் பாதிக்கப்படாத வகையில் மாற்று ஏற்பாடுகளை உடனடியாக செய்திடுமாறும் தமிழக அரசை வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu

பகுதிநேர ஆசிரியர்களுக்கு திமுக அளித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற மறுப்பது கடும் கண்டனத்திற்குரியது – பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்ற அறிவிப்பை நடப்பு சட்டமன்றக் கூட்டத் தொடரிலேயே முதலமைச்சர் அறிவிக்க வேண்டும். தமிழகம் முழுவதும் பல்வேறு அரசுப்பள்ளிகளில் பணிபுரிந்து வரும் சுமார் 12 ஆயிரம் ஆசிரியர்கள், தங்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி பல்வேறு கட்ட போராட்டங்களை தொடர்ந்து முன்னெடுத்து வருவதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. பள்ளிக்கல்வித்துறையில் தற்போது பகுதிநேர ஆசிரியர்களாக பணிபுரிந்துவரும் ஓவியம், இசை மற்றும் உடற்பயிற்சி ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்ற தேர்தல் வாக்குறுதியை ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகள் நெருங்கும் தருவாயிலும் அவர்களின் வாழ்வாதார கோரிக்கையை நிறைவேற்ற மறுப்பது கடும் கண்டனத்திற்குரியது. ஒவ்வொரு முறை போராட்டத்தை முன்னெடுக்கும் போதும், பேச்சுவார்த்தைக்கு அழைத்துப் பேசி, கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக வாக்குறுதியளிக்கும் திமுக அரசு, தற்போது வரை அந்த கோரிக்கைகளில் ஒன்றைக்கூட நிறைவேற்றாமல் காலம் தாழ்த்தி ஏமாற்றுவது பகுதிநேர ஆசிரியர்களுக்கு இழைக்கும் மாபெரும் துரோகம் ஆகும். போனஸ், வருங்கால வைப்பு நிதி, குடும்ப நல நிதி, மருத்துவக் காப்பீடு என தமிழக அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் எந்தவித சலுகைகளோ, பணப்பலன்களோ கிடைக்காத காரணத்தினால் அரசுப்பள்ளிகளில் பணிபுரியும் சுமார் 12 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, பகுதிநேர ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்று அவர்களை பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியத்தை வழங்குவதற்கான அறிவிப்பை தற்போது நடைபெற்று வரும் சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே அறிவிக்க வேண்டும் என முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.