இதயதெய்வம் அம்மா அவர்களின் தொலைநோக்குத் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்ள முயற்சிக்கும் திமுக அரசின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது – ஏழை, எளிய மக்களின் நலனுக்காக தொடங்கப்பட்ட அம்மா மருந்தகங்கள் தொடர்ந்து செயல்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். பொதுப்பெயர் வகை ( Generic ) மருந்துகளையும், பிற மருந்துகளையும் குறைந்த விலையில் விற்பனை செய்யும் வகையில் தமிழகம் முழுவதும் பொங்கல் திருநாளன்று ஆயிரம் முதல்வர் மருந்தகங்கள் திறக்கப்படும் என தமிழக முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், தன் சுதந்திர தின உரையில் கூறியிருப்பது வேடிக்கையானது. அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் ஏழை, எளிய மற்றும் நடுத்தர குடும்ப மக்களின் நலனுக்காக இதயதெய்வம் அம்மா அவர்களால் கடந்த 2014 ஆம் ஆண்டில் தொடங்கிவைக்கப்பட்ட அம்மா மருந்தகங்களை மூடிவிட்டு முதல்வர் மருந்தகம் எனும் பெயரில் ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்ள முயற்சிப்பது கடும் கண்டனத்திற்குரியது. புரட்சித் தலைவி அம்மா அவர்களின் தொலைநோக்கு சிந்தனையுடன் கொண்டுவரப்பட்ட தாலிக்குத் தங்கம், தொட்டில் குழந்தைத் திட்டம், மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி, அம்மா உணவகம் உள்ளிட்ட எண்ணற்ற திட்டங்களின் வரிசையில் அம்மா மருந்தகங்களையும் மூட முயற்சிப்பது திமுக அரசின் அப்பட்டமான அரசியல் காழ்ப்புணர்ச்சியையே வெளிப்படுத்துகிறது. ஆட்சிப்பொறுப்பேற்ற மூன்றாண்டுகளில் மக்கள் நலனுக்காக எந்தவித திட்டங்களையுமே முறையாக, முழுமையாக செயல்படுத்தாத திமுக அரசு, தள்ளுபடி விலையில் தரமான மருந்துகளை விற்பனை செய்யும் நோக்கில் அம்மா அவர்களால் தொடங்கப்பட்ட அம்மா மருந்தகங்களையும் மூட துடிப்பது மக்கள் நலனுக்கு எதிரான முடிவாகும். எனவே, மக்கள் நலனை மட்டுமே குறிக்கோளாக கொண்டு தொடங்கப்பட்ட அம்மா மருந்தகங்களை மேம்படுத்துவதோடு, அதன் மூலம் ஏழை, எளிய நடுத்தர குடும்ப மக்களுக்கு மலிவான விலையில் தரமான மருந்துகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

தஞ்சாவூர் அருகே கஞ்சா போதைக் கும்பலால் கூட்டு பாலியல் வன்கொடுமைக்குள்ளான இளம்பெண் – குற்றவாளிகள் யாராக இருப்பினும் பாரபட்சமின்றி கடுமையான நடவடிக்கை எடுப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் இளம்பெண் ஒருவர் அவரின் சொந்த ஊரான தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டிற்கு வருகை தந்திருந்த போது அங்கிருந்த கஞ்சா போதைக் கும்பலால் மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன. பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ள நால்வரில், முதல் குற்றவாளியான கவிதாசன் என்பவர் விளையாட்டுத்துறை அமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்களின் நற்பணி மன்ற நிர்வாகி என சமூக வலைத்தளங்களில் தகவல் பரவிவரும் நிலையில், கைதான மற்றவர்கள் மீதும் ஏற்கனவே கொலை உள்ளிட்ட வழக்குகள் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளன. ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி போதைப் பொருள் கடத்தலில் தொடங்கி, பாலியல் வன்கொடுமை வரை தமிழகத்தில் அரங்கேறும் பல்வேறு குற்றச்சம்பவங்களுக்கும் திமுகவினருக்குமான தொடர்பு நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், அதனை கண்டும் காணாமல் கடந்து செல்லும் திமுக தலைமையின் அலட்சியப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது. தமிழகத்தில் அடிக்கடி அரங்கேறும் கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள், போதைப் பொருட்களின் தாராளப் புழக்கம் குறித்து பலமுறை சுட்டிக்காட்டியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத திமுக அரசால், தற்போது இளம்பெண் ஒருவரை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்யும் அளவிற்கான துணிச்சலை போதைக் கும்பலுக்கு ஏற்படுத்தியுள்ளது. எனவே, இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தவர்கள் யாராக இருப்பினும் அவர்கள் மீது எந்தவித பாரபட்சமுமின்றி கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, இனியாவது சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளில் கூடுதல் கவனம் செலுத்தி பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என தமிழக முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.

விழுப்புரம் அருகே அரசின் செயல்பாடுகளை விமர்சித்த பள்ளி மாணவர் மீது கொடூரத் தாக்குதல் – அடக்குமுறையை கையாளும் திமுகவினரின் அராஜகப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே சேதமடைந்த சாலைகளை சுட்டிக்காட்டி அரசை விமர்சனம் செய்த 12 ஆம் வகுப்பு பள்ளி மாணவர் மீது அப்பகுதி திமுகவினர், கொடூரத் தாக்குதல் நடத்தியிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன. ஆட்சிப் பொறுப்பேற்ற மூன்றாண்டுகளில் தமிழகமெங்கும் குண்டும் குழியுமாக சேதமடைந்திருக்கும் சாலைகளை சீரமைக்கவோ, மேம்படுத்தவோ திமுக அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்காத நிலையில், சாலையின் தரம் குறித்து விமர்சனம் செய்த பள்ளி மாணவரை கண்மூடித்தனமாக தாக்கியிருக்கும் திமுகவினரின் அராஜகப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது. அரசு நிர்வாகத்தின் குறைகளை சுட்டிக்காட்டும் போது அதனை நிவர்த்தி செய்ய முன்வராமல், புகார் கூறுவோர்கள் மீது தாக்குதல் நடத்தி அடக்குமுறையை கையாள்வதன் மூலம் இது எந்த கொம்பனாலும் குறை சொல்ல முடியாத ஆட்சியா ? இல்லை குறையை சொல்லவே விடாத ஆட்சியா? என்ற சந்தேகத்தை எழுப்புகிறது. எனவே, பள்ளி மாணவரை தாக்கிய திமுகவினர் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, இனிவரும் காலங்களில் இதுபோன்ற அராஜகப் போக்கில் ஈடுபடாத வகையில் திமுகவினருக்கு உரிய அறிவுரைகளை வழங்க வேண்டும் என முதலமைச்சரும் திமுக தலைவருமான திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.

விருதுநகர் அருகே தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் இருவர் உயிரிழப்பு – ஏழைத் தொழிலாளர்களின் உயிரைப் பறிக்கும் பட்டாசு ஆலை விபத்துக்களுக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைப்பது எப்போது? விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மாயத்தேவன்பட்டியில் இயங்கிவரும் தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், அங்கு பணியாற்றிவந்த இரு தொழிலாளர்கள் உயிரிழந்திருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த வருத்தத்தையும், வேதனையையும் ஏற்படுத்துகின்றன. தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றாமலும், முறையான உரிமம் பெறாமலும் இயங்கி வரும் தனியார் பட்டாசு ஆலைகளில் ஏற்படும் விபத்துக்களும், அதில் சிக்கி அப்பாவி தொழிலாளர்கள் உயிரிழப்பதும் தொடர்கதையாகி வருகிறது. விதிகளை மீறி இயங்கும் பட்டாசு ஆலைகளால் ஏற்படும் உயிரிழப்புகள் குறித்து பலமுறை சுட்டிக்காட்டியும், எந்தவித நடவடிக்கையும் எடுக்காத திமுக அரசால், பட்டாசுத் தொழிலை நம்பியிருக்கும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களின் உயிர் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. எனவே, இனியும் அலட்சியும் காட்டாமல், தமிழகம் முழுவதும் உள்ள பட்டாசு ஆலைகளிலும் உரிய ஆய்வுகளை மேற்கொள்வதோடு, இனி வரும் காலங்களில் இதுபோன்ற விபத்துக்கள் ஏற்படா வண்ணம் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.