நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்னதாகவே தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்த வேண்டும் – தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வரும் அரசு ஊழியர்களின் நீண்டகால கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசு முன்வர வேண்டும். மத்திய அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் விலைவாசி உயர்வை ஈடுசெய்யும் வகையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி 46 சதவிகிதத்திலிருந்து 50 சதவிகிதமாக உயர்த்தி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தலுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், தமிழக அரசு கடந்த காலங்களை போல காலம் தாழ்த்தாமல் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி உயர்வுக்கான அறிவிப்பை உடனடியாக வெளியிட வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டம், சமவேலைக்கு சம ஊதியம், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வரும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு கூட தமிழக அரசு செவிசாய்க்க மறுப்பது கடும் கண்டனத்திற்குரியது. எனவே, மக்களவை தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பாகவே தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி ஜனவரி 1 ஆம் தேதி முதல் கணக்கிட்டு வழங்குவதோடு, தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்களை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற முன்வர வேண்டும் என தமிழக முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.

புதுச்சேரி மாநிலம் முத்தியால்பேட்டையில் மாயமான சிறுமி படுகொலை செய்யப்பட்ட நிலையில் கழிவுநீர் வாய்க்காலில் சடலமாக மீட்கப்பட்டிருக்கும் செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. குற்றச் சம்பவங்களை முன்கூட்டியே தடுத்து நிறுத்துவதில் கவனம் செலுத்த வேண்டிய காவல்துறை, பெற்றோர்கள் புகார் அளித்த பின்பும் அலட்சியமாக செயல்பட்டதே சிறுமியின் கொலைக்கு காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். புதுச்சேரி மாநிலம் முழுவதுமே அண்மைக்காலமாக கஞ்சா மற்றும் போதைப் பொருட்களின் பயன்பாடு அதிகரித்து வருவதன் விளைவே இதுபோன்ற குற்றச்சம்பவங்கள் அடிக்கடி அரங்கேறுவதற்கு வாய்ப்பாக அமைந்திருப்பதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்துள்ளனர். எனவே, இதுபோன்ற நிகழ்வுகள் வருங்காலத்தில் நிகழாமல் இருக்க மாநிலம் முழுவதும் கண்காணிப்பை தீவிரப்படுத்தி போதைப் பொருட்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவதோடு, சிறுமியின் படுகொலைக்கு காரணமான குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையான தண்டனை பெற்றுத்தர வேண்டும் எனவும் புதுச்சேரி மாநில அரசை வலியுறுத்துகிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:
தலைமைக் கழக அலுவலகம்
எண்: 15, வெஸ்ட் காட் ரோடு, ராயப்பேட்டை,
சென்னை – 600 014
மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.