தமிழகத்தின் முதல் பல்லுயிர் பாரம்பரிய தலமான மதுரை அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் (Tungsten) சுரங்கம் அமைக்க முடிவா ? – பல்லுயிர்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் திட்டத்திற்கு வழங்கிய அனுமதியை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். மதுரை மாவட்டத்தில் அமைந்துள்ள அரிட்டாபட்டியை உள்ளடக்கிய 2015 ஹெக்டர் பரப்பளவில் டங்ஸ்டன் (Tungsten) சுரங்கம் அமைப்பதற்கான அனுமதியை வேதாந்தா நிறுவனத்தின் துணை நிறுவனமான இந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்திற்கு மத்திய அரசு வழங்கியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்திற்குட்பட்ட அரிட்டாபட்டி மற்றும் மதுரை கிழக்கு வட்டத்திற்கு உட்பட்ட மீனாட்சிபுரம் ஆகிய கிராமங்களில் உள்ள 193 ஹெக்டேர் பரப்பளவிலான பகுதிகளை பல்லுயிர் பாரம்பரிய தலமாக தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், அந்த இடத்தில் டங்ஸ்டன் (Tungsten) சுரங்கம் அமைக்க மத்திய அரசு முயற்சிப்பது எந்த வகையிலும் ஏற்க முடியாத ஒன்றாக உள்ளது. 250 பறவையினங்கள், அரியவகை வனவிலங்குகள், 72 ஏரிகள், 200 இயற்கை நீரூற்று குளங்கள் என பறவைகள் மற்றும் விலங்குகளின் வாழ்விடமாகவும், சமண சிற்பங்கள், சமண படுக்கைகள், தமிழ் கல்வெட்டுகள், பழமையான குடவரைக்கோயில்கள் என பண்டைய கால பாரம்பரியத்தை பறைசாற்றும் புராதான சின்னங்களின் அடையாளமாகவும் திகழும் அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் (Tungsten) சுரங்கம் அமைப்பது பல்லுயிர்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். எனவே, அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் (Tungsten) சுரங்கம் அமைக்க வழங்கிய அனுமதியை உடனடியாக திரும்பப் பெறுவதோடு இனிவரும் காலங்களில் தமிழகத்தில் பல்லுயிர்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும், தமிழர்களின் வரலாற்றையும் அழிக்கும் வகையிலான எந்த திட்டங்களுக்கும் அனுமதி வழங்கக் கூடாது எனவும் மத்திய அரசை வலியுறுத்துகிறேன்.

டெல்டா மாவட்டங்களில் தொடரும் கனமழையால் நீரில் மூழ்கி அழுகும் நிலையில் நெற்பயிர்கள் – கால்வாய்களை முறையாக தூர்வாராமல் விவசாயிகளை துயரத்துக்குள்ளாக்கும் திமுக அரசின் அலட்சியப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது. தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக பெய்துவரும் தொடர் கனமழையால் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ள தாளடி சாகுபடி பயிர்கள் முழுவதுமாக நீரில் மூழ்கியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நடப்பாண்டில் ஏற்கனவே காவிரி டெல்டா பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட குறுவை மற்றும் சம்பா சாகுபடிகள் போதுமான பயனளிக்காத நிலையில், தற்போது ஏக்கருக்கு சுமார் 30 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்து தொடங்கிய தாளடி சாகுபடியும் நீரில் மூழ்கி அழுகும் நிலையில் இருப்பதால் பெரும் நஷ்டத்தை சந்திக்கும் சூழலுக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே தஞ்சை – நாகை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வாய்காலை தூர்வார வேண்டும் என்ற கோரிக்கையை மாவட்ட நிர்வாகமும், வேளாண்மைத் துறையும் அலட்சியமாக எதிர்கொண்டதன் விளைவே, தற்போது நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவிலான விளைநிலங்களில் மழைநீர் தேங்கி நெற்பயிர்கள் மூழ்க காரணம் என விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர். எனவே, கனமழை காரணமாக விளைநிலங்களில் தேங்கியிருக்கும் மழைநீரை போர்க்கால அடிப்படையில் வெளியேற்ற உரிய நடவடிக்கை எடுப்பதோடு, இனிவரும் காலங்களில் இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படாத வகையில் பருவமழைக்கு முன்பாகவே கால்வாய்களை முறையாக தூர்வார வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

அடிப்படை வசதிகளுடன் கூடிய மாற்று இடம் ஒதுக்கிட கோரி போராட்டத்தில் ஈடுபடும் பொதுமக்களை ஒடுக்க முயற்சிப்பது கடும் கண்டனத்திற்குரியது – மதுரை விமான நிலைய விரிவாக்கப் பணிகளுக்காக நிலம் கொடுத்த பொதுமக்களின் நியாயமான கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும். மதுரை விமான நிலைய விரிவாக்கப் பணிகளுக்காக நிலம் கொடுத்தவர்களுக்கு அடிப்படை வசதிகளுடன் கூடிய மாற்று இடத்தை வழங்கக் கோரி சின்ன உடைப்பு கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. விமான நிலைய விரிவாக்கப் பணிகளுக்காக சின்ன உடைப்பு கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளுடன் கூடிய விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு வரும் நிலையில், அப்பகுதியில் பன்னெடுங்காலமாக வசித்து வரும் மக்களுக்கு அடிப்படை வசதிகளுடன் கூடிய மாற்று ஏற்பாடுகளைக் கூட செய்து தர மறுப்பது கடும் கண்டனத்திற்குரியது. சின்ன உடைப்பு கிராம மக்களின் போராட்டத்தை ஒடுக்கும் வகையில் காவலர்களை குவித்து அச்சுறுத்துவதோடு, அவர்களின் குடியிருப்புகளுக்கு குடிநீர் வசதியை நிறுத்துவதும், மின்சார இணைப்பை துண்டிப்பதும் திமுக அரசின் அடக்குமுறையையும், ஆணவப்போக்கையும் வெளிப்படுத்துகிறது. எனவே, தங்களின் வாழ்வாதார தேவைகளுக்காக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சின்ன உடைப்பு கிராம மக்களின் பிரதிநிதிகளை அழைத்துப் பேசி, அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற முன்வர வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

ஆங்கிலேயர்களுக்கு எதிரான சுதந்திர போராட்டத்தில் உறுதியோடு இறுதி வரை போராடிய விடுதலைப் போராட்ட வீரரும், தலைசிறந்த தமிழ் இலக்கியவாதியுமான கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் அவர்களின் நினைவு தினம் இன்று. ஆங்கிலேயர்களின் அரசியல் நெருக்கடியோடு பொருளாதார நெருக்கடியையும் துணிச்சலுடன் எதிர்கொண்டு அரசியல்வாதியாக, அறிஞராக, வழக்கறிஞராக தேச நலனுக்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்த செக்கிழுத்தச் செம்மல் வ.உ.சிதம்பரனார் அவர்களின் வீரத்தையும், தியாகத்தையும் எந்நாளும் நினைவில் வைத்து போற்றுவோம்.

அமெரிக்காவில் நடைபெற்ற 6-வது உலகக்கோப்பை கேரம் சாம்பியன்ஷிப் போட்டியில் மகளிர் தனிநபர், இரட்டையர் மற்றும் குழு பிரிவு என மூன்று பிரிவுகளில் தங்கம் வென்று சாதனை படைத்திருக்கும் சென்னையைச் சேர்ந்த வீராங்கனை காசிமா அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.ஒரே உலகக் கோப்பை போட்டியில் 3 தங்கப் பதக்கங்களை குவித்து ஒட்டுமொத்த தேசத்திற்கும் பெருமை தேடித் தந்திருக்கும் தமிழக வீராங்கனை காசிமா அவர்களின் வெற்றிப் பயணம் மென்மேலும் தொடர வாழ்த்தி மகிழ்கிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.