நாடும், நாட்டு மக்களும் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை அடைவதற்காக சுதேசியத்தைக் கட்டியெழுப்பிய சுதந்திரப் போராட்ட வீரரும், தமிழ்ச் சமூகத்தின் நல்வாழ்வுக்காக தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்துக் கொண்ட மாமனிதருமான செக்கிழுத்தச் செம்மல் வ.உ.சிதம்பரனார் அவர்களின் நினைவுதினம் இன்று. வழக்கறிஞராக, எழுத்தாளராக, தொழிற்சங்க தலைவராக, ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தின் அடக்குமுறையையும், அவர்கள் கொண்டுவந்த கொடூரமான சட்டங்களையும் எதிர்த்து இறுதிவரை போராடி உயிர்நீத்த தியாகி வ.உ.சிதம்பரனார் அவர்களின் பன்முக ஆற்றலையும் தியாக உணர்வையும் எந்நாளும் போற்றி வணங்கிடுவோம்.

தெலுங்கானா மாநிலத்திலிருந்து மெக்காவிற்குப் புனிதப் பயணம் மேற்கொண்ட இந்தியர்கள் பயணித்த பேருந்து மதீனா நகரின் அருகே விபத்துக்குள்ளாகி அதிலிருந்த 42 பேர் உயிரிழந்திருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்துகிறது. புனிதப் பயணத்தின் போது ஏற்பட்ட எதிர்பாரா விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல் மற்றும் அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதோடு, அன்னார்களது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

மேகதாது அணை விவகாரத்தில் வேகம் காட்டும் கர்நாடக அரசு – தமிழகத்தை பாலைவனமாக்கும் கர்நாடக அரசின் முயற்சியை எந்த பாரபட்சமுமின்றி அனைத்து வகையிலும் தமிழக அரசு தடுத்து நிறுத்திட வேண்டும். மேகதாது அணை தொடர்பாக கர்நாடக அரசு தயாரித்து சமர்ப்பித்த விரிவான திட்ட அறிக்கையை நிராகரித்து திருப்பி அனுப்ப வேண்டும் என மத்திய நீர்வள ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி தமிழக அரசு தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்திருப்பது விவசாயிகள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. காவிரி நீர் பங்கீடு விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கும், காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுக்கும் எதிராக செயல்பட்டு தமிழகத்திற்கான தண்ணீரை வழங்க கர்நாடக அரசு மறுத்து வஞ்சித்து வரும் நிலையில், தற்போது கிடைத்திருக்கும் இந்த தீர்ப்பின் மூலம் மேகதாது அணை விவகாரத்தில் அம்மாநில அரசு தன் பணிகளை மீண்டும் தீவிரப்படுத்தும் என்ற அச்சத்தை உண்டாக்கியுள்ளது.ஏற்கனவே, காவிரியின் அடிமடைப்பகுதியில் பல அணைகளை கட்டியிருக்கும் கர்நாடக அரசு, தற்போது கிடைத்திருக்கும் இந்த தீர்ப்பை பயன்படுத்தி மேகதாது அணையை கட்டும் பணியை தீவிரப்படுத்தும் பட்சத்தில் கடைமடை பகுதியான தமிழகத்தின் விவசாயிகளுக்கு காவிரி நீர் என்பது காணல் நீராக மாறிவிடும் என்ற அபாயத்தை உருவாக்கியுள்ளது. எனவே, உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக சீராய்வு மனுவை உடனடியாக தாக்கல் செய்வதோடு, வலுவான வாதங்களை முன்வைத்து, தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் கர்நாடக அரசின் அணைகட்டும் முயற்சியை ஆரம்ப நிலையிலேயே தடுத்து நிறுத்திட தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

அன்பின் வடிவமாக, மகிழ்ச்சியின் ஊற்றாக, கள்ளங்கபடமற்ற உள்ளங்களாக, எதிர்கால இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரங்களாக திகழும் குழந்தைகளின் நலன், கல்வி மற்றும் வளர்ச்சியை உறுதி செய்யும் வகையில் கொண்டாடப்படும் குழந்தைகள் தினம் இன்று. குழந்தைகளின் நல்வாழ்வுக்கும், சமச்சீரான வளர்ச்சிக்கும் இடையூறுகளாக இருக்கும் அத்தனை தடைகளையும் தகர்த்தெறிந்து, அன்பு மற்றும் அரவணைப்போடு, அவர்களின் எதிர்காலம் சிறக்க அனைத்து வழிகளிலும் உறுதுணையாக இருக்க நாம் அனைவரும் இந்நாளில் உறுதியேற்போம்.

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.