பல்லாவரம் அருகே கழிவுநீர் கலந்த குடிநீரை அருந்திய இருவர் உயிரிழப்பு – பொதுமக்களுக்கு தேவையான குடிநீரைக் கூட சுத்தமாக விநியோகிக்கத் தவறிய திமுக அரசின் அலட்சியப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது. தாம்பரம் மாநகராட்சி 13வது வார்டுக்கு உட்பட்ட காமராஜ் நகர், பல்லாவரம் உள்ளிட்ட பகுதிகளில் கழிவுநீர் கலந்த குடிநீரை அருந்தி பாதிப்புக்குள்ளான 30க்கும் அதிகமானோர்களில் இரண்டு பேர் உயிரிழந்திருப்பதாக வரும் செய்திகள் மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் அளிக்கின்றன. பருவமழைக் காலங்களில் பொதுமக்களின் அத்தியாவசியத் தேவைகளில் ஒன்றான குடிநீரைக் கூட முறையாகவும், சுத்தமாகவும் விநியோகிக்கத் தவறிய தாம்பரம் மாநகராட்சி மற்றும் திமுக அரசின் மெத்தனப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது. மாநகராட்சி மூலமாக விநியோகிக்கப்படும் குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதால் வாந்தி, மயக்கம், வயிற்றுப்போக்கு போன்ற உடல் உபாதைகள் ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் அளித்த புகார் மனுக்களை அலட்சியமாக எதிர்கொண்டதன் விளைவே இன்று விலைமதிப்பில்லாத இரண்டு உயிர்களை இழக்கும் அளவிற்கான சூழலை உருவாக்கியுள்ளது. எனவே, கழிவுநீர் கலந்த குடிநீரை அருந்தி உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்போருக்கு உரிய சிகிச்சை வழங்குவதோடு, பல்லாவரம் பகுதி முழுவதும் மருத்துவ முகாம்களை அமைத்து பொதுமக்களுக்கு தேவையான சிகிச்சைகளை வழங்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

தமிழக மக்களின் மகிழ்ச்சி தான் என் லட்சியம்; தமிழக மக்களின் வளர்ச்சியும் வளமான வாழ்வுமே என்னுடைய இலக்கு எனக்கூறி தன் வாழ்நாள் முழுவதையும் தமிழக மக்களுக்காகவே அர்ப்பணித்த இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் நினைவு தினம் இன்று. தமிழக அரசியல் வரலாற்றில் தனிப்பெரும் அத்தியாயமாக திகழ்ந்த இதயதெய்வம் அம்மா அவர்களின் வழித்தடத்தை பின்பற்றி அடுத்து வரும் சட்டமன்றத் தேர்தலில், மக்கள் விரோத திமுகவையும், சுயநலமிக்க துரோகக் கூட்டத்தையும் ஒருசேர வீழ்த்தி வெற்றி முத்திரையை பதித்திட நாம் அனைவரும் இந்நாளில் உறுதியேற்போம்.

திருவண்ணாமலை அருகே திறக்கப்பட்ட 90 நாட்களில் வெள்ளநீரில் அடித்துச் செல்லப்பட்ட உயர்மட்ட பாலம் – தரமற்ற பாலங்களை கட்டி பொதுமக்களின் உயிரோடு விளையாடுவது தான் திராவிட மாடல் அரசின் சாதனையா? திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டை அடுத்த அகரம்பள்ளிபட்டு மற்றும் தொண்டமானூர் கிராமங்களை இணைக்கும் வகையில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட உயர்மட்ட பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பாலம் வெள்ளநீரில் அடித்துச் செல்லப்பட்டிருப்பதால் தொண்டமானூர், கிருஷ்ணாபுரம், பெருந்துறைப்பட்டு, எடத்தனூர் உள்ளிட்ட 15 ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் பாதிக்கப்பட்டிருப்பதோடு அத்தியாவசியத் தேவைகளுக்காக சுமார் 15கி.மீ சுற்றிச் செல்ல வேண்டிய அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். 15.90 கோடி ரூபாயில் கட்டப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்ட உயர்மட்ட பாலம் 90 நாட்களுக்குள்ளாக வெள்ளநீரில் அடித்துச் செல்லப்பட்டிருப்பது திமுக ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட மொத்த பாலங்களின் தரத்தையும், உறுதித் தன்மையையும் கேள்விக்குறியாக்கியிருக்கிறது. ஏற்கனவே திமுக ஆட்சிப்பொறுப்பேற்ற மூன்றரை ஆண்டுகளில் அரசு நிர்வாகத்தின் அனைத்து துறைகளிலும் அடிமட்டத்திலிருந்து உயர்மட்டம் வரை ஊழல் மற்றும் முறைகேடு புகார்கள் குவிந்து வரும் நிலையில், தற்போது வெள்ளத்தில் உயர்மட்ட பாலம் அடித்துச் செல்லப்பட்டிருப்பது அந்த புகார்களை மேலும் வலுப்படுத்தும் வகையில் அமைந்திருப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். எனவே, தரமற்ற முறையில் பாலத்தை கட்டி பொதுமக்களின் உயிர்பாதுகாப்பை கேள்விக்குறியாக்கிய அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு , இனிவரும் காலங்களில் கட்டப்படும் பாலங்களின் உறுதித்தன்மையை ஒருமுறைக்கு இருமுறை உறுதி செய்ய வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:
தலைமைக் கழக அலுவலகம்
எண்: 15, வெஸ்ட் காட் ரோடு, ராயப்பேட்டை,
சென்னை – 600 014
மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.