அடிமை வாழ்க்கையை அறவே வெறுத்து, நாட்டு மக்களின் நலமே தன் நலம் என முழங்கி ஆங்கிலேயப் பெரும்படைகளை பலமுறை புறமுதுகிட்டு ஓடச் செய்த மாமன்னர் தீரன் சின்னமலை அவர்களின் நினைவு தினத்தையொட்டி, கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்கள் சென்னை கிண்டியில் அமைந்துள்ள மாமன்னர் தீரன் சின்னமலை அவர்களின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். இதனைத்தொடர்ந்து, கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்களின் சார்பில், ஈரோடு மாவட்டம், ஓடாநிலையில் அமைந்துள்ள மாமன்னர் தீரன் சின்னமலை அவர்களின் மணி மண்டபத்தில் அன்னாரது திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

சென்னையில் தொடங்கி தமிழகம் முழுவதும் நாள்தோறும் அரங்கேறும் படுகொலைச் சம்பவங்கள் – அமைதிப்பூங்காவாக இருந்த தமிழகத்தை கொலைகள் நிறைந்த மாநிலமாக மாற்றியிருக்கும் திமுக அரசின் அலட்சியப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது. கோவையில் வழக்கறிஞர், தருமபுரியில் உணவக ஊழியர், நாகப்பட்டினத்தில் ஏலச்சீட்டு நடத்தி வந்த பெண், புதுக்கோட்டையில் ஆட்டோ ஓட்டுநர் என கடந்த சில தினங்களில் மட்டும் பல்வேறு படுகொலைச் சம்பவங்கள் தமிழகத்தில் அரங்கேறியுள்ளன. அரசியல் கட்சித் தலைவர்கள் தொடங்கி சாதாரண பொதுமக்கள் வரை கூலிப்படைகள் மற்றும் அடையாளம் தெரியாத கும்பல்கள் மூலமாக திட்டமிட்டு கொலை செய்யப்படுவதும், பின்னர் கொலையை செய்ததாக ஒருசிலர் தாமாக முன்வந்து சரணடையும் சம்பவங்களும் தொடர்கதையாகி வருவது தமிழக காவல்துறை முற்றிலுமாக செயலிழந்துவிட்டதையே வெளிப்படுத்துகிறது. இன்று கூட திருச்சியில் காவிரி ஆற்றை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவர் ஒருவரை, அப்பகுதியில் சட்டவிரோதமாக போதைப் பொருட்களை உட்கொண்டிருந்த கும்பல் கடுமையாக தாக்கியதில் அம்மாணவர் உயிரிழந்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. தமிழகத்தில் ஆளுங்கட்சி ஆதரவோடு நடைபெறும் போதைப் பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையை அடியோடு தடுத்து நிறுத்த பலமுறை வலியுறுத்தியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத திமுக அரசால், இளைஞர்கள் பலர் போதைப் பழகத்திற்கு அடிமையாகி ஐந்தாயிரத்திற்கும், பத்தாயிரத்திற்கும் கூலிப்படைகளாக மாறி கொலை செய்யும் அளவிற்கான சூழலும் உருவாகியுள்ளது. இதயதெய்வம் அம்மா அவர்களின் ஆட்சிக்காலத்தில் அமைதிப் பூங்காவாக இருந்த தமிழகத்தில் தற்போது நாள்தோறும் அரங்கேறும் கொலை, கொள்ளை உள்ளிட்ட சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளை களையவோ, குற்றவாளிகளை கண்டறியவோ நடவடிக்கை எடுக்காமல், தமிழகத்தில் நடைபெறும் கொலைச் சம்பவங்கள் ஆதாயத்திற்காகவும், பழிக்குப் பழி வாங்கவும் நடைபெறுவதாக கூறும் தமிழக அமைச்சர்களின் பொய்களை தமிழக மக்கள் ஒருபோதும் நம்ப மாட்டார்கள். எனவே, எதிர்க்கட்சியினரை ஒடுக்குவதற்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டு வரும் காவல்துறையை இனியாவது சுதந்திரமாக செயல்பட அனுமதிப்பதோடு, தமிழகத்தில் அடியோடு சீர்குலைந்திருக்கும் சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளை களையத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

அடிமை வாழ்க்கையை அறவே வெறுத்து, நாட்டு மக்களின் நலமே தன் நலம் என முழங்கி ஆங்கிலேயப் பெரும்படைகளை பலமுறை புறமுதுகிட்டு ஓடச் செய்த மாமன்னரும், சுதந்திர போராட்ட வீரருமான மாவீரர் தீரன் சின்னமலை அவர்களின் நினைவு தினம் இன்று. இளம் வயதிலேயே தனது வீரத்தாலும், அசாத்திய திறமையாளும் ஆங்கிலேய ஆதிக்கத்தை அதிரச் செய்ததோடு, தன் இறுதி மூச்சுவரை நாட்டு விடுதலைக்காக போரிட்டு வீரமரணம் அடைந்த தீரன் சின்னமலை அவர்களின் வீரமும், துணிச்சலும் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு தெளிவூட்டும் வரலாறாக என்றென்றும் நிலைத்து நிற்கும்.

திருப்பூர் மாநகராட்சி பள்ளி கழிவறைக்குள் ஒருமாத காலமாக தங்கவைக்கப்பட்ட தூய்மைப்பணியாளர்கள் – வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கு அடிப்படை வசதிகளை கூட ஏற்படுத்தித் தராத திருப்பூர் மாநகராட்சியின் மனிதநேயமற்ற செயல் கடும் கண்டனத்திற்குரியது. திருப்பூர் நஞ்சப்பா மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள கழிவறைக்குள், தனி அறை ஒன்றில் வெளிமாநிலத்தைச் சேர்ந்த தூய்மைப் பணியாளர்கள் தங்கி அங்கேயே உணவு சமைத்து உட்கொள்வது போன்று வெளியாகியிருக்கும் வீடியோ காட்சிகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பொதுக் கழிப்பறைகளை சுத்தம் செய்து, பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வந்த வெளிமாநிலத்தைச் சேர்ந்த தூய்மைப் பணியாளர்களுக்கு உணவு, தங்குவதற்கான இடத்தைக் கூட ஒதுக்காமல் கடந்த ஒரு மாத காலமாக மாநகராட்சி பள்ளி கழிவறையிலேயே தங்க வைத்திருந்தது முழுக்க முழுக்க மனிதநேயமற்ற செயலாகும். எனவே, பொதுக்கழிவறைகளை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை உடனடியாக ஏற்படுத்தித் தருவதோடு, இந்த விசயத்தில் அலட்சியப் போக்குடன் செயல்பட்ட திருப்பூர் மாநகராட்சி அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

தலைமைக் கழக அறிவிப்பு : இந்திய விடுதலைப் போராட்டத்தில் மறக்கமுடியாத மாவீரராக திகழ்ந்து, ஆங்கிலேயருக்குச் சிம்மசொப்பனமாக விளங்கிய மன்னர் தீரன் சின்னமலை அவர்களின் நினைவு தினம் 03.08.2024 (சனிக்கிழமை) அன்று கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி சென்னை கிண்டியில் அமைந்துள்ள தீரன் சின்னமலை அவர்களின் திருவுருவச் சிலைக்கு அன்று காலை 10:00 மணியளவில் கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்கள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தவிருக்கிறார்கள். இதன் தொடர்ச்சியாக, கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்களின் சார்பில், ஈரோடு மாவட்டம், ஓடாநிலையில் தீரன் சின்னமலை அவர்களின் நினைவிடத்தில் அமைந்துள்ள திருவுருவச் சிலைக்கு காலை 11:00 மணியளவில் கழக துணைப்பொதுச்செயலாளரும், திருப்பூர் புறநகர் மாவட்டக் கழக செயலாளருமான, முன்னாள் அமைச்சர் திரு.C.சண்முகவேலு அவர்களது தலைமையில் கழகத்தினர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்த உள்ளனர். இந்த இரு நிகழ்விற்கும் தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்ட கழக செயலாளர்கள், மாவட்டக் கழக நிர்வாகிகள், பகுதி, ஒன்றிய, நகர, பேரூர் கழகம் மற்றும் வார்டு, வட்டம், கிளைக் கழக நிர்வாகிகள் மற்றும் அனைத்து சார்பு அணிகளின் நிர்வாகிகள், கழக தொண்டர்கள் என அனைவரும் பெருந்திரளாக கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

கழகம்

அலுவலகம்

முகவரி:
தலைமைக் கழக அலுவலகம்
எண்: 15, வெஸ்ட் காட் ரோடு, ராயப்பேட்டை,
சென்னை – 600 014
மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.