தமிழக ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தில் பதிவு மற்றும் புதுப்பித்தலுக்கான கட்டணத்தை உயர்த்தியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது – மக்களுக்கு மறைமுக பாதிப்பை ஏற்படுத்தும் கட்டண உயர்வை தமிழக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும். கட்டட வரைபட அனுமதி பெறுவதற்கான கட்டணங்கள் இருமடங்காக உயர்த்தப்பட்ட அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள்ளாக, தமிழக ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தில் புதிய கட்டுமானத் திட்டங்களை பதிவு செய்தல் மற்றும் புதுப்பித்தலுக்கான கட்டணங்கள் உயர்த்தப்பட்டிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் கூடுதல் அதிர்ச்சியை எற்படுத்துகின்றன. 645 சதுர அடிக்கு மேற்பட்ட குடியிருப்புத் திட்டங்களுக்கு 10.7 சதுர அடிக்கு 20 ரூபாயாக இருந்த கட்டணம் 25 ரூபாயாகவும், வணிக கட்டடங்களுக்கு 50 ரூபாயாக இருந்த கட்டணம் 60 ரூபாயாகவும் உயர்த்தியிருப்பதோடு, கட்டுமான திட்ட முடிவு சான்றிதழ் பெறுவதற்கு 5 ஆயிரம் ரூபாய், கட்டுமானத் திட்டத்தை பதிவு செய்த நிறுவனம் அதனை திரும்பப் பெற விண்ணப்பித்தால் 10 சதவிகிதம் கட்டணம் பிடித்தம் என அனைத்து வகையிலான கட்டணங்களும் உயர்த்தப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தில் பதிவு செய்தல் மற்றும் புதுப்பித்தலுக்கான கட்டண உயர்வு என்பது சாதாரண குடியிருப்புகள் தொடங்கி அடுக்குமாடி கட்டடங்கள், வீட்டு மனைகளின் விலை உயர்வுக்கு மறைமுகமாக வழிவகுத்து சொந்த வீடு கனவில் இருக்கும் தமிழக மக்களுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, விளிம்பு நிலை மக்களுக்கான சொந்த வீடு கனவை முழுமையாக சிதைக்கும் வகையில் கடந்த மூன்றாண்டு காலமாக உயர்த்தப்பட்ட அனைத்துவிதமான வரிகள் மற்றும் கட்டண உயர்வுகளையும் உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு தரமற்ற விலையில்லா மிதிவண்டிகளை விநியோகிப்பதாக எழுந்திருக்கும் புகார் – இதயதெய்வம் அம்மா அவர்களின் திட்டத்தை முடக்குவதை மட்டுமே குறிக்கோளாய் கொண்டிருக்கும் திமுக அரசின் அரசியல் காழ்ப்புணர்ச்சி கடும் கண்டனத்திற்குரியது. அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 11ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு தமிழக அரசு மூலமாக விநியோகம் செய்யப்படும் விலையில்லா மிதிவண்டிகள் பழுதடைந்த நிலையிலும், தரமற்ற நிலையிலும் இருப்பதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. தரமற்ற முறையில் விநியோகிக்கப்படும் விலையில்லா மிதிவண்டிகளில் இருக்கும் பழுதுகளை நீக்குவதற்கு தனி செலவு செய்ய வேண்டியிருப்பதாகவும், முடியாத பட்சத்தில் அந்த மிதிவண்டிகளை குறைந்த விலைக்கு விற்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டிருப்பதாகவும் மாணவ, மாணவியர்களின் பெற்றோர்கள் புகார் தெரிவித்துள்ளனர். தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டம், தொட்டில் குழந்தைத் திட்டம், விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டம், விலையில்லா ஆடு, மாடு வழங்கும் திட்டம் என தொலைநோக்கு சிந்தனையுடன் இதயதெய்வம் அம்மா அவர்களால் கொண்டுவரப்பட்ட பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை ஒன்றன்பின் ஒன்றாக முடக்கிவரும் திமுக அரசின் அரசியல் காழ்ப்புணர்ச்சி கடும் கண்டனத்திற்குரியது. அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களின் மேல்நிலைக்கல்வியை ஊக்குவிக்கும் நோக்கில் இதயதெய்வம் அம்மா அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தை முடக்குவதையே குறிக்கோளாய் கொண்டிருக்கும் திமுக அரசால் லட்சக்கணக்கான பள்ளி மாணவ, மாணவியர்கள் பாதிப்புக்குள்ளாகும் நிலை உருவாகியுள்ளது. எனவே, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி, மாணவ மாணவியர்களுக்கு வழங்கப்படும் விலையில்லா மிதிவண்டிகள் தரமானதாக இருப்பதை உறுதி செய்வதோடு, தரமற்ற முறையில் மிதிவண்டிகளை வழங்கிய ஒப்பந்ததாரர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதை 62 ஆக உயர்த்த முடிவா ? – இளைஞர்களின் வேலைவாய்ப்பை பறிக்கும் முடிவை தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும் தமிழக அரசுக்கு ஏற்பட்டிருக்கும் நிதி நெருக்கடியை சமாளிப்பதற்காக அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயதை 60லிருந்து 62 ஆக உயர்த்துவது தொடர்பாக தமிழக அரசு பரிசீலனை செய்துவருவதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. தமிழக அரசுத்துறைகளில் பணியாற்றும் ஊழியர்களில் சுமார் 40 சதவிகிதம் பேர் அடுத்தடுத்த ஆண்டுகளில் ஓய்வுபெறவிருக்கும் நிலையில், அவர்களுக்கான பணப்பலன்களை வழங்குவதற்கான நிதி இல்லாத காரணத்தை சுட்டிக்காட்டி திமுக அரசு இம்முடிவை எடுத்திருப்பதாக அரசு ஊழியர் சங்கங்கள் குற்றம் சாட்டியுள்ளன. அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும், அரசுத்துறைகளில் உள்ள 3.5 லட்சம் காலிப்பணியிடங்கள் தமிழக இளைஞர்களால் நிரப்பப்படும் என்ற வாக்குறுதிகளை வழங்கி ஆட்சிக்கு வந்த திமுக, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு ஆணையத்தின் தலைவரைக் கூட இன்று வரை நியமிக்க முடியாத சூழலில்தான் தள்ளாடிக் கொண்டிருப்பதை மக்கள் அனைவரும் நன்கறிவர். தமிழக அரசின் பல்வேறு துறைகளில் நிலவும் லட்சக்கணக்கான காலிப்பணியிடங்களை நிரப்ப முன்வராத திமுக அரசால், வேலையில்லாத இளைஞர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதோடு, அரசுப் பணியை எதிர்நோக்கி வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருப்போரின் எண்ணிக்கையும் சுமார் 80 லட்சத்தை கடந்திருக்கிறது. இந்த நிலையில் அரசு ஊழியர்களுக்கான ஓய்வுபெறும் வயதை மேலும் இரண்டு ஆண்டுகள் நீட்டிப்பதால், ஏற்கனவே அரசுப் பணியில் இருப்பவர்களுக்கான பதவி உயர்வு பாதிக்கப்படுவதோடு, அரசுப் பணி கனவில் காத்திருக்கும் லட்சக்கணக்கான இளைஞர்களின் எதிர்காலமும் அடியோடு சீர்குலையும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே, தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்பை பறிக்கும் இம்முடிவை உடனடியாக கைவிடுவதோடு, தமிழக அரசுத்துறைகளில் நிலவும் லட்சக்கணக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

இணையதள வாயிலாக கட்டட வரைபட அனுமதி பெறுவதற்கான கட்டணங்கள் இருமடங்கு உயர்வு – தமிழக மக்களை மென்மேலும் துயரத்திற்குள்ளாக்கும் திமுக அரசின் மக்கள் விரோத செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது. தமிழக அரசின் நகராட்சி நிர்வாகத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறையின் மூலமாக கடந்த சில தினங்களுக்கு முன்பாக அறிமுகப்படுத்தப்பட்ட சுயசான்று அடிப்படையில் இணையதளம் வாயிலாக கட்டுமானத் திட்ட அனுமதி பெறும் நடைமுறையின் கீழ், வீட்டு வரைபட அனுமதி பெறுவதற்கான கட்டணங்கள் இருமடங்கு உயர்த்தப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. உதாரணத்திற்கு 8,900 சதுர அடியில் கட்டப்படும் கட்டடங்களுக்கு கடந்த மாதம் 4.5 லட்ச ரூபாய் கட்டணமாக செலுத்திய நிலையில், தமிழக அரசின் இந்த புதிய நடைமுறைக்கு பின்னர் தற்போது 9.5 லட்ச ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டியிருப்பதாகவும் அதனால் வீடுகளின் விலை உயர வாய்ப்பிருப்பதாகவும் கட்டுமானத்துறையினர் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே, சொத்துவரி, பதிவுக்கட்டணம், நிலங்களுக்கான வழிகாட்டி மதிப்பு உயர்வு, கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வு என அடுத்தடுத்த பாதிப்புகளை சந்தித்துவரும் தமிழக மக்களுக்கு, வீட்டு வரைபட கட்டட அனுமதி பெறுவதற்கான கட்டணமும் இருமடங்கு உயர்த்தப்பட்டிருப்பது பேரிடியாக விழுந்துள்ளது. கட்டட அனுமதி பெறுவதற்கான நடைமுறையை எளிதாக்குகிறோம் எனும் பெயரில் அதற்கான கட்டணங்களை எந்தவித முன்னறிவிப்பும் இன்றி உயர்த்தியிருப்பது, சொந்த வீடு எனும் கனவை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கும் ஏழை, எளிய மக்களுக்கு திமுக அரசு இழைத்திருக்கும் மாபெரும் துரோகம் ஆகும். எனவே, தமிழக மக்களை மென்மேலும் துன்பத்திற்குள்ளாக்கும் வீட்டு கட்டட வரைபட அனுமதிக்கான கட்டண உயர்வை உடனடியாக திரும்பப் பெறுவதோடு, சுயசான்று அடிப்படையில் ஏற்கனவே இருந்த கட்டண நடைமுறையையே பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பெய்துவரும் தொடர்மழை – வடகிழக்கு பருவமழைக்கு முன்பாகவே 100 சதவிகிதம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலான மழை பெய்துவரும் நிலையில் அடுத்த சில நாட்களுக்கும் இந்த மழை நீடிக்கும் என வானிலை ஆய்வும் மையம் தெரிவித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சென்னை மாநகரில் எந்தவித ஒருங்கிணைப்புமின்றியும் ஒரே நேரத்தில் நடைபெற்று வரும் மெட்ரோ ரயில், சாலை மற்றும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளுக்காக அங்காங்கே தோண்டப்பட்ட பள்ளங்கள் மூடப்படாமல் இருப்பதால், அதில் தேங்கி நிற்கும் மழைநீர் வாகன ஓட்டிகளுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றன. ஒவ்வொரு ஆண்டும் பருவமழை தொடங்குவதற்கு முன்பாக சென்னையில் 95 சதவிகிதம் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் நிறைவடைந்துவிட்டதாக பொய்கள் கூறுவதும், மழை பாதிப்புக்கு பின்னர் புதுப்புது காரணத்தை சொல்லி சமாளிப்பதையுமே வாடிக்கையாக கொண்டிருக்கும் திமுக அரசு, இம்முறையும் எதாவது காரணத்தைச் சொல்லி மக்களை ஏமாற்ற முடியாது. சென்னை மாநகராட்சி சார்பில் பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பில் நடைபெறும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள், முறையாக நடைபெறவில்லை என்பதை, அப்பணிகளுக்காக தோண்டப்பட்டு கிடப்பில் போடப்பட்டிருக்கும் பள்ளங்களும், அதனால் ஆண்டுதோறும் ஏற்படும் விபத்துக்களும், உயிரிழப்புகளுமே உணர்த்துகின்றன. எனவே, வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்கவுள்ள நிலையில், சென்னை உட்பட அனைத்து மாவட்டங்களிலும் பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:
தலைமைக் கழக அலுவலகம்
எண்: 15, வெஸ்ட் காட் ரோடு, ராயப்பேட்டை,
சென்னை – 600 014
மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.