மதுரை உசிலம்பட்டி அருகே பத்தாம் வகுப்பு தமிழ் பாடத்தில் 9 மாணவர்கள் தோல்வி – தாய்மொழி தமிழை பயிற்றுவிக்க போதுமான ஆசிரியர்களை நியமிக்கத் தவறிய பள்ளிக்கல்வித்துறையின் அலட்சியம் கடும் கண்டனத்திற்குரியது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள தும்மக்குண்டு அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளியில் தமிழ் ஆசிரியர் இல்லாத காரணத்தினால் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களில் 9 பேர் தமிழ் பாடத்தில் தோல்வியடைந்திருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த வருத்தமளிக்கிறது. தமிழகம் முழுவதும் உள்ள அரசுப்பள்ளிகளில் நிலவும் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்ற ஆசிரியர்களின் தொடர் போராட்டத்தை தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை அலட்சியமாக எதிர்கொண்டதன் விளைவே, தற்போது தாய்மொழியாம் தமிழ் பாடத்திலேயே 9 மாணவர்கள் தோல்வியடையும் சூழலை உருவாக்கியுள்ளது. குழந்தைகளுக்கு தமிழில் பெயர் சூட்ட வேண்டும், வணிக நிறுவனங்களின் பெயர்களை தமிழில் மாற்ற வேண்டும், அரசாணைகளை தமிழ் மொழியிலேயே வெளியிட வேண்டும் என்றெல்லாம் உத்தரவிட்ட முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் அரசுப்பள்ளிகளில் தமிழ் பாடத்தை பயிற்றுவிக்க போதுமான ஆசிரியர்களை நியமிக்கத் தவறியது ஏன்? என்ற கேள்வி அனைவர் மத்தியிலும் எழுந்திருக்கிறது. எனவே, தமிழ்ப் பாடத்தில் தோல்வியடைந்த 9 மாணவர்களுக்கு போதுமான பயிற்சி வழங்கி துணைத்தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான வழிவகைகளை மேற்கொள்வதோடு, அனைத்து அரசுப் பள்ளிகளிலும் போதுமான ஆசிரியர்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என பள்ளிக்கல்வித்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.