தமிழக முதல்வரின் கேரளப் பயணம் தென்மாவட்ட மக்களுக்கு பயனுள்ளதாக அமைய வேண்டும் – முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் நல்ல முடிவுடனே முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தமிழகம் திரும்பிட வேண்டும். வைக்கம் நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி கேரள மாநிலம் கோட்டயத்தில் பெரியார் நினைவகம் மற்றும் நூலகத்தை நேரில் திறந்து வைக்க தமிழக முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் கேரள மாநிலத்திற்கு சென்றிருக்கிறார். முல்லைப்பெரியாறு அணையில் ஆண்டுதோறும் நடைபெறும் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதி மறுப்பதோடு, நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கார் பார்க்கிங் அமைக்கும் பணியை தீவிரமாக மேற்கொண்டு வரும் கேரள அரசின் பிடிவாதப்போக்கிற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வாய்ப்பை இந்த நிகழ்வு ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. டெல்டா மாவட்டங்களில் பயிரிடப்பட்ட பயிர்கள் போதுமான நீரின்றி கருகிய நிலையிலும், கடந்த ஆண்டு பெங்களூரு சென்று கூட்டணிக்கட்சி கூட்டத்தில் பங்கேற்ற முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், அம்மாநில முதலமைச்சரை காவிரிநீரை திறந்துவிட வலியுறுத்தாமல் திரும்பியது போல் இல்லாமல், இம்முறை கேரள முதல்வர் திரு.பினராயி விஜயன் அவர்களை சந்தித்து முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் சுமூக தீர்வை ஏற்படுத்த முயற்சிக்க வேண்டும். முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் கேரள மாநிலத்திற்கான பயணம் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்ட மக்களின் குடிநீர் மற்றும் பாசனத் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் பயனுள்ளதாக அமைய வேண்டும் என தமிழக விவசாயிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். எனவே, சுயநலத்திற்காகவும், கூட்டணி தர்மத்திற்காகவும் மாநில உரிமைகளையும், மக்களின் வாழ்வாதாரத்தையும் மீண்டும் ஒருமுறை அடகு வைக்காமல், இந்த வாய்ப்பை பயன்படுத்தி முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் நல்ல முடிவோடு தமிழகம் திரும்ப வேண்டும் என தமிழக முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.

மத்திய அரசின் விஸ்வகர்மா திட்டம் குலக்கல்வி திட்டம் என்றால் மாநில அரசின் கைவினைத் திட்டம் குலத்தை வலுப்படுத்தும் திட்டமா ? தந்தையின் பெயரை சூட்டுவதற்காகவே திட்டங்களை உருவாக்கும் முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் செயல்பாடு கண்டனத்திற்குரியது. நகை செய்தல், சிகையலங்காரம், காலணிகள் தயாரித்தல், சுடுமண் வேலைகள் உள்ளிட்ட வேலைகளுக்கு பயிற்சி, பிணையற்ற கடன் உதவி, வட்டி மானியம் வழங்கும் வகையில் “கலைஞர் கைவினைத் திட்டத்தை” தமிழக அரசு உருவாக்கியிருப்பதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. மாண்புமிகு பிரதமர் மோடி அவர்களால் கொண்டு வரப்பட்ட விஸ்வகர்மா திட்டம் சாதி அடிப்படையிலான தொழில்முறையை வலுப்படுத்தும் எனக்கூறி அதனை செயல்படுத்த முடியாது என அறிவித்த முதல்வர், தற்போது அதே சிறப்பம்சங்களை உள்ளடக்கி கலைஞர் கைவினைத் திட்டத்தை உருவாக்கியிருப்பதன் நோக்கம் என்ன ? கைவினைக் கலைஞர்களின் வாழ்க்கைத் தரத்தையும், பொருளாதாரத்தையும் உயர்த்தும் நோக்கில் மத்திய அரசால் செயல்படுத்தும் திட்டங்களை காப்பியடித்து தன் தந்தையின் பெயரில் திட்டங்களை உருவாக்குவது தான் முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான திராவிட மாடல் அரசின் சமூகநீதியா ? என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர். எனவே, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு, மக்கள் நலனுக்கான திட்டங்களை செயல்படுத்த வேண்டுமே தவிர, தன் தந்தையின் பெயரை சூட்டுவதற்காக புதிய திட்டங்களை உருவாக்கக் கூடாது என முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை கேட்டுக் கொள்கிறேன்.

திமுக அளித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி போராடினால் கைது செய்வதா ? – பணி நிரந்தரம் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட பகுதி நேர ஆசிரியர்கள் மீது திமுக அரசு ஏவியிருக்கும் அடக்குமுறை கடும் கண்டனத்திற்குரியது. திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான பணிநிரந்தரம் கோரி தலைமைச் செயலகத்தை முற்றுகையிட முயன்ற ஆயிரக்கணக்கான பகுதிநேர ஆசிரியர்கள் காவல்துறையினரால் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் பகுதிநேர ஆசிரியர்கள் பணிநிரந்தரம் செய்யப்படுவார்கள் என எதிர்க்கட்சித்தலைவராக இருந்த போது வாக்குறுதியளித்த திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், முதலமைச்சரான மூன்றரை ஆண்டுகள் கடந்த பின்பும் அந்த வாக்குறுதியை நிறைவேற்ற மறுப்பது அவர்களுக்கு இழைக்கும் மாபெரும் துரோகம். பணி நிரந்தர கோரிக்கையை வலியுறுத்தி பள்ளிக்கல்வித்துறை உயர் அதிகாரிகளோடு நடைபெற்ற பலகட்ட பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் நிறைவடைந்த நிலையில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சரோ, முதலமைச்சரோ பேச்சுவார்த்தை நடத்த முன்வராததே தற்போது ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் ஒன்று திரண்டு போராடும் அளவிற்கான சூழலை உருவாக்கியுள்ளது. எனவே, போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டுள்ள ஆசிரியர்களை எந்தவித நிபந்தனையுமின்றி உடனடியாக விடுவிப்பதோடு, அவர்களின் நியாயமான, நீண்டகால கோரிக்கையான பணி நிரந்தர கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என பள்ளிக்கல்வித்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.

கன்னியாகுமரியை தொடர்ந்து மதுரையிலும் சார் பதிவாளர் மீது தாக்குதல் – பொதுமக்கள் தொடங்கி அரசு அதிகாரிகள் வரை யாருக்குமே பாதுகாப்பற்ற சூழலை உருவாக்கியது தான் திமுக அரசின் மூன்றரை ஆண்டு கால சாதனை.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பத்திரப்பதிவு ஆவணத்தை நிராகரித்ததாக கூறி சார்பதிவாளர் மீது மண்ணெண்ணெய் ஊற்றி கொலை முயற்சி நடைபெற்ற நிலையில், மதுரை மாவட்டத்திலும் பத்திரத்தை பதிவு செய்ய மறுத்ததாக கூறி மற்றொரு சார் பதிவாளர் மீதும் தாக்குதல் நடைபெற்றிருப்பதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தில் பொதுமக்கள் தொடங்கி காவலர்கள், அரசு அதிகாரிகள், பத்திரிகையாளர்கள், மருத்துவர்கள் வரிசையில் தற்போது நாள்தோறும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்லும் பத்திரப்பதிவு அலுவலகங்களில் பணியாற்றும் சார் பதிவாளர்கள் மீதும் தாக்குதல் நடத்தும் அளவிற்கான அசாதாரண சூழல் உருவாகியுள்ளது.
கன்னியாகுமரி மற்றும் மதுரை மாவட்டங்களில் இயங்கி வரும் சார் பதிவாளர்கள் அலுவலகங்களில் நடைபெற்றிருக்கும் இந்த தாக்குதல் சம்பவங்கள் தமிழகத்தில் ஒட்டுமொத்த சார் பதிவாளர் அலுவலகங்களில் பணியாற்றும் அலுவலர்கள் அனைவரின் பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்கும் வகையில் அமைந்திருக்கிறது.
எனவே, சட்ட நெறிமுறைகளுக்கு உட்பட்டு சார் பதிவாளர் அலுவலகங்களில் பணியாற்றி வரும் அலுவலர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதோடு, அரசு அதிகாரிகளின் மீது இது போன்ற தாக்குதல் சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

சென்னை அயனாவரத்தில் பத்துக்கும் மேற்பட்ட நபர்களால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட மனநலம் பாதிக்கப்பட்ட மாணவி – குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். சென்னை அயனாவரத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவி ஒருவரை ஒரு வருடத்திற்கு மேலாக பத்துக்கும் மேற்பட்ட நபர்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன. பாதிப்புக்குள்ளான மாணவியின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் கொடூரக் கும்பலைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மீதமிருக்கும் குற்றவாளிகளை கைது செய்வதில் காவல்துறை அலட்சியம் காட்டுவதாக புகார் எழுந்திருக்கிறது. மனநலம் பாதிக்கப்பட்ட மாணவி ஒருவரை ஒரு வருடத்திற்கும் மேலாக அடையாளம் தெரியாத கும்பல் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியிருப்பது, தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் சர்வ சாதாரணமாகி வருவதையே வெளிப்படுத்துகிறது. எனவே, மனநலம் பாதிக்கப்பட்ட மாணவியை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய கும்பலைச் சேர்ந்த அனைவரையும் கைது செய்து கடுமையான தண்டனையை பெற்றுத் தருவதோடு, இனியாவது காவல்துறை விழிப்புடன் செயல்பட்டு பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பங்களை தடுக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

கரூர் அருகே மருத்துவ முகாமில் பங்கேற்க வந்த தூய்மைப் பணியாளர்களை குப்பை அள்ளும் வாகனத்தில் அழைத்துச் சென்ற அவலம் – பேரிடர் மற்றும் பெருந்தொற்று காலங்களில் தன்னலம் கருதாமல் மக்களை பாதுகாத்திடும் தூய்மைப் பணியாளர்களுக்கு திமுக அரசு கொடுக்கும் மரியாதை இதுதானா ? கரூரில் மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமில் பங்கேற்க வந்த அம்மாவட்டத்தைச் சேர்ந்த தூய்மைப் பணியாளர்களை குப்பை அள்ளும் வாகனத்தில் அழைத்துச் சென்றிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன. மழை, வெள்ளம், புயல் போன்ற இயற்கை பேரிடர் காலங்கள் மட்டுமல்லாது, கொரோனா போன்ற பெருந்தொற்று காலங்களிலும் தன்னலம் கருதாமல், நேர காலம் பார்க்காமல் அயராது உழைக்கும் முன்களப் பணியாளர்களான தூய்மைப் பணியாளர்களை சக மனிதர்களாக கூட பார்க்கும் மனநிலை இல்லாத திமுக அரசின் அதிகாரப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது. பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட தூய்மைப் பணியாளர்களின் நியாயமான கோரிக்கைகளை கூட ஏற்க முன்வராத முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், ஆண்டுக்கு ஒருமுறை அவர்களுடன் அமர்ந்து உணவு உண்பது போல புகைப்படம் எடுத்துக் கொள்வதாலும், அவ்வப்போது புகழ்ந்து பேசுவதாலும் அவர்களுக்கு எந்தவித பயனுமில்லை. எனவே, தூய்மைப் பணியாளர்களை குப்பை அள்ளும் வாகனத்தில் அழைத்துச் சென்ற அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, மக்களை பாதுகாக்கும் பணியில் இரவு பகலாக ஈடுபடும் தூய்மைப் பணியாளர்களுக்கு இனிவரும் காலங்களில் உரிய மரியாதையை வழங்கிட வேண்டும் என முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:
தலைமைக் கழக அலுவலகம்
எண்: 15, வெஸ்ட் காட் ரோடு, ராயப்பேட்டை,
சென்னை – 600 014
மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.