மத்திய அரசின் தயான் சந்த் கேல் ரத்னா விருதுக்கு தேர்வாகியிருக்கும் தமிழகத்தைச் சேர்ந்த உலக செஸ் சாம்பியன் குகேஷ் அவர்களுக்கும், அர்ஜூனா விருதுக்கு தேர்வாகியிருக்கும் துளசிமதி முருகேசன், நித்யஸ்ரீ சுமதி சிவன் மற்றும் மனிஷா ராமதாஸ் ஆகியோருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், உலகளவிலான போட்டிகளில் பதக்கங்களை குவித்து தாய்நாட்டிற்கு பெருமை சேர்த்த துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மனு பாக்கர், ஹாக்கி அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் சிங் உட்பட மத்திய அரசின் பல்வேறு விருதுகளுக்கு தேர்வாகியிருக்கும் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளின் வெற்றிப்பயணம் தொடர வாழ்த்தி மகிழ்கிறேன். #NationalSportsAwards2024 #ArjunaAward #KhelRatna

அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நீதிகேட்டு போராடும் எதிர்கட்சியினரை தொடர்ந்து கைது செய்வது கடும் கண்டனத்திற்குரியது – ஜனநாயக ரீதியில் போராடுவோரின் குரல்வளையை நசுக்குவது தான் திராவிட மாடல் அரசின் சாதனையா ? பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நீதி வேண்டி சென்னை வள்ளுவர்கோட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்றவர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள் மாணவி ஒருவருக்கு நடைபெற்ற வன்கொடுமைச் சம்பவத்தை கண்டித்து கடந்த சில தினங்களுக்கு முன்பாக இதே வள்ளுவர்கோட்டத்தில் போராட முயன்ற பா.ஜ.க., நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளை கைது செய்த காவல்துறை, தற்போது பா.ம.க.வினரையும் வலுக்கட்டாயமாக கைது செய்து அடக்குமுறையை கையாண்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது கொரானோ காலகட்டத்திலும் கூட, தன் இருப்பைக் காட்டிக் கொள்வதற்காக தனது இல்லத்தில் தொடங்கி பல்வேறு இடங்களில் பல்வேறு விதமான போராட்டங்களை முன்னெடுத்து நாடகமாடிய திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், முதலமைச்சரான பின்பு, ஜனநாயக ரீதியிலான எதிர்க்கட்சிகளின் அறவழிப் போராட்டத்திற்குக் கூட அனுமதி மறுப்பதும், காவல்துறையை ஏவல்துறையாக பயன்படுத்தி அடக்குமுறையை கையாள்வதும் தான் திமுக கூறும் திராவிட மாடலா ? பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரின் படி பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கையை பாதுகாப்பதிலோ, வழக்கில் தொடர்புடைய மற்ற குற்றவாளிகளை கைது செய்யவோ எந்தவித நடவடிக்கையும் எடுக்காத தி.மு.க. அரசு, எதிர்க்கட்சித் தலைவர்களை ஒடுக்க நினைப்பதன் மூலம் வழக்கின் விசாரணையை மூடி மறைக்க முயற்சி செய்கிறதா? என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. எனவே, கைது செய்யப்பட்டுள்ள பா.ம.க.வினர் அனைவரையும் எந்தவித நிபந்தனையுமின்றி உடனடியாக விடுவிப்பதோடு, எதிர்க்கட்சிகளை ஒடுக்குவதில் செலுத்தும் கவனத்தை, பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்களை தடுத்து நிறுத்துவதிலும் செலுத்த வேண்டும் என முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.

சென்னை மாதவரம் அருகே 16 கிலோ மெத்தபெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல் – பட்டிதொட்டியெங்கும் பரவியிருக்கும் போதைப்பொருட்களின் நடமாட்டத்தின் தீவிரத்தை உணராமல் அதனை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசுக்கு கடும் கண்டனங்கள். சென்னை மாதவரம் அருகே போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட 5 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்த 16 கிலோ மெத்தபெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. கடந்த வாரம் மணிப்பூரில் இருந்து கடத்தி வரப்பட்ட 1.5 கோடி ரூபாய் மதிப்பிலான மெத்தபெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், தற்போது அதே மாதவரத்தில் மேலும் 16 கிலோ மெத்தபெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது தமிழகத்தில் போதைப்பொருட்கள் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு ஊடுருவியிருப்பதையே வெளிச்சம்போட்டு காட்டுகிறது. மாநிலத்தின் தலைநகர் தொடங்கி அனைத்துப் பகுதிகளிலும் நேரடியாகவும், ஆன்லைன் மூலமாகவும் தாராளமாகப் புழங்கும் போதைப்பொருள் விற்பனையை பலமுறை சுட்டிக்காட்டியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத திமுக அரசும், அதன் முதல்வரும் விளம்பரங்களின் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது போல நாடகமாடுவது கடும் கண்டனத்திற்குரியது. போதை மாத்திரை, ஊசி, சாக்லேட்டுகள் போன்ற பல்வேறு வடிவங்களில் பள்ளி, கல்லூரி மாணவர்களை குறிவைத்து விற்பனை செய்யப்படும் போதைப் பொருட்களால் மாணவர்களின் கல்வி மட்டுமல்லாது எதிர்காலமும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதாக பெற்றோர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே, போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 5 பேரையும் தீர விசாரித்து அதன் பின்னணியில் இருப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, இனியாவது பட்டிதொட்டியெங்கும் பரவியிருக்கும் போதைப்பொருட்களின் நடமாட்டத்தை கட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.

விண்வெளியில் விண்கலன்களை ஒருங்கிணைக்கும் ஆய்வுப் பணிகளை மேற்கொள்வதற்காக SpaDeX (Space Docking Experiment) திட்டத்தின் கீழ் இரண்டு விண்கலன்களை பி.எஸ்.எல்.வி சி-60 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியிருக்கும் இஸ்ரோ விஞ்ஞானிகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். விண்வெளியில் ஆய்வு மையம், சந்திரயான் 4 போன்ற இந்தியாவின் எதிர்கால லட்சியத் திட்டங்களுக்கு முன்னோட்டமான SpaDeX திட்டத்தினை தொடர்ந்து மேலும் பல சாதனைகளை படைக்க இஸ்ரோ விஞ்ஞானிகள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.