தலைமைக் கழக அறிவிப்பு: சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர்கள் நியமனம்: தமிழகத்தில் நடைபெறவிருக்கும் 2026 சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கான கழகப் பணிகளை விரைவுப்படுத்திடும் வகையில், முதற்கட்டமாக கீழ்க்காணும் சட்டமன்றத் தொகுதிகளுக்கான பொறுப்பாளர்கள் இன்று முதல் நியமிக்கப்படுகிறார்கள். புதிதாக நியமிக்கப்பட்டுள்ள சட்டமன்றத்தொகுதி பொறுப்பாளர்களுக்கு, அந்தந்த கழக மாவட்டத்திற்குட்பட்ட மாவட்டக் கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணிகளின் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், பகுதி, ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள், ஊராட்சி செயலாளர்கள், வட்ட, வார்டு, கிளைக் கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் என அனைவரும் முழு ஒத்துழைப்பை நல்கிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். -டிடிவி தினகரன், கழக பொதுச்செயலாளர், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்.

பேரறிஞர் அண்ணா, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் இதயதெய்வம் அம்மா ஆகிய ஆளுமைகளின் பேரன்பிற்குரியவராகத் திகழ்ந்த நாவலர் நெடுஞ்செழியன் அவர்களின் புதல்வர் திரு.மதிவாணன் அவர்கள் உடல்நலக்குறைவால் இயற்கை எய்திய செய்தி மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் அளிக்கிறது. திரு.மதிவாணன் அவர்களை இழந்துவாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பழங்குடியின விவசாயி மர்ம மரணம் – விசாரணை எனும் பெயரில் இன்னும் எத்தனை உயிரைப் பறிக்கத் திட்டமிட்டிருக்கிறது திமுக அரசு?வனத்துறை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள மேல்குருமலை பழங்குடி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி திரு.மாரிமுத்து அவர்கள் மர்மமான முறையில் உயிரிழந்திருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன. கடந்த ஜூலை 29ஆம் தேதி புலிப்பல் வைத்திருந்ததாகக் கூறி விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட திரு.மாரிமுத்து அவர்கள், குளியலறையில் தற்கொலை செய்து கொண்டதாக முதலில் அறிவித்த வனத்துறை, தற்போது வனச்சரகர்கள் இருவரை சஸ்பெண்ட் செய்திருப்பது முன்னுக்குப்பின் முரணாக அமைந்துள்ளது. மன தைரியமிக்க திரு.மாரிமுத்து அவர்கள் தற்கொலை செய்துகொள்ள வாய்ப்பில்லை எனவும், விசாரணை எனும் பெயரில் வனத்துறையினரின் துன்புறுத்தலால் உயிரிழந்திருக்கலாம் எனக்கூறி மலைக்கிராம பழங்குடி மக்களும், பல்வேறு அமைப்பினர்களும் புகார் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருப்புவனம் அருகே கோயில் காவலாளி திரு.அஜித்குமார் அவர்கள் காவல் விசாரணை எனும் பெயரில் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஏற்படுத்திய அதிர்வலைகள் அடங்கும் முன்பாகவே, உடுமலை அருகே நடைபெற்றிருக்கும் இச்சம்பவம் தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி தான் நடைபெறுகிறதா? என்ற கேள்வியை எழுப்புகிறது. எனவே, இவ்வழக்கு தொடர்பாக விரிவான விசாரணையை மேற்கொண்டு உண்மையை வெளிக்கொண்டு வருவதோடு, திரு.மாரிமுத்து அவர்கள் வனத்துறையினரால் துன்புறுத்தப்பட்டது உறுதியாகும் பட்சத்தில் தொடர்புடைய அனைவரின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வனத்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.