உடல் உழைப்பின் மேன்மையையும், உழைப்பாளர்களின் மகத்துவத்தையும் உலகிற்கு உணர்த்தும் இந்நாளில் தொழிலாளர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த மே தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு, உழைப்பிற்கு ஏற்ற ஊதியமின்றி, சில முதலாளிகளின் கோரப்பிடியில் அடிமைப்படுத்தப்பட்டிருந்த உழைக்கும் வர்க்கம், ஒன்றுகூடி ஆர்ப்பரித்து போராடி தங்களின் உரிமைகளை வென்றெடுத்த இந்த மே தினத் திருநாள் ”உழைப்பவர்களே உயர்ந்தவர்கள்” என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்கிறது. “உழைப்பிற்கு என்றும் உயர்வு” என்ற வாக்கை மனதில் நிலை நிறுத்தி ஒட்டுமொத்த தேசத்தின் வளர்ச்சி மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்காக அயராது உழைக்கும் தொழிலாளர் பெருமக்கள் அனைவரும் எல்லா வளமும் நலமும் பெற்று இன்புற்று வாழ்ந்திட வேண்டும் எனக்கூறி மீண்டும் ஒருமுறை எனது நெஞ்சம் நிறைந்த மே தின நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் மூன்று தொழிலாளர்கள் உயிரிழப்பு – பட்டாசு ஆலைகளில் தொடரும் விபத்துகளுக்கும், உயிரிழப்புகளுக்கும் முற்றுப்புள்ளி வைப்பது எப்போது ?சிவகாசி அருகே எம்.புதுப்பட்டியில் இயங்கிவரும் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் மூன்று தொழிலாளர்கள் உயிரிழந்திருப்பதாகவும், மேலும் பலர் இடர்பாடுகளில் சிக்கியிருப்பதாகவும் ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. இந்தியாவின் மொத்த பட்டாசுகளில் சரி பாதிக்கும் மேலாக உற்பத்தி செய்யப்படும் சிவகாசியில் தொடரும் பட்டாசு ஆலை விபத்துகளையும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளையும் தடுக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்காத விருதுநகர் மாவட்ட நிர்வாகம் மற்றும் திமுக அரசின் அலட்சியப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது.சிவகாசியில் கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் ஏற்பட்ட பட்டாசு ஆலை விபத்துகளில் சிக்கி நூற்றுக்கும் அதிகமான தொழிலாளர்கள் உயிரிழந்திருக்கும் நிலையிலும், பட்டாசு ஆலை தொடர்பான பாதுகாப்பு விதிமுறைகளை திமுக அரசு முழுமையாக நடைமுறைப்படுத்தாததே அடுத்தடுத்த உயிரிழப்புகளுக்கு காரணம் என அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே, மீட்புப் பணிகளை தீவிரப்படுத்தி பட்டாசு ஆலை விபத்தில் சிக்கியிருக்கும் தொழிலாளர்களை பாதுகாப்பாக மீட்டு அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிப்பதோடு, பட்டாசு ஆலைகளில் உரிய ஆய்வை மேற்கொண்டு தொழிலாளர்களின் உயிர் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனவும் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (ISRO) முன்னாள் தலைவர் பத்மஸ்ரீ திரு.கஸ்தூரி ரங்கன் அவர்கள் இயற்கை எய்திய செய்தி மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் அளிக்கிறது. ஜி.எஸ்.எல்.வி ராக்கெட் உட்பட இந்திய விண்வெளி ஆராய்ச்சிக்காக அளப்பரிய பங்களிப்பை வழங்கிய விஞ்ஞானி திரு.கஸ்தூரி ரங்கன் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

என்.எல்.சி நிறுவனத்தின் பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்யும் முடிவை தடுத்து நிறுத்திய பெருமை இதயதெய்வம் அம்மா அவர்களையே சாரும் – வரலாற்றை மாற்றித் திரிக்க முயற்சிக்கும் முதலமைச்சரின் அறிக்கை கடும் கண்டனத்திற்குரியது. நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் சங்க அங்கீகாரத்திற்கான தேர்தல் இன்று நடைபெறும் நிலையில், மத்திய அரசு என்.எல்.சி பங்குகளை விற்று தனியார் மயத்தை புகுத்த முயற்சித்த நேரத்தில் திமுக எடுத்த நடவடிக்கையால் அது தடுத்து நிறுத்தப்பட்டதாக முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் தன் அறிக்கையின் மூலம் உலக மகா பொய்யை மக்கள் மத்தியில் பரப்ப முயற்சி செய்திருக்கிறார். இந்தியாவின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிப்பதோடு, கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக எரிசக்தித் துறையில் அளப்பரிய சாதனைகளை படைத்துக் கொண்டிருக்கும் என்.எல்.சி நிறுவனத்தின் பங்குகளை கடந்த 2013 ஆம் ஆண்டு தனியாருக்கு விற்பனை செய்ய முன்வந்த அப்போதைய மத்திய காங்கிரஸ் அரசின் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்திய பெருமைக்குரியவர் இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் மட்டுமே என்பதை அந்நிறுவனத்தில் பணியாற்றும் ஒவ்வொரு தொழிலாளர்களும் நன்கு அறிவர். தமிழக மக்களின் உயிரோடும் உணர்வோடும் கலந்திட்ட நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் பங்குகளை 2013 ஆம் ஆண்டு தனியாருக்கு விற்பனை செய்ய முன்வந்த போது காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் அங்கம் வகித்து கள்ள மவுனம் காத்த திமுக, தற்போது அதனை தடுத்து நிறுத்தியது நாங்கள் தான் என தம்பட்டம் அடிப்பது முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் செயலாகும். 2013 ஆம் ஆண்டு மத்திய காங்கிரஸ் ஆட்சியில் திமுக அங்கம் வகித்த போது மட்டுமல்ல, அதற்கு முன்பாக 2003, 2006 காலகட்டங்களிலும் என்.எல்.சி நிறுவனத்தின் பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்ய மத்திய அரசு முயன்ற போதெல்லாம் தன்னுடைய துணிச்சலான நடவடிக்கைகளால் அவற்றை தடுத்து நிறுத்தியதோடு, என்.எல்.சி யின் பங்குகளை தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்களின் மூலம் வாங்கிய பெருமை புரட்சித்தலைவி அம்மா அவர்களையே சாரும் என்பதை எவராலும் மறுக்க முடியாது. எனவே, தான் செய்த துரோகங்களை மறைக்க வரலாற்றை மாற்றித் திரிக்க பார்க்கும் திமுகவிற்கு இன்று நடைபெறும் என்.எல்.சி சங்க அங்கீகார தேர்தலில் அந்நிறுவன தொழிலாளர்கள் மட்டுமல்லாது அடுத்து வரும் சட்டமன்றத் தேர்தலில் ஒட்டுமொத்த தமிழக மக்களும் தகுந்த பாடத்தை புகட்டுவார்கள் என்பதை தெரிவித்து கொள்கிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.