சென்னை மடிப்பாக்கத்தில் குறுகிய சாலையில் முந்திச் செல்ல வழிவிடவில்லை எனக்கூறி அம்மா மக்கள் முன்னேற்ற கழக செங்கல்பட்டு வடக்கு மாவட்ட சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு பிரிவு மாவட்டச் செயலாளர் திரு.அழகிரி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியவர்கள் மீது காவல்துறை இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது கண்டனத்திற்குரியது. மழைநீர் வடிகால் பணி நடைபெற்று வரும் குறுகலான சாலையில் சென்று கொண்டிருந்த போது திரு.அழகிரி மற்றும் அவரது குடும்பத்திரை வழிமறித்து அடையாளம் தெரியாத சில நபர்கள், வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியிருப்பதாகவும் நாளிதழ்களில் செய்தி வெளியாகியுள்ளன. பாதிக்கப்பட்டவர்கள் வழங்கிய புகார் மீது காவல்துறையினர் இதுவரை நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்கு ஆளுங்கட்சி பிரமுகர்களின் தலையீடே காரணம் என சொல்லப்படுகிறது. ஆகவே, எவ்வித அழுத்தத்திற்கும் அடிபணியாமல் உரிய விசாரணை மேற்கொண்டு தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என காவல்துறையை கேட்டுக் கொள்கிறேன்.

வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்க உள்ள நிலையில் சென்னை மாநகராட்சி உட்பட தமிழ்நாடு முழுவதும் மந்த கதியில் நடைபெற்று வரும் சாலை மற்றும் மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன். வடகிழக்கு பருவமழைக்கு முன்னதாகவே பெய்து வரும் கனமழையின் காரணமாக சென்னை உட்பட தமிழ்நாடு முழுவதும், மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளுக்காக ஆங்காங்கே தோண்டப்பட்டிருக்கும் பள்ளங்களில், மழைநீர் தேங்குவதால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். மேலும் பல இடங்களில் வடிகால் மற்றும் பல்வேறு பணிகளுக்காக தோண்டப்பட்டுள்ள பள்ளங்களில் முறையான அறிவிப்பு பலகைகளோ, பாதுகாப்பு தடுப்புகளோ வைக்கப்படாத காரணத்தினால் அவ்வப்போது விபத்துக்கள் ஏற்படுவதாகவும் நாளிதழ் மற்றும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகின்றன. எனவே பருவமழை தொடங்குவதற்கு முன்னதாகவே மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிப்பதோடு, பணிகள் நடைபெற்று வரும் இடங்களில் முறையான அறிவிப்பு பலகைகள் மற்றும் தடுப்புகள் வைத்து விபத்தை தடுக்கும் வகையில் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை கேட்டுக்கொள்கிறேன்.

பிரேசிலின் ரியோவில் நடைபெற்ற உலகக் கோப்பை 10 மீட்டர் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ள இளவேனில் வாலறிவனுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். 2019 ஆம் ஆண்டை தொடர்ந்து இரண்டாவது முறையாக உலகக்கோப்பை தொடரில் தங்கப் பதக்கத்தை வென்றுள்ள தங்க மங்கை இளவேனில் வாலறிவன் தொடர்ந்து வெற்றிகளை குவித்து இந்தியாவின் நம்பிக்கையாக திகழ வாழ்த்துகிறேன். அதே போல யூரோப்பில் நடைபெற்று வரும் டைமண்ட் லீக் தொடரின் ஈட்டி எறிதல் பிரிவில் வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ள இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் நீரஜ் சோப்ராவிற்கும் நெஞ்சம் நிறைந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்வதோடு அடுத்தடுத்து நடைபெறும் சர்வதேச போட்டிகளில் பதக்கங்களை வென்று தாய் நாட்டிற்கு பெருமை சேர்க்க வாழ்த்துகிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.