தமிழ்நாட்டில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் இயங்கும் நியாய விலைக் கடைகளுக்கு வழங்கப்படும் மானியத்தை வழங்காமல் காலம் தாழ்த்தும் தமிழக அரசின் நடவடிக்கை கண்டனத்திற்குரியது. தமிழகத்தில் செயல்பட்டு வரும் 33 ஆயிரம் நியாய விலைக்கடைகளுக்கு வழங்கப்படும் மானியங்கள் உரிய நேரத்தில் வழங்கப்படாத காரணத்தினால் செலவினங்களை சமாளிக்க முடியாமல் கூட்டுறவு சங்கங்கள் திணறி வருவதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. கூட்டுறவு சங்கங்களுக்கு ஆண்டுதோறும் தமிழக அரசு வழங்கும் மானியத் தொகை மூலமாகவே நியாய விலைக்கடைகளின் வாடகை, பணியாளர்களுக்கு ஊதியம், பணிக்கால பயன்கள், மின்கட்டணம் உள்ளிட்ட அனைத்து செலவினங்களும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்க வேண்டிய மொத்த நிலுவை தொகையில், கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட ரூ.225 கோடியும் தற்போதுவரை விடுவிக்கப்படவில்லை என்பதால் நியாயவிலைக்கடை ஊழியர்களுக்கு ஊதியம் கூட வழங்க முடியாத சூழல் ஏற்பட்டிருப்பதாக புகார் எழுந்துள்ளது. எனவே, ஏழை, எளிய மக்களின் அன்றாட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் தேவையை பூர்த்தி செய்யும் நியாய விலைக்கடைகள் எவ்வித சிரமமுமின்றி இயங்குவதற்கு உரிய நேரத்தில் மானியத் தொகையை விடுவிப்பதை உறுதி செய்ய வேண்டும் என தமிழக அரசை கேட்டுக் கொள்கிறேன்.

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு மற்றும் காவிரி மேலாண்மை ஆணையத்தின் இறுதி உத்தரவிற்கு முரணாக காவிரியின் குறுக்கே அணை கட்ட தீவிரம் காட்டும் கர்நாடக அரசின் நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது. காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கு தேவையான நிலம் கையகப்படுத்தும் பணிகளை காங்கிரஸ் அரசு தீவிரப்படுத்தும் என்ற கர்நாடக மாநில ஆளுநர் அவர்களின் குடியரசு தின உரை மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்டும் கேரள அரசின் முயற்சியும், காவிரியின் குறுக்கே மேகதாது அணையை கட்டியேத் தீருவோம் என்ற கர்நாடக அரசின் பிடிவாதப் போக்கும் தமிழக விவசாயிகளுக்கு இழைக்கும் மாபெரும் துரோகம் மட்டுமல்லாது அரசியலமைப்புச் சட்டத்திற்கும் எதிரானதாகும். காவிரியின் குறுக்கே கால் நூற்றாண்டுக்கும் மேலாகவே அணை கட்டும் முயற்சியில் கர்நாடக அரசு ஈடுபட்டிருந்தாலும், திமுக ஆட்சி பொறுப்பை ஏற்ற பின்பே புதிய அணை கட்டுவதற்கான பூர்வாங்க பணிகளில் தீவிரம் காட்டி வருவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். போதிய நீர் இருப்பு இருந்தும் தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக அரசினாலும், நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னரும் உரிய நீரை பெற்றுத் தர முடியாத திமுக அரசினாலும் டெல்டா பகுதி விவசாயிகள் வறட்சியின் பிடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கின்றனர். எனவே, தமிழகத்தை பாலைவனமாக்கும் நோக்கில் கட்டப்படும் மேகதாது அணைக்கான பூர்வாங்கப் பணிகளை சட்டரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் அழுத்தம் கொடுத்து தடுத்து நிறுத்தி, தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட வேண்டும் என முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை கேட்டுக் கொள்கிறேன்.

முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்ட முயற்சிக்கும் கேரள அரசின் நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது – தென்மாவட்ட மக்களை வஞ்சிக்கும் கேரள அரசின் முயற்சியை ஆரம்ப நிலையிலேயே தடுத்து நிறுத்த வேண்டும். கேரள சட்டப்பேரவை கூட்டத்தொடரின் ஆளுநரின் உரையில் முல்லைப் பெரியாற்றில் புதிய அணைகட்டுவதே கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களின் பாதுகாப்பிற்கு ஒரே தீர்வு எனவும், தமிழகத்துடன் சுமூக உடன்பாட்டிற்கு தேவையான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் எனவும் குறிப்பிடப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் தொடர் சட்டப் போராட்டத்தால் தேனி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் திண்டுக்கல் மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்திற்கு உயிர் நாடியாக விளங்கும் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்துவதற்கான உத்தரவை உச்சநீதிமன்றம் பிறப்பித்தது. உச்சநீதிமன்றம் அமைத்த கண்காணிப்பு மற்றும் நிபுணர் குழு பலமுறை மேற்கொண்ட ஆய்வில் முல்லைப் பெரியாறு பாதுகாப்பாக இருப்பதை உறுதிபடுத்திய பின்னரும் புதிய அணையை கட்டியே தீருவோம் என்ற கேரள அரசின் பிடிவாதப்போக்கை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. எனவே, புதிய அணை கட்டும் கேரள அரசின் முயற்சியை ஆரம்பநிலையிலேயே தடுத்து நிறுத்துவதோடு, உச்சநீதிமன்ற உத்தரவின்படி பேபி அணையை பலப்படுத்தி முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 152 அடியாக உயர்த்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

பத்ம விபூஷண் விருதுக்கு தேர்வாகியுள்ள குடியரசு முன்னாள் துணைத் தலைவர் திரு.வெங்கையா நாயுடு அவர்கள், திரைப்பட நடிகர் திரு.சிரஞ்சீவி அவர்கள், நடனக்கலைஞர் வைஜெயந்திமாலா அவர்கள், நாட்டியக் கலைஞர் பத்மா சுப்ரமணியம் அவர்கள், ஆகியோருக்கு எனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். மறைந்த கேப்டன் திரு. விஜயகாந்த் அவர்களுக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டிருப்பதும் மனநிறைவையும் மிகுந்த மகிழ்ச்சியையும் அளிக்கிறது. அதே போல, பத்ம ஸ்ரீ விருதை பெற்றிருக்கும் கோவையைச் சேர்ந்த வள்ளி ஒயில் கும்மி நடனக் கலைஞர் பத்திரப்பன் அவர்கள், சர்வதேச ஸ்குவாஷ் விளையாட்டு வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பா அவர்கள், எழுத்தாளர் ஜோ டி குரூஸ் அவர்கள், நாதஸ்வர கலைஞர் சேசம்பட்டி டி.சிவலிங்கம் அவர்கள், மருத்துவர் நாச்சியார் அவர்கள் உட்பட மத்திய அரசின் பத்ம விருதுகளை பெற்றிருக்கும் அனைவரும் அவரவர் துறைகளில் தொடர்ந்து சாதனை படைக்க மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:
தலைமைக் கழக அலுவலகம்
எண்: 15, வெஸ்ட் காட் ரோடு, ராயப்பேட்டை,
சென்னை – 600 014
மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2022 AMMK. All Rights Reserved.