விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் அப்பாவி தொழிலாளர்கள் 7 பேர் பலி – பட்டாசு ஆலைகளை கண்காணிக்க தனிக்குழுவை ஏற்படுத்தி விபத்துக்களை தவிர்க்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே சின்னகாமன்பட்டியில் இயங்கி வந்த தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் அங்கு பணியாற்றி வந்த 7 தொழிலாளர்கள் உயிரிழந்திருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த வேதனையையும், வருத்தத்தையும் அளிக்கிறது. தனியார் தொழிற்சாலைகளில் பட்டாசு தயாரிப்பதற்கான விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படாததும், அங்கு பணியாற்றும் தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு உறுதி செய்யப்படாததுமே அடுத்தடுத்த விபத்துகளுக்கும் அப்பாவி தொழிலாளர்களின் உயிரிழப்புக்கும் முக்கிய காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.பட்டாசு ஆலைகளில் ஏற்படும் விபத்திற்கான காரணங்களை ஆய்வு செய்து அதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டிய மாவட்ட நிர்வாகமும், திமுக அரசும் அதற்கான எந்தவித முயற்சியையும் முன்னெடுக்காததன் விளைவு தற்போது 7 அப்பாவி தொழிலாளர்களின் உயிர் பறிபோயிருப்பதாக அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே, இனியும் இதுபோன்ற துயரச் சம்பவங்கள் தொடராத வகையில் தனி கண்காணிப்புக்குழுவை உருவாக்கி பட்டாசு ஆலைகளில் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை ஆய்வு மேற்கொள்வதோடு, அங்கு பணியாற்றும் தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு விதிமுறைகள் முழுமையாக பின்பற்றப்படுவதை உறுதி செய்திட வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

எல்லை தாண்டியதாகக் கூறி கடந்த இரு தினங்களில் தமிழக மீனவர்கள் 15 பேர் கைது – இலங்கை கடற்படையினரின் தொடர் அராஜகத்திற்கு நிரந்தரமான முற்றுப்புள்ளி வைப்பதே ஒரே தீர்வு . ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள் 7 பேரை மன்னார் வடக்கு கடற்பரப்பு அருகே எல்லை தாண்டியதாக கூறி கைது செய்த இலங்கை கடற்படை அவர்களின் படகையும் பறிமுதல் செய்திருப்பதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. நேற்று முன் தினம் இதே ராமேஸ்வரத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற 8 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு அந்நாட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது மேலும் 7 பேரை கைது செய்திருப்பது ஒட்டுமொத்த மீனவர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. வாழ்வாதாரத்திற்காக கடலுக்குச் செல்லும் தமிழக மீனவர்கள் ஒருபுறம் இலங்கை கடற்கொள்ளையர்களால் தாக்குதலுக்கு உள்ளாவதும், மறுபுறம் கடற்படையினரால் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டு சித்திரவதைக்குள்ளாவதும் தொடர்கதையாகி வருவது கடும் கண்டனத்திற்குரியது. தமிழக மீனவர்கள் ஒவ்வொரு கைது சம்பவத்தின் போதும் மத்திய அரசுக்கு கடிதம் எழுதிவிட்டதோடு தன் கடமை நிறைவடைந்து விட்டதாக கருதும் தமிழக முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களால் எந்தவித தீர்வும் கிடைக்காது என்ற மனநிலைக்கு ஒட்டுமொத்த மீனவர்களும் தள்ளப்பட்டுள்ளனர். எனவே, இனியும் இதுபோன்ற கைது சம்பவங்கள் தொடராத வகையில் இலங்கை கடற்படையினரின் அட்டூழியத்திற்கும், அராஜகத்திற்கும் நிரந்தர தீர்வு காணும் வகையில் உரிய நடவடிக்கை எடுத்து தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திட வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறேன்.

மனித உயிர்களைக் காக்கும் மகத்தான பணிக்காக தன் வாழ்நாளின் பெரும்பகுதியை அர்ப்பணித்துக் கொண்டிருக்கும் மருத்துவர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த தேசிய மருத்துவர்கள் தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.நோயாளிகளின் நல்வாழ்வுக்காக நேரம், காலம் பார்க்காமல் ஓய்வின்றி உழைத்துக் கொண்டிருக்கும் அரசு மருத்துவர்களின் நீண்ட நாள் கோரிக்கைகளான தகுதிக்கேற்ப ஊதியம், நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவர்கள் நியமனம், மருத்துவமனைகளுக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் ஆகியவற்றை நடப்பாண்டிலாவது நிறைவேற்றித் தந்திட வேண்டும் என முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.