சென்னை மாநகராட்சியின் கீழ் இயங்கும் மருத்துவமனைகளில் நர்சிங் படிக்காதவர்களை செவிலியர்களாக நியமிக்கத் திட்டமா? பொதுமக்கள் மற்றும் நோயாளிகளின் உடல்நலத்தோடு விளையாடும் சென்னை மாநகராட்சியின் முடிவு கடும் கண்டனத்திற்குரியது. நர்சிங் படிப்பு படிக்காதவர்களை பணிமூப்பு அடிப்படையில் சென்னை மாநகராட்சியின் கீழ் இயங்கிவரும் அரசு மருத்துவமனைகளில் செவிலியர்களாக நியமிக்க முடிவு செய்து அது தொடர்பாக வட்டார துணை ஆணையர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. சென்னை மாநகராட்சி மருத்துவமனைகளில் செவிலியர்கள் நியமனத்திற்கான தகுதிகளை எந்தவித முன்னறிவிப்புமின்றி மாற்றியதோடு, நர்சிங் படிக்காதவர்களை பணிமூப்பு அடிப்படையில் மட்டுமே செவிலியர்களாக நியமிக்க முயற்சிக்கும் சென்னை மாநகராட்சியின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது. ஊட்டச்சத்து ஆலோசனை வழங்குவதற்கும், தடுப்பூசி போடுவதற்கும் பயிற்சி வழங்கப்பட்டிருப்பவர்களை செவிலியர்களாக நியமித்தால் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சிகிச்சையில் குறைபாடுகள் ஏற்படுவதோடு நோயாளிகளும் மிகுந்த பாதிப்புக்குள்ளாவர்கள் என எம்.ஆர்.பி செவிலியர் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது. எனவே, போதுமான கல்வித் தகுதி இல்லாதவர்களை பணிமூப்பு அடிப்படையில் செவிலியர்களாக நியமிக்கும் முடிவை உடனடியாக கைவிடுவதோடு, தேர்வாணையத்தின் மூலம் முறைப்படி தேர்வு செய்யப்பட்டவர்களையே செவிலியர்களாக நியமிக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி நிர்வாகத்தை வலியுறுத்துகிறேன்.

மழை வெள்ளத்தால் தத்தளிக்கும் மதுரை மாநகரம் – பாதிக்கப்பட்ட மக்களுக்கு அடிப்படை வசதிகளை கூட செய்து தராத திமுக அரசின் அலட்சியப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது. மதுரையில் கடந்த சில தினங்களாக பெய்துவரும் தொடர் கனமழையால் மாநகரத்தின் பெரும்பாலான குடியிருப்புகளுக்குள் வெள்ளநீர் புகுந்திருப்பதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியுள்ளது. மதுரை கோரிப்பாளையம், சிம்மக்கல், தல்லாகுளம், தமுக்கம், மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் என அனைத்து இடங்களும் வெள்ளக்காடாக காட்சியளிக்கும் நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடிநீர், உணவு, பால், மருந்துகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கூட மாவட்ட நிர்வாகத்தால் செய்து தரப்படாதது கடும் கண்டனத்திற்குரியது. காலநிலை மாற்றத்தால் ஏற்படும் விளைவுகளை முன்கூட்டியே கணித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததும், மழைநீர் செல்வதற்கான கால்வாய்களையும், ஓடைகளையும் முறையாக தூர்வாராததுமே பாதிப்புக்கு காரணம் என சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் பொதுமக்களும் குற்றம்சாட்டியுள்ளனர். எனவே, மதுரையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை உடனடியாக செய்து தருவதோடு, இனிவரும் பெருமழைக் காலங்களில் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாவண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட நிர்வாகத்தையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:
தலைமைக் கழக அலுவலகம்
எண்: 15, வெஸ்ட் காட் ரோடு, ராயப்பேட்டை,
சென்னை – 600 014
மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.