திருப்பூர், ஈரோட்டை தொடர்ந்து சேலத்திலும் வயதான தம்பதியினர் படுகொலை – கொலைக் குற்றவாளிகளை கண்டறிவதில் அலட்சியமாக செயல்படும் திமுக அரசின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது. சேலம் மாவட்டம் ஜாகிர் அம்மாபாளையம் பகுதியில் வீட்டில் தனியாக வசித்துவந்த வயதான தம்பதியினர் அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன. திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட தமிழகத்தின் மேற்கு மண்டலத்தில் அண்மைக்காலமாகவே தனியாக வசித்து வரும் முதியவர்களை நோட்டமிட்டு கொலை செய்து கொள்ளையில் ஈடுபட்டு வரும் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாத திமுக அரசால் தற்போது மேலும் ஒரு இரட்டைக் கொலை அரங்கேறியுள்ளது. ஒவ்வொரு கொலைச் சம்பவத்தின் போதும் பல்வேறு தனிப்படைகளை அமைத்தும், தீவிர தேடுதல் வேட்டை நடத்தியும் இதுவரை கொலைக் குற்றவாளிகளை நெருங்க முடியாமல் திணறி வரும் காவல்துறையின் மீதான மக்களின் நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கியுள்ளது. எனவே, சேலத்தில் வயதான தம்பதியினர் கொலை வழக்கை விரிவாக விசாரித்து கொலைக் குற்றவாளிகளை கண்டறிந்து கடுமையான தண்டனை விதிப்பதோடு, தனியாக வசிக்கும் முதியவர்களின் பாதுகாப்பை உறுதி செய்திட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என காவல்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.

மருத்துவமனையின் இன்றியமையாத ஊழியர்களாக, மக்களை பாதுகாப்பதில் அளப்பரிய அன்பு கொண்டவர்களாக, சேவை மனப்பான்மை மிக்க அன்னையர்களின் மறுபிறவியாக மருத்துவமனைகளில் மருத்துவர்களுக்கு அடுத்த நிலையில் பணியாற்றிவரும் செவிலியர்களின் அர்ப்பணிப்பு உணர்வை போற்றிக் கொண்டாடும் உலக செவிலியர் தினம் இன்று. செவிலியர்கள் அனைவருக்கும் வாழ்த்துக் கூறி மகிழும் இந்நேரத்தில், தேர்தலுக்கு முன்பாக திமுக அளித்த தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றிருந்த ஒப்பந்த செவிலியர்கள் பணிநிரந்தரம், மகப்பேறு விடுப்பு, வெளிப்படையான கலந்தாய்வு, காலிப்பணியிடங்கள் நிரப்புதல் உள்ளிட்ட அவர்களின் நீண்டகால கோரிக்கைகளையும் நிறைவேற்றிட முன்வர வேண்டும் என முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்

மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற வாழ்வியல் தத்துவத்தில் முதலிடம் வகிப்பதோடு, அதீத அன்புக்கும், அளவற்ற பாசத்திற்கும், அர்ப்பணிப்பு உணர்வுக்கும் சிறந்த அடையாளமாக திகழும் அன்னையர்களை போற்றிக் கொண்டாடும் அன்னையர்களின் தினம் இன்று.. தமிழக மக்களின் மகிழ்ச்சியே தனது லட்சியம் எனக்கூறி நாடுபோற்றும் நல்ல பல திட்டங்களை தாயுள்ளத்தோடு செயல்படுத்தி ஏழை, எளிய மக்களின் வாழ்வில் வளத்தையும், வசந்தத்தையும் ஏற்படுத்திய இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களை இந்நேரத்தில் நினைவுகூற நாம் அனைவரும் கடமைப்பட்டுள்ளோம். அன்பில் இணையற்றவர்களாக, பண்பில் நிகரற்றவர்களாக, பாசத்தில் ஈடற்றவர்களாக எத்தகைய சவால்களையும், சோதனைகளையும் துணிச்சலுடன் எதிர்கொண்டு வாழும் தெய்வங்களாக வலம் வரும் அன்னையர்கள் அனைவரையும் இந்நாளில் போற்றி வணங்கிடுவோம்.

கழக உடன்பிறப்புகளின் உற்ற தோழராக, என் அன்பிற்கும், பாசத்திற்கும் உரியவராக, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் படைத்தளபதியாக செயல்பட்ட அன்பு சகோதரர் மேலூர் திரு.ஆர்.சாமி அவர்களின் 7 ஆம் ஆண்டு நினைவுதினம் இன்று.. எத்தனையோ சோதனைகள் சூழ்ந்த போதிலும், எண்ணிலடங்கா தடைகள் குறுக்கிட்ட போதிலும் விசுவாசத்தின் அடையாளமாக தன் இறுதி மூச்சு வரை அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் வளர்ச்சியை மட்டுமே குறிக்கோளாய் கொண்டிருந்த அன்பு சகோதரர் மேலூர் திரு.ஆர்.சாமி அவர்கள் ஆற்றிய பணிகள் ஒவ்வொரு நாளும் அவரை நினைவுபடுத்திக் கொண்டே இருக்கும்.

ஜம்மு காஷ்மீரின் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் பாகிஸ்தான் நடத்திய தொடர் தாக்குதலில், அங்கு மக்களை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இந்திய ராணுவ வீரர் திரு.முரளி நாயக் அவர்கள் வீரமரணம் அடைந்த செய்தி மிகுந்த வேதனையையும், வருத்தத்தையும் அளிக்கிறது. திரு.முரளி நாயக் அவர்களை இழந்துவாடும் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் சக ராணுவத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்ளும் அதே நேரத்தில், பாகிஸ்தானின் பயங்கரவாதத்திற்கு எதிராக நாட்டையும், நாட்டு மக்களையும் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் நமது ராணுவ வீரர்களுக்கு நாம் அனைவரும் உறுதுணையாக நிற்போம்.

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.