சென்னை எழும்பூரில் அடையாளம் தெரியாத கும்பலால் தாக்குதலுக்கு உள்ளான காவல் உதவி ஆய்வாளர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழப்பு – காவல்துறையினருக்கே பாதுகாப்பில்லாத தமிழகத்தில் பொதுமக்கள் எப்படி பாதுகாப்பாக இருக்க முடியும் ? சென்னை எழும்பூரில் கடந்த 18 ஆம் தேதி அடையாளம் தெரியாத போதைக் கும்பலால் தாக்குதலுக்கு உள்ளாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ஆயுதப்படை உதவி ஆய்வாளர் திரு .ராஜாராமன் அவர்கள் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்திருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த வேதனையையும், வருத்தத்தையும் அளிக்கிறது. காவல் உதவி ஆய்வாளர் திரு. ராஜாராமன் அவர்கள் தாக்குதலுக்கு உள்ளாகி ஒரு வாரம் கடந்த நிலையிலும், குற்றவாளிகளை இதுவரை கண்டறிய முடியாத காவல்துறையால், தமிழகத்தில் வசிக்கும் பொதுமக்களின் உயிருக்கும் உடைமைக்கும் எப்படி பாதுகாப்பு வழங்க முடியும் ? என்ற கேள்வி அனைவரின் மத்தியிலும் எழுந்துள்ளது. தமிழகத்தில் பட்டப் பகலில், வீடுகளில், மக்கள் அதிகமாக நடமாடும் இடங்களில், காவல்நிலையங்களுக்கு அருகிலேயே அன்றாடம் சர்வசாதாரணமாக அரங்கேறிக் கொண்டிருக்கும் அடுத்தடுத்த கொலைச் சம்பவங்கள் தமிழகத்தில் சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை வெளிச்சம்போட்டு காட்டுகின்றன. எனவே, காவல் உதவி ஆய்வாளர் திரு.ராஜாராமன் அவர்கள் மீது கொலை வெறித்தாக்குதல் நடத்திய கும்பலை கைது செய்து கடுமையான தண்டனை வழங்குவதோடு, தமிழகத்தின் தலைவிரித்தாடும் போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனை, சட்டவிரோத மதுவிற்பனை, கூலிப்படைகளின் அராஜகம் ஆகியவற்றை அடியோடு ஒழிக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.

ராமநாதபுரம் அருகே ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க முயன்ற அதிகாரிகள் மீது வாகனம் ஏற்றி கொலை முயற்சி – திருட்டுகளும், கொள்ளைகளும் நிறைந்த மாநிலமாக தமிழகம் மாறிவருவதை வேடிக்கை பார்த்து கொண்டிருப்பது தான் திராவிட மாடலா ? ராமநாதபுரம் மாவட்டம் செட்டியத் தெருவில் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க முயன்ற வட்டாட்சியர் மற்றும் வருவாய் ஆய்வாளர் மீது அடையாளம் தெரியாத கும்பல் வாகனத்தை ஏற்றி கொலை முயற்சி செய்திருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன. ஏழை, எளிய நடுத்தர குடும்பத்தினருக்கு பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் அரிசி மட்டுமல்லாது, மணல் திருட்டுகளும், கனிமவளக் கொள்ளைகளும் சர்வ சாதாரணமாகிவிட்ட தமிழகத்தில் அதனை தடுக்க முயற்சிக்கும் அரசு அதிகாரிகளின் உயிர் பாதுகாப்பு தொடர்ந்து கேள்விக்குறியாகிவருகிறது. அத்தியாவசியப் பொருட்கள் திருட்டு தொடர்பாக 2023 ஆம் ஆண்டு 7,576 வழக்குகளையும், 2024 ஆம் ஆண்டு 11,085 வழக்குகளையும் உணவு கடத்தல் தடுப்பு குற்ற புலனாய்வின் மூலம் பதிவு செய்திருக்கும் திமுக அரசு, அதனை தடுப்பதற்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்காததே, தற்போது அதிகாரிகளை கொலை செய்ய முயற்சிக்கும் அளவிற்கான அசாதாரண சூழலையை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல்லில் நடைபெற்ற சட்டவிரோத சிறுநீரகத் திருட்டை தடுக்க முடியாத திமுக அரசு, அதனை முறைகேடு எனக்கூறி சமாளித்ததை போல, பொதுவிநியோகத் திட்டத்தில் நடைபெற்றிருக்கும் இந்த திருட்டுச் சம்பவத்திற்கு ஏதேனும் வினோத விளக்கத்தை அளிக்கப்போகிறதா ? என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. எனவே, ரேஷன் அரிசி திருட்டை தடுக்க முயன்ற அதிகாரிகளை கொல்ல முயற்சி செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, ஏழை, எளிய மக்களுக்காக விநியோகிக்கும் அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் திருட்டு சம்பவத்தை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

நியாயவிலைக்கடையில் இடமில்லாததால் அரிசி மூட்டைகளைக் கழிவறையில் அடுக்கி வைப்பதா ? – பொறுப்பற்ற முறையில் செயல்பட்ட அனைவரின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் இயங்கி வரும் உழவர் சந்தையின் கழிவறை ஒன்றில் மக்களுக்கு விநியோகிக்க வேண்டிய ரேஷன் அரிசி மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் காட்சிகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. ஏழை, எளிய, சாமானிய மக்களுக்கு அன்றாடம் தேவைப்படக்கூடிய அத்தியாவசியப் பொருட்களைக் குறைந்த விலையில் விநியோகம் செய்யும் நியாயவிலைக்கடைகளில் நிலவும் இடவசதியின்மையைக் காரணம் காட்டி கழிவறையில் அரிசி மூட்டைகளை அடுக்கியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.ஏற்கனவே, தரமற்ற பொருட்கள் விநியோகம், அத்தியாவசியப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு என பல்வேறு புகார்கள் தொடர்ந்து எழுந்துவரும் நிலையில், தற்போது நடைபெற்றிருக்கும் இச்சம்பவம் நியாயவிலைக்கடைகள் மீதான மக்களின் நம்பிக்கையை முழுமையாக இழக்கச் செய்திருக்கிறது. திமுக அரசின்அமைச்சர்களும், சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களும், அவர்களது குடும்பத்தினரும், துளியளவும் சுகாதாரமற்ற கழிவறையில் அடுக்கி வைத்திருந்த மூட்டைகளில் இருக்கும் அரிசியைச் சமைத்து உண்பார்களா ? விளிம்புநிலை மக்கள் என்றால் ஆட்சியாளர்களுக்கு இளக்காரமாகத் தெரிகிறதா ? என்ற அடுக்கடுக்கான கேள்வியை அப்பகுதி மக்கள் எழுப்புகின்றனர்.எனவே, ரேஷன் அரிசி மூட்டைகளைக் கழிவறையில் அடுக்குவதற்குக் காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, ஏழை, எளிய மக்களுக்குச் சுகாதாரமான பொருட்களை விநியோகிக்க வேண்டும் எனத் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.