கச்சத்தீவை இலங்கை அரசிடம் தாரை வார்க்க காரணமாக இருந்தது திமுக தான் என்று உலகுக்கே தெரிந்த நிலையில் அதனை மீட்கவேண்டும் என்று மத்திய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுப்பது நகைப்புக்குரியது. கச்சத்தீவு பகுதியை கடந்த 1974 ஆம் ஆண்டு காங்கிரஸ் அரசு இலங்கை அரசிடம் ஒப்படைத்தபோது தமிழ்நாட்டில் ஆட்சியில் இருந்த கருணாநிதி தலைமையிலான அரசு அதனை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்துவிட்டு, இப்போது திமுக தலைவரும், முதலமைச்சருமான திரு.மு.க.ஸ்டாலின் கச்சத்தீவை மீட்க வேண்டும் என்று கூறுவது கேலிக்கூத்தாக உள்ளது. புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் அப்போதைய தமிழ்நாடு அரசு மீதும், திமுக அமைச்சர்கள் மீதும் ஊழல் புகார்கள் கூறி நடவடிக்கை எடுக்கும்படி பிரதமர் இந்திரா காந்தியிடம் மனுகொடுத்திருந்தார். தமிழ்நாட்டு மீனவர்கள் நலன்களை குழிதோண்டி புதைக்கும் வகையில் மத்திய அரசு, இலங்கையிடம் கச்சத்தீவை ஒப்படைத்த போது ஊழல் குற்றச்சாட்டுகளில் இருந்து தப்பிக்க, அப்போதைய கருணாநிதி அரசு வலுவான எதிர்ப்பை தெரிவிக்கவில்லை என்பதுதான் வரலாற்று உண்மை. உண்மை இவ்வாறு இருக்க கச்சத்தீவு விவகாரத்தில் மக்களை ஏமாற்றும் வகையில் திமுக சார்பில் அப்போது நாடாளுமன்றத்தில் வெளிநடப்பு செய்ததை எல்லாம் எதிர்ப்பு என்ற பெயரில் இப்போது சுட்டிக்காட்டுவது கச்சத்தீவு விவகாரத்தில் மீண்டும், மீண்டும் திமுக மக்களை ஏமாற்றவே நினைக்கிறது என்பது உறுதிபடத் தெளிவாகிறது. கச்சத்தீவை ஒப்படைத்தபோது எந்தவித வலுவான எதிர்ப்பும் தெரிவிக்காமல் சும்மா இருந்துவிட்டு, இப்போது மீனவர்கள் நலனில் அக்கறையாக இருப்பது போல காட்டிக் கொண்டு கச்சத்தீவை மீட்க வேண்டும் என்று கோரிக்கை விடுப்பது முதலை கண்ணீர் வடிப்பது போல இருக்கிறது. கச்சத்தீவை ஒப்படைத்து தமிழ்நாட்டு மீனவர்கள் நலனை காலம், காலமாக படுகுழியில் தள்ளிக் கொண்டிருக்கும் திமுகவை மீனவர்கள் என்றைக்குமே மன்னிக்கமாட்டார்கள். பழனிசாமி அரசின் தவறால் ஆக்சிடெண்டல் சிஎம் ஆன முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு மீனவர்கள் உள்ளிட்ட அனைத்து பிரிவு மக்களும் விரைவில் முடிவு கட்டுவார்கள். இனியும் கச்சத்தீவை மீட்கப்போவதாக போலி கண்ணீர் வடிப்பதை விட்டுவிட்டு, மீனவர்கள் நலனை பாதுகாக்கவும், மீனவர்கள் தாக்கப்படுவதை தடுக்கவும் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகின்றேன்.

சென்னை ஓட்டேரி காவல் நிலைய தலைமைக் காவலர் கோதண்டபானி மற்றும் அவரின் மகள் பிரதிக்‌ஷா ஆகியோர், தங்களை கருணை கொலை செய்யப் பரிந்துரை செய்யுமாறு டிஜிபி அலுவலகம் எதிரே போராட்டம் நடத்திய காட்சி மனதை உறைய வைக்கிறது. அரசு மருத்துவமனையில் சிறுநீரகப் பிரச்னை என அனுமதிக்கப்பட்ட குழந்தை, மருத்துவர்கள் பரிந்துரைத்த மருந்துகளால் ஏற்பட்ட பக்கவிளைவுளால் கால் அகற்றும் நிலைக்குச் சென்றுள்ளது என்ற தந்தையின் குற்றச்சாட்டிற்கு அரசு மருத்துவமனை தரப்பில் உரிய விளக்கம் அளிக்க வேண்டும். கடந்த சில மாதங்களாக அரசு மருத்துவமனைகளில், மருத்துவர்களின் அலட்சியப் போக்கினால் தவறான சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக வெளிவரும் செய்திகளுக்கு உரிய விளக்கம் அளிக்கும் வகையில், விசாரணைக் குழுவை அமைத்து உடனடியாகத் தீர்வு காண வேண்டும் என்று தமிழ்நாடு அரசைக் கேட்டுக்கொள்கிறேன். இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து அரசு மருத்துவமனைகளில் நடைபெற்று வருவதால், அரசு மருத்துவமனையின் சிகிச்சை தரம் குறித்து மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை குறைந்து வருவதை அரசு உணர வேண்டும். மக்கள் நலன் சார்ந்த இந்த விஷயத்தில் அரசு உரிய கவனம் செலுத்தி, மருத்துவமனைகளின் தரத்தை மேம்படுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

நீட் தேர்வில் தோல்வி காரணமாக சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த மாணவர் ஜெகதீஸ்வரன் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்த நிலையில் அவரது தந்தையும் தற்கொலை செய்து கொண்டு உயிரை மாய்த்திருப்பது வேதனையளிக்கிறது. ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்வு ரத்து என போலியான வாக்குறுதி அளித்த திமுக, அதற்கான வலுவான நடவடிக்கைகள் எதையும் எடுக்காமல் மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைத்து வருகிறது. இனியும் நீட் தேர்வு ரத்து என மாணவர்களை ஏமாற்றுவதை விட்டுவிட்டு, நீட் தேர்விலிருந்து மாணவர்களைக் காப்பாற்ற அதிக எம்.பி.க்களை வைத்திருக்கும் தி.மு.க. உண்மையாக முயற்சிக்க வேண்டும். வாழ்க்கை என்பது வெற்றிக்கும், தோல்விக்கும் இடையேயான பயணம் என்பதை மாணவர்கள் உணரவேண்டும். தங்களது இன்னுயிரை மாய்த்துக்கொள்வது எதற்கும் தீர்வாகாது. அதே நேரத்தில், தோல்வியை எதிர்கொண்டால் மட்டுமே வெற்றிப் படிகளைச் சுலபமாக அணுகமுடியும் என்பதையும் மாணவர்கள் மனதில்கொள்ள வேண்டும். உயிரிழந்த இருவரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவிப்பதுடன், அவர்களின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.

மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களை 1989ஆம் ஆண்டு மார்ச் 25 ஆம் நாள் தமிழக சட்டசபையில் தி.மு.க.வினர் எவ்வாறெல்லாம் அநாகரிகமாக நடத்தினார்கள் என்பது தமிழக மக்கள் அனைவரும் அறிந்ததே! மாண்புமிகு அம்மா அவர்களோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக போட்டி அ.தி.மு.க. என ஆரம்பித்து வெளியேறிய திரு.திருநாவுக்கரசு அவர்கள் சொன்னதாக வெளியான ஒரு செய்தியை மேற்கோள்காட்டி, திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அம்மா அவர்கள் மீது கொலை வெறித்தாக்குதல் நடத்தி துட்சாதன நாடகத்தை அரங்கேற்றிய மூத்த அமைச்சரையும், அதை வேடிக்கை பார்த்த பல சாட்சிகளையும் தன்னுடன் வைத்துக்கொண்டே ஆங்கில பத்திரிகை ஒன்றிற்கு உண்மையைத் திரித்து சொல்லியிருப்பது முழு பூசணிக்காயைச் சோற்றில் மறைப்பதற்குச் சமமாகும். 1989ஆம் ஆண்டு சட்டப்பேரவைக்குள் நடைபெற்ற அந்த மோசமான சம்பவத்தைப் பற்றிய செய்திகளும் புகைப்படங்களும், அன்றைய நாளிதழ்கள் மற்றும் வார இதழ்களில் வெளியானதை மறந்துவிட்டு திரு.ஸ்டாலின் பேசுவது அவர் வகிக்கும் முதலமைச்சர் பொறுப்பிற்கு அழகல்ல. அம்மா அவர்கள் உயிருடன் இருந்தவரையில் திரு.மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட எவர் ஒருவரும், ஏன் அவரது தந்தை மறைந்த திரு.கருணாநிதி கூட இந்த சம்பவத்தை மறுத்தது இல்லை. ஆனால் அம்மா அவர்கள் உயிருடன் இல்லாத இந்த சமயத்தில் நடந்த சம்பவங்களை மறைக்க முயல்வது அரசியல் நாகரிகம் அல்ல.

நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் சாதிய மோதலால் பள்ளி மாணவரையும், அதனை தடுக்கமுயன்ற அவரது சகோதரியையும், சக மாணவர்கள் அரிவாளால் தாக்கியுள்ளனர் என்ற செய்தி அதிர்ச்சியளிக்கிறது. அரசு உதவி பெறும் பள்ளியில் 12 ஆம் வகுப்புப் படிக்கும் தாக்குதலுக்கு உள்ளான மாணவர் சின்னத்துரையோடு ஒப்பிட்டு நன்றாக படிக்கும்படி சக மாணவர்களுக்கு ஆசிரியர்கள் அறிவுரை கூறியது, மற்றொரு சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களிடம் வெறுப்பை ஏற்படுத்தியதால் இந்தத் தாக்குதல் சம்பவம் நிகழ்ந்திருப்பதாக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகி உள்ளன. பள்ளியில் படிக்கும் மாணவர்களிடையே சாதி காரணமாக வேறுபாடு ஏற்பட்டிருப்பதும்; அதன் காரணமாக கொலை வெறித் தாக்குதல் நடத்தும் அளவிற்கு மாணவர்கள் துணிவதும் நெஞ்சைப் பதறச்செய்கிறது. இதன் காரணமாக தென்மாவட்டங்களில் பதற்றம் ஏற்படாமல் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுப்பதோடு ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகங்கள் உரிய கண்காணிப்புடன் மாணவர்களிடையே இத்தகைய மோதல்கள் நேரிடுவதற்கு காரணமான சூழல்களைக் கண்டறிந்து அவற்றைக் களையவும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

திமுக ஆட்சி பொறுப்பேற்று 27 மாத காலம் ஆகியும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படாமல் இருப்பது கண்டிக்கத்தக்கது. ஏழை எளிய மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக தொலைநோக்குப் பார்வையுடன் புரட்சித்தலைவி அம்மா அவர்களால் கொண்டுவரப்பட்ட விலையில்லா மடிக்கணினி திட்டம், பழனிசாமி ஆட்சிக்காலத்தில் படிப்படியாக குறைக்கப்பட்டு திமுக ஆட்சிக்கு வந்தபிறகு முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. ஆட்சிக்கு வந்ததும் லேப்டாப்-க்கு பதிலாக டேப் கொடுக்கிறோம் என்று கூறிவிட்டு பிறகு டேப் வழங்குவது சரியாக இருக்காது நாங்கள் மடிக்கணினியை வழங்குகிறோம் என்று கூறி வந்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், சமீப காலமாக போதுமான உற்பத்தி இல்லை போதுமான நிதி இல்லை என்று கூறி தட்டிக்கழிப்பது மாணவர்களையும் மக்களையும் முட்டாளாக்க முயலும் செயல். எழுதாத பேனாவிற்கு 90 கோடியில் சிலை வைப்பதற்கு நிதி இருக்கும் போது மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்க மட்டும் நிதி இல்லையா? இதுதான் திராவிட மாடல் ஆட்சியா? ஆட்சிக்கு வரும் முன் ஒரு பேச்சு, ஆட்சிக்கு வந்ததும் ஒரு பேச்சு என இரட்டை வேடம் போடும் திமுக, வெற்று விளம்பரங்களுக்காக மட்டும் ஆட்சி நடத்தாமல், மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு உடனடியாக அனைத்து மாணவர்களுக்கும் மடிக்கணினிகளை வழங்கிடுமாறு தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

சென்னை பூந்தமல்லி மற்றும் திருவாரூரில் கேபிள் பதிக்கும் பணிக்காகவும், சாலை விரிவாக்க பணிகளுக்காகவும் தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து இளைஞர்கள் இருவர் பலியான சம்பவம் அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பூந்தமல்லி அருகே தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் இரவு பணிக்காக தனது நண்பருடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது கேபிள் பதிக்கும் பணிக்காகத் தோண்டப்பட்ட ராட்சத பள்ளத்தில் எதிர்பாராத விதமாக விழுந்து உயிரிழந்தாதகவும், அவருடன் வந்த நண்பர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. இதே போன்று திருவாரூரில் சாலை விரிவாக்க பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. விபத்து நிகழ்ந்த இடங்களில் போதிய அளவு முன்னெச்செரிக்கை பலகைகளோ, மின்விளக்குகளோ வைக்கப்படவில்லை என்றும் அரசுத்துறை அதிகாரிகளின் அலட்சியமே இவ்விபத்துகளுக்கு காரணம் எனவும் அப்பகுதியை சேர்ந்தோர் குற்றம் சாட்டுகின்றனர். அரசுத்துறைகள் அலட்சியமாக செயல்படுவது தொடர்கதையாகி வரும் சூழலில், மக்கள் உயிரின் மீது அக்கறை இல்லாத விடியா அரசு இன்னும் இது போன்ற பல மரணங்களுக்குப் பின்னர்தான் நடவடிக்கை எடுக்குமா? ஏற்கனவே மழைநீர் வடிகால் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளங்களில் வைக்கப்பட்ட தடுப்புகள் பாதிப்படைந்துள்ளதும், பணிகள் முடிவடைந்த இடங்களில் பள்ளங்கள் சரிவர மூடப்படாத சூழலிலும் விபத்துகள் தொடர்ந்து நடைபெற்று வருவது வருத்தமளிக்கிறது. இளைஞர்கள் உயிரிழக்க காரணமான தனியார் நிறுவனம் மற்றும் உரிய பாதுகாப்பு நெறிமுறைகள் செய்யப்பட்டிருக்கிறதா என்பதை உறுதி செய்யாத அரசு அதிகாரிகளின் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகம் முழுவதும் பல்வேறு பணிகளுக்காக பள்ளங்கள் தோண்டுவதற்கு முறையான அனுமதி பெறவும், கண்காணிக்கவும், விபத்துகள் நேரிடா வண்ணம் பாதுகாப்பை உறுதி செய்யவும் கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று தமிழ்நாடு அரசை வலியுறுத்துகின்றேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:
தலைமைக் கழக அலுவலகம்
எண்: 15, வெஸ்ட் காட் ரோடு, ராயப்பேட்டை,
சென்னை – 600 014
மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.