69வது தேசிய திரைப்பட விருதுகளுக்கு தமிழில் சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டுள்ள கடைசி விவசாயி திரைப்பட குழுவினருக்கு பாராட்டுக்களையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் “இரவின் நிழல்” படத்தின் மூலம் சிறந்த பின்னணிப் பாடகி விருதை பெற்றுள்ள ஷ்ரேயா கோஷல், “கருவறை” ஆவணப்படத்திற்காக சிறந்த இசையமைப்பாளர் விருதை பெற்றுள்ள ஸ்ரீகாந்த் தேவா, சிறந்த கல்வி திரைப்படமாக தேர்வாகியுள்ள “சிற்பங்களின் சிற்பங்கள்” படக் குழுவினர் உட்பட தேசிய விருதுகளை பெற்ற அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அஜர்பைஜானில் நடைபெற்று வரும் ஃபிடே சதுரங்க உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய வீரர் பிரக்ஞானந்தா, இறுதிவரை போராடி நார்வே வீரர் கார்ல்சனிடம் வெற்றி வாய்ப்பை இழந்துள்ளார். சதுரங்க உலகக் கோப்பை தொடர் வரலாற்றிலேயே முதல்முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேற்றிய இளம் வீரர் என்ற பெருமையை பெற்று உலகையே தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்திருக்கிறார் சென்னையைச் சேர்ந்த பிரக்ஞானந்தா. இந்தியாவில் இருந்து மட்டும் 80க்கும் மேற்பட்ட கிராண்ட் மாஸ்டர்கள் உருவெடுத்திருந்தாலும் தன்னைத்தானே செதுக்கிக் கொண்டு தனது 18 வயதிலேயே உலகக்கோப்பை இறுதிப் போட்டி வரை சென்ற பிரக்ஞானந்தாவின் முயற்சிக்கு பாராட்டுக்களையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

கோடியக்கரையில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை மாவட்ட மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியதோடு படகில் வைத்திருந்த பொருட்களையும் கொள்ளை அடித்துச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நடத்தி வரும் தாக்குதலுக்கு தற்போது வரை தீர்வு எட்டப்படாத நிலையில், தற்போது கடற்கொள்ளையர்களும் தாக்குதல் நடத்தியிருப்பது மீனவர்கள் மத்தியில் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மீனவர்களின் மீதான ஒவ்வொரு தாக்குதலின் போதும் மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவதோடு தன் கடமை முடிந்து விட்டதாக கருதாமல் உரிய அழுத்தம் கொடுத்து தமிழக மீனவர்களின் நலனை பாதுகாக்க தமிழக முதலமைச்சர் நடவடிகை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

சந்திராயன்-3 விண்கலம் தொடர்பான செய்தி சேகரிக்க திருவனந்தபுரம் சென்று நெல்லைக்கு திரும்பும் வழியில் நாங்குநேரியில் ஏற்பட்ட சாலை விபத்தில் புதிய தலைமுறை நெல்லை மாவட்ட ஒளிப்பதிவாளர் சங்கர் உயிரிழந்த செய்தி வேதனை தருகிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன். அதே விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் செய்தியாளர் நாகராஜன் மற்றும் ஒளிப்பதிவாளர்கள் வள்ளிநாயகம், நாராயணன் ஆகியோர் விரைவில் பூரண குணமடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக கடந்த ஜூலை 14 ஆம் தேதி LVM ராக்கெட் மூலம் விண்ணில் பாய்ந்த சந்திரயான்-3 விண்கலம் திட்டமிட்டபடி வெற்றிகரமாக நிலவில் தரையிறக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு இந்தியரின் கனவுகளுக்கு செயல்வடிவம் கொடுக்க இரவு பகல் பாராமல், அர்ப்பணிப்புடன் அயராது உழைத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். சந்திரயான்- 3 விண்கலத்தின் திட்ட இயக்குனராக தமிழ்நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானி வீரமுத்துவேல் பணியாற்றியிருப்பது இரட்டிப்பு மகிழ்ச்சியை தருகிறது. உலக நாடுகள் பல முயற்சி செய்தும் நெருங்க முடியாத நிலவின் தென் துருவத்தை சந்திரயான்-3 அடைந்திருக்கும் இந்த நாள் இந்திய விண்வெளி வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய நாளாகும்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பதவி நியமனம் தொடர்பாக தமிழ்நாடு அரசு அனுப்பிய கோப்புகளுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் திரு.ஆர்.என்.ரவி அவர்கள் திருப்பி அனுப்பியுள்ளதாக ஊடகங்கள் மற்றும் நாளிதழ்களில் செய்தி வெளியாகியுள்ளது. டி.என்.பி.எஸ்.சி. பதவிகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட நபர்கள் எந்த அடிப்படையில் இறுதி செய்யப்பட்டனர்? உறுப்பினர்கள் தேர்வில் உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்கள் முறைப்படி பின்பற்றப்பட்டதா? போன்ற கேள்விகளை ஆளுநர் எழுப்பியுள்ளதாகவும் கூறப்படுகிறது. திமுக ஆட்சியமைந்த பிறகு டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பதவி காலியிடமாக இருப்பதால் அந்த ஆணையம் நடத்தும் தேர்வில் அடிக்கடி குளறுபடிகள் நடைபெறுவதாக புகார்கள் எழுந்துள்ளன. வேலைவாய்ப்புக்கான தேர்வை எதிர்பார்த்து லட்சக்கணக்கான இளைஞர்கள் காத்திருக்கும் நிலையில், விதிகளை மீறி தலைவர் மற்றும் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க முயற்சிக்கும் திமுக அரசுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். ஆளுநர் எழுப்பியிருக்கும் கேள்விகளுக்கு உரிய விளக்கங்களை உடனடியாக வழங்கி, அவரின் ஒப்புதலை பெற்று காலியாக உள்ள டி.என்.பி.எஸ்.சி. தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பதவிகளை முறைப்படி நிரப்ப திமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

அன்றைய காலகட்டத்தில் பெரும் பணம் செலவழித்து கட்சி ஒன்று, சென்னை ஆவடியில் நடத்த இருந்த மாநாடு பற்றிய பேரறிஞர் அண்ணாவின் பொன்மொழிகள் இன்று நடக்கவுள்ள துரோகிகளின் மாநாட்டோடு பொருந்துவது போல் உள்ளது. “தம்பி பெரும் பணம் செலவழித்து, தோரணங்களும் தோகைகளும் ஓவியங்களும் கொண்டு மாநாடு நடத்தி பயன் எதுவும் வராது. திறமை மிக்க ஓவியன் ஒருவன் காட்டில் உள்ள நல்ல கனி தரும் மரங்களை அப்படியே நம் கண்முன்னே கனிகள் காய்த்து தொங்குவதை போல் ஓவியமாக வரைந்தான் . அனைவரும் கண்டு மெய்சிலிர்த்து வியந்தனர். ஆனால் தம்பி, அந்த ஓவியத்தில் உள்ள கனிகளை கண்டு ரசிக்க தான் முடியுமே தவிர அதனை உண்டு நம் பசியை போக்க முடியாது. அதே போன்று தான் தம்பி பெரும் பணம் மட்டுமே செலவழித்து நடத்தப்படும் மாநாடுகள் மக்களிடம் துளியும் நம்பிக்கை பெறாது, அவை அனைத்தும் பயனற்றது”. “சாதனைகளைக் காட்டி ஓட்டு வாங்கிட முடியாது என்றாலும் நோட்டுகளைக் காட்டி ஓட்டுகளை வாங்கிடலாம் என்ற துணிவு தான் தம்பி அவர்களுக்கு இருக்கும் நம்பிக்கை”.

கழகம்

அலுவலகம்

முகவரி:
தலைமைக் கழக அலுவலகம்
எண்: 15, வெஸ்ட் காட் ரோடு, ராயப்பேட்டை,
சென்னை – 600 014
மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.