தமிழக மீனவர்களை எல்லை தாண்டியதாக கூறி கைது செய்யும் இலங்கை கடற்படையினரின் தொடர் அத்துமீறல் சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் – கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்கத் தேவையான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும். ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்று இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 22 தமிழக மீனவர்கள் தற்போதுவரை விடுவிக்கப்படாத நிலையில், நேற்று நாகப்பட்டினத்தைச் சேர்ந்த 10 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன. மீன்பிடி தடைக்காலமான இரண்டு மாதகாலம் கடலுக்குள் செல்லாமல் லட்சக்கணக்கில் பணத்தை செலவு செய்து தங்களின் படகுகளை பழுதுநீக்கி கடலுக்குள் சென்ற மீனவர்களை, எல்லை தாண்டியதாக கூறி கைது செய்துவரும் இலங்கை கடற்படையினரின் அத்துமீறல் சம்பவம் தொடர்கதையாகி வருவது கடும் கண்டனத்திற்குரியது. மீனவர்களின் கைதை தடுத்து நிறுத்தவும், இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை தாயகம் அழைத்துவர தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், மேலும் 10 மீனவர்கள் கைது செய்யப்பட்டிருப்பது மீனவர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒவ்வொரு முறை மீனவர்கள் கைது செய்யப்படும் போதும் மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவதோடு மட்டுமே தன் கடமை நிறைவடைந்து விட்டதாக கருதாமல், தமிழக முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களை நேரில் சந்தித்து தமிழக மீனவர்களின் கைதை தடுத்து நிறுத்துவதற்கான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை இனியாவது மேற்கொள்ள வேண்டும்.

தூத்துக்குடி அருகே 24 கோடி ரூபாய் மதிப்பிலான 8 கிலோ கொடியவகை போதைப் பொருள் பறிமுதல் – எதிர்கால தலைமுறையை சீரழிக்கும் போதைப் பொருள் விற்பனையை கண்டுகொள்ளாமல் தமிழகத்தை போதை மாநிலமாக மாற்றியிருக்கும் திமுக அரசின் பொறுப்பற்றத் தன்மை கடும் கண்டனத்திற்குரியது. தூத்துக்குடி மாவட்டம் இனிகோ நகர் பகுதியில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 24 கோடி ரூபாய் மதிப்பிலான 8 கிலோ ஐஸ் கேட்டமைன் எனும் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. சென்னையில் தொடங்கி மாநிலம் முழுவதும் உள்ள அனைத்துப் பகுதிகளிலும் தாராளமாக புழங்கிக் கொண்டிருக்கும் போதைப் பொருட்களின் விற்பனை குறித்தும், அண்மைக்காலமாக பள்ளி, கல்லூரி மாணவர்களை குறிவைத்து விற்பனை செய்யப்படும் போதை மாத்திரைகள், போதை ஊசிகள் உள்ளிட்ட போதைப் பொருட்கள் குறித்து பலமுறை புகார் அளித்தும் கண்டும் காணாமல் கடந்து செல்லும் ஆளும் திமுகவின் செயல்பாடுகள் எதிர்கால தலைமுறையான இளைஞர்களின் நலன் மீதான அக்கறையின்மையையே வெளிப்படுத்துகின்றன. எனவே, தூத்துக்குடியில் போதை மருந்து வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டவர்களிடம் விரிவான விசாரணையை மேற்கொண்டு, அதன் பின்னணியில் உள்ளவர்களையும் கைது செய்வதோடு, தமிழகத்தின் பட்டிதொட்டியெங்கும் பரவியிருக்கும் போதைப் பொருட்களின் நடமாட்டத்தை அடியோடு ஒழிக்க தேவையான நடவடிக்கைகளை இனியாவது எடுக்க வேண்டும் என தமிழக முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.