புகார் அளிக்க வந்த இளைஞருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாகக் கூறப்படும் காவல் ஆய்வாளர்; புகார் அளித்த மறுநாளே படுகொலை செய்யப்பட்ட இளைஞர் – ஒவ்வொரு குற்றச் சம்பவத்திற்கும் ஒவ்வொரு காரணம் கூறும் முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்கள், இக்கொலைக்கு சொல்லப்போகும் காரணம் என்ன? சென்னை, திருவொற்றியூர் காவல் ஆய்வாளர் தன்னை அழைத்து கொலை மிரட்டல் விடுத்ததாகவும், பொய் வழக்குப் பதிவு செய்து தன்னை கைது செய்யவுள்ளதாகவும் இளைஞர் பிரதீப் ராஜ் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் தெரிவித்திருந்த நிலையில், அதற்கு மறுநாளே அவர் அடையாளம் தெரியாத கும்பலால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டதாக வெளியாகியுள்ள செய்திகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. “சட்டத்தை மதித்து நடப்பவர்களுக்கு உற்ற நண்பனாகவும், சட்டத்தை மீறுவோருக்கு அச்சத்தை ஏற்படுத்தும் எதிரியாகவும் காவல்துறை இருக்க வேண்டும்” என்று முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்கள் காவல்துறையைப் பாராட்டிப் பேசிய இரண்டு நாட்கள்கூட முழுமையாக நிறைவடையாத நிலையில், காவல்துறை ஆய்வாளர் ஒருவர் மிரட்டியதாகப் புகார் தெரிவித்த நபர் அடுத்த நாளே படுகொலை செய்யப்பட்டிருப்பது, காவல்துறை முதலமைச்சரின் முழுமையான கட்டுப்பாட்டில்தான் செயல்படுகிறதா என்ற கேள்வியையும், காவல்துறை மீதான பொதுமக்களின் நம்பிக்கையையும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளது. குடும்பப் பிரச்னை, சொத்துத் தகராறு, முன்விரோதம், பழிவாங்கும் மனநிலை என தமிழகத்தில் தவெக ஆட்சிக்கு வந்த பிறகு நிகழும் ஒவ்வொரு குற்றச் சம்பவத்திற்கும் வெவ்வேறு காரணங்களைக் கூறி, அவை சட்டம் ஒழுங்குடன் தொடர்பில்லாதவை என்பது போல் சித்தரிக்கும் முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்கள் இளைஞர் பிரதீப் ராஜ் படுகொலை செய்யப்பட்ட இந்தச் சம்பவத்திற்கும் சொல்லப்போகும் காரணம் என்ன? எனவே, தமிழகத்தில் அரங்கேறும் ஒவ்வொரு குற்றச் சம்பவத்திற்குப் பின்னரும் புதுப்புது காரணங்களைத் தேடாமல், குற்றச் சம்பவங்கள் நிகழ்வதற்கு முன்பாகவே அவற்றைத் தடுக்கும் வகையில் காவல்துறையைச் செயல்படச் செய்து, சட்டம் ஒழுங்கைப் பேணிக் காத்து, தமிழக மக்களின் பாதுகாப்பை உறுதி செய்திட முன்வர வேண்டும் முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களை வலியுறுத்துகிறேன்.

சென்னை பட்டினம்பாக்கத்தில் அவசரகதியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை தவெக அரசு கைவிட வேண்டும்! புனித ஜார்ஜ் கோட்டையில் இயங்கி வரும் தலைமைச் செயலகத்தில் இடநெருக்கடி மற்றும் அரசு ஊழியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால், நவீன வசதிகளுடன் கூடிய புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டிய அவசியம் இருப்பது உண்மைதான். ஆனால், அதற்காக பொதுமக்களுக்கும், அப்பகுதி மீனவ மக்களின் வாழ்வாதாரத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய இடத்தை அவசரகதியில் தேர்வு செய்வது ஏற்புடையதல்ல. நடைபெற்று முடிந்த சட்டமன்றக் கூட்டத்தொடரில் 110 விதியின் கீழ் சென்னையில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்படும் என முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அறிவித்திருந்தார். அந்த அறிவிப்பை செயல்படுத்தும் வகையில், சென்னை பட்டினம்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட பல்வேறு திட்டங்களுக்கு இதுவரை அரசாணைகள் வெளியிடப்படவில்லை எனக் கூறப்படும் நிலையில், புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்கான இடத்தை மட்டும் அவசரமாகத் தேர்வு செய்து அரசாணை வெளியிடப்பட்டிருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது. புதிய தலைமைச் செயலகம் அமைக்கத் தேர்வு செய்யப்பட்டுள்ள பட்டினம்பாக்கம் பகுதி ஏற்கனவே அதிக மக்கள் தொகை கொண்ட குடியிருப்புகள் நிறைந்த பகுதியாகும். மேலும், குறுகிய சாலைகள், போக்குவரத்து நெரிசல், எதிர்காலத்தில் சாலை மற்றும் உள்கட்டமைப்புகளை விரிவுபடுத்துவதற்கான குறைந்த வாய்ப்புகள் ஆகியவை உள்ள நிலையில், அங்கு தலைமைச் செயலகம் அமைக்கப்பட்டால் கூடுதல் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு, அப்பகுதி பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையும் கடுமையாக பாதிக்கப்படும். அதுமட்டுமின்றி, பள்ளிகள், கல்லூரிகள், தேவாலயங்கள், உள்ளிட்ட பல்வேறு முக்கிய தொழில் நிறுவனங்கள் அமைந்துள்ள அப்பகுதியில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான மாணவர்களும் பொதுமக்களும் வந்து செல்கின்றனர். இத்தகைய சூழலில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்பட்டால், அரசு அலுவலர்கள், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் என அதிக எண்ணிக்கையிலானோர் வந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டு, அப்பகுதியில் போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு சார்ந்த பல்வேறு பிரச்சினைகள் உருவாக வாய்ப்புள்ளது. மேலும், புதிய தலைமைச் செயலகம் அமைக்கத் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலம், தங்களது பாரம்பரிய பயன்பாட்டில் இருந்து வந்த நிலம் எனவும், அதனை தங்களிடமே ஒப்படைக்க வேண்டும் எனவும் அப்பகுதி மீனவ சமுதாய மக்கள் நீண்டகாலமாகக் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இத்தகைய நிலையில், அவர்களின் கோரிக்கைகளை முறையாகக் கேட்டறியாமல் அங்கு தலைமைச் செயலகம் அமைப்பது, அவர்களின் வாழ்வாதாரத்தையும் பொருளாதாரத்தையும் பாதிக்கும் நடவடிக்கையாகவே அமையும். இதனை ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழக அரசின் நிர்வாகத் தலைமையிடமாகவும், ஒட்டுமொத்த தமிழக மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் முக்கிய மையமாகவும் செயல்பட வேண்டிய தலைமைச் செயலகம் அமைப்பதற்கான இடத்தைத் தேர்வு செய்யும்போது, பல்வேறு தரப்பினரின் கருத்துகளைக் கேட்டறிவது அவசியமாகும். ஆனால், எவருடனும் முறையாகக் கலந்தாலோசிக்காமல், எதிர்க்கட்சிகள்கூட விரிவாக விவாதிக்க முடியாத வகையில் 110 விதியின் கீழ் இத்திட்டத்தை அறிவித்து, தற்போது அவசரகதியில் இடத்தையும் தேர்வு செய்திருப்பது முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களின் சர்வாதிகார போக்கை வெளிப்படுத்துகிறது. எனவே, பொதுமக்களின் அன்றாட வாழ்க்கைக்கும், போக்குவரத்திற்கும், அப்பகுதி மீனவ மக்களின் வாழ்வாதாரத்திற்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில், போதிய இடவசதி, எதிர்கால விரிவாக்கத்திற்கான வாய்ப்பு, சிறந்த போக்குவரத்து வசதி உள்ளிட்ட அனைத்து அம்சங்களையும் கருத்தில் கொண்டு புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்கான மாற்று இடத்தைத் தேர்வு செய்ய வேண்டும் என முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களை வலியுறுத்துகிறேன்.

பாஞ்சாலங்குறிச்சி மன்னர் வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களின் நம்பிக்கைக்குரிய படைத்தளபதியும், தாய்நாட்டின் விடுதலைக்காகத் தனது இன்னுயிரையும் துச்சமெனக் கருதி ஆங்கிலேயரின் ஆயுதக்கிடங்கை தற்கொலைப்படைத் தாக்குதல் மூலம் அழித்து வீரமரணம் அடைந்த மாவீரருமான தியாகி சுந்தரலிங்கனார் அவர்களின் நினைவு தினம் இன்று. தாய்நாட்டிற்காக தனது இன்னுயிரையே துச்சமென நினைத்து வாழ்ந்து மறைந்த மாவீரர் தியாகி சுந்தரலிங்கனார் அவர்களின் நினைவுதினத்தில், அவரது தியாகங்களைப் போற்றி வணங்கிடுவோம்.

அறிவியல் மற்றும் மனிதநேயத்துடன், சமூகத்தின் ஆரோக்கியத்திற்காக சேவை மனப்பான்மையுடனும் அர்ப்பணிப்பு உணர்வுடனும் பணியாற்றி வரும் அனைத்து பிசியோதெரபிஸ்ட்களுக்கும் எனது பிசியோதெரபி தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஒருவரின் வலியைக் குறைத்து, உடல் இயக்கத்தையும் அன்றாட செயல்பாடுகளையும் மேம்படுத்தி, இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப உதவுவதோடு, அவர்களின் தன்னம்பிக்கையையும் மீட்டெடுக்கும் பிசியோதெரபிஸ்ட்கள் அனைவரின் சேவையும், பணியும் மேன்மேலும் தொடர்ந்திட வாழ்த்தி மகிழ்கிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.