பட்டாசு ஆலைகளில் அடுத்தடுத்து அரங்கேறும் விபத்துக்களால் பறிபோகும் அப்பாவி உயிர்கள்- ஏழைத் தொழிலாளர்களின் உயிர் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது தமிழக அரசின் கடமை. விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள செங்கமலப்பட்டியில் இயங்கிவரும் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் சிக்கி 5 பெண்கள் உட்பட 8 தொழிலாளர்கள் உயிரிழந்திருப்பதாக வரும் செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது. பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் தொழிலாளர்கள் அனைவருக்கும் தரமான சிகிச்சை வழங்குவதை மாவட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறேன். தற்போது விபத்து நடைபெற்றிருக்கும் செங்கமலப்பட்டியில் பட்டாசு உற்பத்திக்கு தேவையான மூலப் பொருட்கள் தயாரிக்கும் ஆலையில் கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு ஏற்பட்ட விபத்தின் சுவடுகள் மறைவதற்குள் மீண்டும் ஒரு விபத்து நடந்திருப்பதும் அதில் அப்பாவி தொழிலாளர்கள் உயிரிழந்திருப்பதும் மிகுந்த துயரத்தை ஏற்படுத்துகிறது. விருதுநகர் மாவட்டத்தில் பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றாமல் இயங்கி வரும் பட்டாசு ஆலைகளாலும், பலமுறை சுட்டிக்காட்டியும், அலட்சியம் காட்டும் அரசு நிர்வாகத்தினாலும் பட்டாசு தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ள பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களின் உயிர் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. எனவே, இனியும் அலட்சியம் காட்டாமல் தமிழகத்தில் இயங்கிவரும் பட்டாசு தொழிற்சாலைகளில் உரிய ஆய்வை மேற்கொண்டு, பாதுகாப்பு விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுவதை உறுதி செய்வதோடு, அபாயகரமான பணி என தெரிந்தும் தங்களின் வாழ்வாதாரத்திற்காக பணியாற்றிக் கொண்டிருக்கும் அப்பாவி தொழிலாளர்களின் உயிர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

பாதுகாப்பில்லாத கொள்முதல் நிலையங்களால் தொடர் பாதிப்புக்குள்ளாகும் விவசாயிகள் – செஞ்சி கொள்முதல் நிலையத்தில் மழையில் நனைந்த நெல்மூட்டைகளுக்கு நியாயமான விலை கிடைப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அரசு நெல்கொள்முதல் நிலையத்தில் உரிய பாதுகாப்பின்றி வைக்கப்பட்டிருந்த சுமார் 12 ஆயிரம் நெல்மூட்டைகள் நேற்று பெய்த மழையில் நனைந்து சேதமடைந்திருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த வேதனையளிக்கின்றன. இயற்கை பேரிடர்கள், பொய்த்துப் போன பருவமழை, பயிர்க்காப்பீடு பெறுவதில் சிக்கல், தண்ணீர் பற்றாக்குறை, மும்முனை மின்சாரத்திற்கு தட்டுப்பாடு என பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் இரவு, பகல் பாராமல் பாடுபட்டு விவசாயிகள் விளைவித்த நெல்லை பாதுகாக்கத் தவறிய உணவுத்துறை அதிகாரிகளின் அலட்சியப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது. விற்பனைக்காக கொண்டுவரும் நெல்லை கொள்முதல் செய்யாமல் காலம் தாழ்த்துவதும், எந்தவித பாதுகாப்புமின்றி திறந்தவெளியில் நீண்ட நாட்கள் தேக்கி வைப்பதுமே நெல்மூட்டைகள் மழையில் நனைந்து வீணாக முக்கிய காரணம் என விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். எனவே, செஞ்சி நெல்கொள்முதல் நிலையத்தில் மழையால் நனைந்த நெல்மூட்டைகளுக்கு நியாயமான விலை கிடைப்பதை உறுதி செய்வதோடு, தமிழகம் முழுவதும் உள்ள கொள்முதல் நிலையங்களில், விவசாயிகள் விற்பனைக்காக கொண்டுவரும் நெல்மூட்டைகளை உடனடியாக கொள்முதல் செய்யவும், தாமதமாகும் பட்சத்தில் கொட்டகை அமைத்து மழையில் பாதிப்பு ஏற்படாத வகையில் நெல்மூட்டைகளை பாதுகாக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

பொய்வழக்குகள் பதிவு செய்வதாக தேவர்குளம் காவல்நிலைய காவலர்கள் மீது பொதுமக்கள் புகார் – அறவழிப் போராட்டத்தை முன்னெடுத்த பொதுமக்களின் மீது நடத்தப்பட்டிருக்கும் தடியடி கடும் கண்டனத்திற்குரியது. திருநெல்வேலி மாவட்டம் தேவர்குளம், வன்னிகோனேந்தல் பகுதிகளைச் சேர்ந்த ஒன்பது கிராமப் பொதுமக்கள் மீது ஒருதலைபட்சமாக பொய்வழக்குகளை பதிவு செய்வதாக தேவர்குளம் காவல்நிலையத்தைச் சேர்ந்த காவலர்கள் மீது தொடர் புகார்கள் எழுந்து வருகின்றன. இந்நிலையில், பொய்வழக்குகளை பதிவு செய்யும் தேவர்குளம் காவல்நிலையத்தை கண்டிக்கும் வகையில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் மக்கள் பாதுகாப்பு இயக்கத்தின் தலைவர் திரு.இசக்கிராஜா அவர்களின் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள் மீது தடியடி நடத்தியிருக்கும் காவல்துறையின் இரக்கமற்ற செயல் கடும் கண்டனத்திற்குரியது. பொதுமக்களின் புகார்களை விசாரணை செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டிய காவல்துறை, எவ்வித காரணமும் இல்லாமல் பொதுமக்கள் மீது பொய்வழக்குகளை பதிவு செய்வதும், அறவழியில் போராடியவர்கள் மீது அடக்குமுறையை கையாண்டு, தடியடி நடத்தியிருப்பதும் உட்சபட்ச அராஜகம். எனவே, பொதுமக்கள் மீது பொய்வழக்குகளை பதிவு செய்வதாக தேவர்குளம் காவல்நிலைய காவலர்கள் மீது எழுந்துள்ள புகார்களை முறையாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதோடு, அப்பகுதி மக்கள் மீது பதியப்பட்ட பொய்வழக்குகளை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் எனவும் காவல்துறை மற்றும் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

தமிழகத்தில் நிகழும் அறிவிக்கப்படாத மின்வெட்டால் சிரமத்திற்குள்ளாகும் பொதுமக்கள் – மின்சாரத்துறையில் உள்ள நிர்வாகச் சீர்கேடுகளை களைந்து மின் உற்பத்தியை அதிகரிக்கத் தேவையான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும். தமிழகத்தில் கோடைவெயிலின் தாக்கம் உச்சத்தை எட்டியிருக்கும் நிலையில் சென்னை, கோவை, திருப்பூர் உள்ளிட்ட நகர்ப்பகுதிகளில் மட்டுமல்லாது கிராமப்புறங்களிலும் அடிக்கடி நிகழும் அறிவிக்கப்படாத மின்வெட்டால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். டெல்டா மாவட்டங்களில் முறையான மும்முனை மின்சாரமின்றி கருகும் நெற்பயிர்கள், சீரான மின்விநியோகமின்றி தொழிற்சாலைகள் முடங்கும் அபாயம் என திமுக ஆட்சியில் நிலவும் மின்வெட்டால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து நாள்தோறும் வெளியாகும் செய்திகள் மிகுந்த வேதனையளிக்கின்றன. கோடைகாலத்தில் பொதுமக்கள் தொடங்கி தொழிற்சாலைகள் வரையிலான மின்நுகர்வுகளின் பயன்பாடுகள் அதிகரிக்கும் என தெரிந்திருந்தும், அதற்கு தீர்வு காணும் வகையில் எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் ஆளும் திமுக அரசு எடுக்கவில்லை என்பதை அடிக்கடி அரங்கேறும் மின்வெட்டுகளே அம்பலப்படுத்துகின்றன. ஆட்சிக்கு வந்தபின்பு மின் கட்டணத்தை உயர்த்துவதில் குறிக்கோளாய் இருந்து அதனை செயல்படுத்திய திமுக அரசு, பொதுமக்களை பாதிக்கும் மின்வெட்டைப் போக்கவோ, மின்சார உற்பத்தியை அதிகரிக்கவோ எந்தவித நடவடிக்கையும் இதுவரை எடுத்ததாக தெரியவில்லை. எனவே, பொதுமக்கள், விவசாயிகள், தொழில்துறையினர் என அனைத்து தரப்பினரின் அன்றாட, அத்தியாவசியத் தேவைகளில் ஒன்றான மின்சாரத்தை தடையில்லாமல் வழங்குவதை உறுதி செய்வதோடு, மின்சாரத்துறையில் உள்ள நிர்வாகச் சீர்கேடுகளை களைந்து, மாநிலத்தில் மின் உற்பத்தியை அதிகரிப்பதற்கு தேவையான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.

தமிழகத்தில் இன்று வெளியாகியிருக்கும் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகளில், வெற்றி பெற்று வாழ்க்கையின் அடுத்தகட்ட உயர்கல்வியை நோக்கி பயணிக்க தயாராகியிருக்கும் மாணவ, மாணவியர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். வெற்றி வாய்ப்பை நழுவவிட்ட மாணவ, மாணவியர்கள் தேர்வின் முடிவுகளை வாழ்க்கையின் மதிப்பீடுகளாக கருதாமல், விரைவில் நடைபெற இருக்கும் துணைத்தேர்வுகளை மனம் தளராமல் எதிர்கொண்டு, வெற்றிபெற்று வருங்காலத்தில் சிறந்து விளங்க எனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இரண்டு நாட்களாக மாயமானதாக கூறப்பட்ட திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் திரு. ஜெயக்குமார் தனசிங் அவர்கள், திசையன்விளை அருகே உள்ள தோட்ட இல்லத்தில் உடல் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருப்பதாக வரும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன. திரு.ஜெயக்குமார் தனசிங் அவர்களை இழந்துவாடும் குடும்பத்தினருக்கும், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். குறிப்பிட்ட சில நபர்களால் தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாக, திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் திரு.ஜெயக்குமார் தனசிங் அவர்கள் கடந்த 30 ஆம் தேதியே அளித்த புகார் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காத காவல்துறையின் அலட்சியப்போக்கே, இன்று அவர் சடலமாக மீட்கப்பட்டதற்கு காரணம் என புகார் எழுந்துள்ளது. பலமுறை சுட்டிக்காட்டியும், கொலை, கொள்ளை போன்ற சட்டம் ஒழுங்கு பிரச்னைகள், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் தாராளப் புழக்கத்தை கட்டுப்படுத்தத் தவறிய காவல்துறை, ஆளுங்கட்சியினரின் ஏவல்துறையாக மட்டுமே செயல்படுவதன் விளைவாக, தமிழகத்தில் பொதுமக்கள் தொடங்கி அனைத்து தரப்பினரின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகியுள்ளது. எனவே, இனியாவது பொதுமக்கள், விவசாயிகள், எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மீது பொய்வழக்கு பதிவு செய்யவும், கைது செய்யவும் மட்டுமே காவல்துறையை பயன்படுத்தாமல், உரிய சுதந்திரத்தை வழங்கி சட்டம் ஒழுங்கு பிரச்னைகளைகளை தடுக்கவும் பயன்படுத்துவதோடு, திரு.ஜெயக்குமார் தனசிங் அவர்களின் மரணம் குறித்து விரிவான விசாரணையை மேற்கொண்டு உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டும் எனவும் என தமிழக முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.

தமிழகம் முழுவதும் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க போர்க்கால நடவடிக்கை தேவை – பொதுமக்களுக்கு தங்குதடையின்றி சீரான குடிநீர் விநியோகம் செய்வதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். அதிகரித்துவரும் கோடை வெயிலின் தாக்கத்தினாலும், குறைந்துவரும் நீர்த் தேக்கங்களின் நீர்மட்டத்தினாலும் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் நிலவி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சென்னை, கோவை, மதுரை, தேனி, திருப்பூர், நீலகிரி என தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் முறையான குடிநீர் விநியோகிக்கப்படாததை கண்டிக்கும் வகையில் காலிக்குடங்களுடன் வீதிக்கு வந்து போராடும் சூழலுக்கு பொதுமக்கள் அனைவரும் தள்ளப்பட்டுள்ளனர். அரசு அதிகாரிகளுடன் பெயரளவுக்கு ஆலோசனக் கூட்டங்கள் நடத்துவதுதோடும், நிதி ஒதுக்குவதோடும் மட்டுமே தன் கடமை முடிவடைந்துவிட்டதாக கருதும் முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், நிதி ஒதுக்கப்பட்டதற்கான பணிகள் முறையாக நடைபெறுகிறதா என்பதை உறுதி செய்யாமல் இருப்பதே, தற்போது மக்கள் பெருமளவு பாதிக்க முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது. தமிழ்நாட்டிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட சென்னை மாநகராட்சியில் வசிக்கும் மக்களின் குடிநீர் தேவைக்கும், குடிநீர் வாரியம் விநியோகிக்கும் நீரின் அளவுக்குமான பற்றாக்குறை அளவு தொடர்ந்து அதிகரிக்கும் என அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் ஐ.ஐ.டி மெட்ராஸ் நடத்திய ஆய்வுகளில் தெரியவந்திருக்கின்றன. பொதுக் குழாய்கள் மூலமாகவும், லாரிகள் மூலமாகவும் விநியோகிக்கப்படும் குடிநீரின் அளவு தொடர்ந்து குறைந்து கொண்டே வருவதால், தனியார் லாரிகள் மூலம் விற்பனை செய்யப்படும் குடிநீரை குடம் ஒன்றுக்கு 15 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை பணம் கொடுத்து வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பதாக ஏழை, எளிய மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே, தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் பொதுமக்கள் பாதிக்கப்படாத வகையில் சீரான குடிநீர் விநியோகம் செய்வதை உறுதி செய்வதோடு, மாறிவரும் மழைப்பொழிவுக்கு ஏற்ற வகையில் நவீன மழைநீர் சேமிப்பு கட்டமைப்புகளை வலுப்படுத்திடவும், ஏரி, குளங்களை முறையாக தூர்வாரி, பராமரித்து எதிர்காலங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:
தலைமைக் கழக அலுவலகம்
எண்: 15, வெஸ்ட் காட் ரோடு, ராயப்பேட்டை,
சென்னை – 600 014
மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.