ஆவின் நிர்வாகத்தின் பால் கொள்முதலின் அளவு தொடர் வீழ்ச்சியால் பால் பொருட்களின் உற்பத்தி மற்றும் விற்பனை பாதிக்கும் அபாயம் – நடைமுறைச் சிக்கல்களை களைந்து பால் கொள்முதலை உயர்த்த தேவையான நடவடிக்கைகளை ஆவின் நிர்வாகமும், தமிழக அரசும் மேற்கொள்ள வேண்டும். தமிழக அரசின் கூட்டுறவு பால் நிறுவனமான ஆவின் நிர்வாகத்தின் மூலம் கொள்முதல் செய்யப்படும் பாலின் அளவு 40 லட்சத்திலிருந்து 27 லட்சமாக குறைந்திருப்பதாகவும், அதனால் ஆவினில் தயாரிக்கப்படும் பால் பொருட்களின் உற்பத்தி பாதிக்கப்படும் சூழல் உருவாகியிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. கலப்பட புகார்கள், எடை குறைவு, பச்சை நிற பால் பாக்கெட் விற்பனை நிறுத்தம் என ஆவின் நிர்வாகத்தில் ஏற்பட்ட அடுத்தடுத்த குளறுபடிகளே, அந்நிறுவனத்திற்கு பால் வழங்கும் உற்பத்தியாளர்களின் எண்ணிக்கையும் 4.80 லட்சத்திலிருந்து 3.75 லட்சமாக குறைய முக்கிய காரணம் என குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. கொள்முதல் செய்யும் பாலுக்கு நியாயமான தொகையை வழங்கவோ, மானிய விலையில் மாட்டுத் தீவனம் வழங்கவோ எந்தவித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால், இனியும் ஆவினையும், அரசையும் நம்பி பலனில்லை எனக்கருதி தனியார் பால் நிறுவனங்களை வரவேற்கும் சூழலுக்கு பால் உற்பத்தியாளர்களும், பால் முகவர்களும் தள்ளப்பட்டுள்ளனர். எனவே, ஆவின் பால் உற்பத்தியாளர்களுக்கு ஏற்ற வகையில் நடைமுறைக் கொள்கைகளை மாற்றியமைத்து பால் கொள்முதல் அளவை உயர்த்துவதோடு, பொதுமக்களின் அத்தியாவசியத் தேவைகளில் ஒன்றான பால் மற்றும் பால் பொருட்களின் உற்பத்தி மற்றும் விற்பனை தங்குதடையின்றி தொடர்வதை ஆவின் நிர்வாகமும், தமிழக அரசும் உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

தமிழகத்தில் நாள்தோறும் அதிகரிக்கும் கொலை, கொள்ளைச் சம்பவங்களால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு – தற்போதைய பெரும்பாலான குற்றச் சம்பவங்களின் தொடக்கப்புள்ளியாக இருக்கும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் நடமாட்டத்தை அடியோடு ஒழிப்பதே சட்டம் ஒழுங்கு பிரச்னைக்கு ஒரே தீர்வு. திருநெல்வேலியில் பட்டப்பகலில் இளைஞர் கொடூரக்கொலை, சிவகங்கையில் இளைஞர் வெட்டிக்கொலை, சென்னை கொடுங்கையூரில் மது விருந்தில் பங்கேற்ற நபர் படுகொலை, தஞ்சாவூரில் முதியவர் ஒருவர் நள்ளிரவில் ஓட ஓட விரட்டிக் கொலை, ஆலங்குளம் அருகே லாரி ஓட்டுநர் மற்றும் திருப்பூரில் வடமாநிலத் தொழிலாளர் கொலை என நாள்தோறும் நாளிதழ்களிலும், தொலைக்காட்சிகளிலும் சர்வ சாதாரணமாகிப் போன கொலை தொடர்பான செய்திகள் மிகுந்த வேதனையையும், அதிர்ச்சியையும் அளிக்கின்றன. நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கொலை வழக்கில் இதுவரை எந்தவித முன்னேற்றமும் ஏற்படாத நிலையில், தமிழகத்தில் கடந்த 4 தினங்களில் மட்டும் 10க்கும் அதிகமான கொலைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் அரங்கேறியிருப்பதும், எண்ணற்ற திருட்டுச் சம்பவங்கள் தொடர்கதையாகி வருவதும் காவல்துறை மீதான பொதுமக்களின் நம்பிக்கையை குழிதோண்டி புதைத்திருக்கிறது. தமிழகத்தில் நிகழும் கொலைச் சம்பவங்களுக்கு முன்விரோதம், குடும்பத்தகராறு, கூலிப்படை என பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும், அவை அனைத்தையும் ஒரே புள்ளியில் இணைக்கக் கூடிய கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த தவறியதன் விளைவே, தங்களின் உயிருக்கும், உடமைகளுக்கும் பாதுகாப்பற்ற சூழலை உருவாக்கியிருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். தமிழகத்தில் காவல்துறை செயல்படுகிறதா ? அந்த காவல்துறையை வழிநடத்தும் ஒரு ஆட்சி தமிழகத்தில் இருக்கிறதா ? என எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் எழுப்பிய அதே கேள்விகளை, தற்போது அவரை நோக்கியே ஒட்டுமொத்த தமிழகமும் எழுப்பத் தொடங்கியிருப்பது, திமுக அரசில் காவல்துறை முழுவதும் செயலிழந்துவிட்டதையே வெளிப்படுத்துகிறது. எனவே, இனியாவது தமிழக மக்களின் பாதுகாப்பில் அக்கறை செலுத்தி, கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் நடைபெறாத வகையில், சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதோடு, குற்றச் சம்பவங்கள் பலவற்றிற்கும் முக்கிய காரணமான கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் நடமாட்டத்தை அடியோடு ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என தமிழக முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டி அமராவதி ஆற்றுப்படுகையை பாலைவனமாக்கும் கேரள அரசின் முயற்சி தடுத்து நிறுத்தப்பட வேண்டும் – கூட்டணி தர்மத்திற்காக மாநிலத்தின் உரிமையை பறிகொடுக்கும் திமுக அரசின் சுயநல செயல்பாடுகளை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் சிலந்தி ஆற்றின் குறுக்கே பெருகுடா எனும் இடத்தில் தடுப்பணையை கட்டி தமிழ்நாட்டின் பிரதான அணையான அமராவதி அணைக்கு வரும் நீரை முற்றிலுமாக தடுத்து நிறுத்த முயற்சிக்கும் கேரள அரசின் நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது. உடுமலை அருகே உள்ள அமராவதி அணையின் வாயிலாக திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டத்தில் உள்ள சுமார் 55 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுவதோடு, நூற்றுக்கும் அதிகமான கூட்டுக்குடிநீர் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், தற்போது கேரள அரசால் கட்டப்படும் இந்த புதிய அணையால் விவசாயம் மட்டுமல்லாது குடிநீர் பஞ்சமும் நிலவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கேரள மாநிலத்தைச் சேர்ந்த தனியார் நிறுவனத்தின் குடிநீர் தயாரிப்பு ஆலைக்காக கட்டப்படுவதாக கூறப்படும் இந்த அணை கட்டி முடிக்கப்பட்டால், அமராவதி அணைக்க்கு வரும் நீர் வரத்து முற்றிலுமாக குறைந்து ஆற்றுப்படுகை முழுவதும் பாலைவனமாகும் சூழல் உருவாகும் என அப்பகுதி விவசாயிகளும், பொதுமக்களும் வேதனை தெரிவித்துள்ளனர். அமராவதி ஆற்றின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் பகுதிகளில் தமிழக அரசுக்கு தெரியாமல் கேரள அரசு அணை கட்டுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லாத பட்சத்தில், கூட்டணி தர்மத்திற்காக கர்நாடகாவை தொடர்ந்து கேரளாவிடமும் தமிழகத்தின் உரிமையும், விவசாயிகளின் வாழ்வாதாரமும் அடகு வைக்கப்படுகிறதா? என்ற கேள்வி அனைவரின் மத்தியிலும் எழத்தொடங்கியுள்ளது. எனவே, பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களின் பாசன வசதியையும், பல லட்சக்கணக்கான மக்களின் குடிநீர் தேவையையும் பூர்த்தி செய்துவரும் அமராவதி அணையின் குறுக்கே புதிய அணைகட்டும் கேரள அரசின் முயற்சியை உடனடியாக தடுத்து நிறுத்தி விவசாயிகள் மற்றும் பொதுமக்களுடன் சேர்த்து மாநில உரிமைகளையும் பாதுகாக்க முன்வர வேண்டும் என தமிழக முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

நூற்றாண்டு கண்ட மாஞ்சோலை எஸ்டேட் மூடப்படுவதால் வேலையிழக்கும் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் – தேயிலைத் தோட்டத்தை அரசே ஏற்று நடத்தி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும். திருநெல்வேலி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்திருக்கும் மாஞ்சோலை எஸ்டேட்டிற்கான மும்பையைச் சேர்ந்த நிறுவனத்தின் குத்தகை காலம் நிறைவடையவிருக்கும் நிலையில், தலைமுறை தலைமுறையாக அங்கு பணியாற்றி வரும் தொழிலாளர்களை வெளியேற்றும் பணிகள் நடைபெற்றுவருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. எண்ணற்ற அடக்குமுறை, சுரண்டல்களை எதிர்கொண்டு காலம் காலமாக மாஞ்சோலை எஸ்டேட் பகுதியிலேயே தங்கியிருந்து பணியாற்றி வரும் தொழிலாளர்கள் வெளியேற்றப்படுவதால், தங்களின் வாழ்வாதாரத்திற்கு வழியின்றி சொந்தமாநிலத்திலேயே அகதிகளாகும் சூழலுக்கு தள்ளப்பட்டிருப்பது மிகுந்த வேதனைக்குரியது. கூலி உயர்வு கோரி நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஊர்வலம் சென்ற தொழிலாளர்கள் மீது இதே திமுக அரசின் காவல்துறை நடத்திய தடியடியில், தாமிரபரணி ஆற்றில் குதித்து 17 பேர் உயிரிழந்த துயரம் அரங்கேறி கால் நூற்றாண்டுகள் கடந்திருந்தாலும், தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் துளியளவும் மேம்படவில்லை என்பதை தற்போதைய சூழல் உணர்த்துகிறது. நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் உள்ள தமிழ்நாடு தேயிலைத் தோட்ட கழகத்திற்கு சொந்தமான தேயிலைத் தோட்டங்களைப் போல மாஞ்சோலை எஸ்டேட்டையும் தமிழக அரசே ஏற்று நடத்தி தங்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என அங்கு பணியாற்றிக் கொண்டிருக்கும் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். எனவே, தேயிலை பறிப்பதை தவிர வேறு எந்த தொழிலும் தெரியாத நூற்றுக்கணக்கான தொழிலாளர்களின் வேலையுடன், வாழ்வாதாரத்தையும் பாதுகாக்கும் வகையில், வனத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் மாஞ்சோலை எஸ்டேட் பகுதியை அரசே ஏற்று நடத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

டெல்லியில் இன்று நடைபெற்ற காவிரி நீர் முறைப்படுத்தும் குழுக் கூட்டத்தில் நேரடியாக பங்கேற்கவிருந்த தமிழக பிரதிநிதிகளுக்கு டெல்லி செல்ல தடை விதித்து, ஆன்லைன் வாயிலாக மட்டுமே பங்கேற்க வேண்டும் என தமிழக நீர்வளத்துறை உத்தரவிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு பரிந்துரைகளை வழங்கும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழுக்கூட்டத்தின் முக்கியத்துவத்தை முழுமையாக உணராத திமுக அரசு, அக்கூட்டத்திற்கு தமிழக பிரதிநிதிகளை நேரடியாக அனுப்பி மாநிலத்தின் உரிமையை கோராமல், ஆன்லைன் மூலமாக பங்கேற்க வைத்து வேடிக்கை பார்க்க வைத்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது. ஏற்கனவே கடந்த பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கான காவிரி நீரையே இதுவரை முழுமையாக பெற முடியாத சூழலில், தமிழகத்திற்கான நீரை கேட்டுப்பெற வேண்டிய காவிரி நீர் முறைப்படுத்தும் குழுக்கூட்டத்தில் பங்கேற்க தமிழக பிரதிநிதிகளுக்கு விதிக்கப்பட்டிருக்கும் தடை, நம் மாநில உரிமைகளை அண்டை மாநிலங்களுக்கு தாமாக முன்வந்து நாமே தாரைவார்த்து கொடுப்பதற்கு சமமாகும். எனவே, காவிரி ஆணையக் கூட்டங்களில் நேரில் பங்கேற்க தமிழக பிரதிநிதிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருக்கும் பட்சத்தில் அதனை உடனடியாக நீக்கி, இனி வரும் காலங்களில் நடைபெறும் காவிரி தொடர்பான அனைத்துக் கூட்டங்களில் தமிழக பிரதிநிதிகளை பங்கேற்கச் செய்து தமிழகத்திற்கான காவிரி நீரை முழுமையாகப் பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களுக்கு கனமழைக்கான எச்சரிக்கை விடுத்திருக்கும் வானிலை ஆய்வு மையம் – மழை, வெள்ள பாதிப்பிலிருந்து பொதுமக்களை பாதுகாக்க போர்க்கால அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும். ராமநாதபுரம், புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான சிவப்பு நிற எச்சரிக்கையும், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, சிவகங்கை, நெல்லை, திண்டுக்கல், நீலகிரி என தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் வரும் 20 ஆம் தேதி வரை கனமழைக்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கையையும், சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையை வழக்கம்போல அலட்சியமாக எதிர்கொள்ளாமல், கனமழை பெய்ய வாய்ப்பிருக்கும் மாவட்டங்களில் பொதுமக்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய அந்தந்த மாவட்ட நிர்வாகங்களின் அனைத்து துறைகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும். வைகை அணையிலிருந்து நீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், ஆற்றங்கரையோரங்களில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பதோடு, கனமழை தொடரும் பட்சத்தில் பொதுமக்களுக்கு தேவையான உணவு, குடிநீர் போன்ற அடிப்படைத் தேவைகள், மீட்பு மற்றும் நிவாரண முகாம்கள் முன்கூட்டியே தயாராக இருப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். மேலும், வானிலை ஆய்வு மையத்துடன் முறையான தொடர்பில் இருந்து, அவர்கள் விடுக்கும் எச்சரிக்கையை சரிவர கண்காணித்து அடுத்து வரும் சில தினங்களில் பெய்யக்கூடிய மழையின் அளவை முன்கூட்டியே கணித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்வதோடு, மழைக்காலங்களில் பரவக்கூடிய நோய்த்தொற்றுகளில் இருந்தும் மக்களை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:
தலைமைக் கழக அலுவலகம்
எண்: 15, வெஸ்ட் காட் ரோடு, ராயப்பேட்டை,
சென்னை – 600 014
மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.