ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள் இல்லாத காரணத்தினால் சிகிச்சைக்காக வந்த நபர் உயிரிழப்பு – அடிப்படை வசதிகள் கூட இல்லாத அரசு மருத்துவமனைகளால் கேள்விக்குறியாகும் பொதுமக்களின் உயிர் பாதுகாப்பு. ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ். மங்கலத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள் இல்லாத காரணத்தினால், மின்சாரம் தாக்கி படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக வந்த நபர் ஒருவர் உயிரிழந்திருப்பதாக வெளியாகியிருக்கும் செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. ஆர்.எஸ்.மங்கலம் மட்டுமல்ல தமிழகம் முழுவதுமே ஆரம்ப சுகாதார நிலையங்களில் தொடங்கி மாவட்ட தலைமை மருத்துவமனை வரையிலான அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் மருத்துவர்கள், செவிலியர்கள் பற்றாக்குறை மற்றும் மருத்துவ உபகரணங்கள் தட்டுப்பாடு குறித்து பலமுறை சுட்டிக்காட்டியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத சுகாதாரத்துறையின் தொடர் அலட்சியப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது. கடந்த சில மாதங்களுக்கு முன்பாக ராமநாதபுரத்தில் ஆய்வு எனும் பெயரில் சுமார் 14 கிலோ மீட்டர் நடந்தே சென்று ஆரம்ப சுகாதார நிலையங்களை பார்வையிட்ட சுகாதாரத்துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் அவர்கள், அங்கு மருத்துவர்கள் இருக்கிறார்களா ? என்பதை உறுதி செய்திருந்தால் இதுபோன்ற உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்காது என பொதுமக்கள் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்துகின்றனர். எனவே, அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் அவல நிலையில் காட்சியளிக்கும் அரசு மருத்துவமனைகளின் மீது இனியாவது கூடுதல் கவனம் செலுத்தி மருத்துவர்கள், செவிலியர்கள் பற்றாக்குறையை போக்குவதோடு, பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்கத் தேவையான மருத்துவ உபகரணங்கள் போதுமான அளவு இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என சுகாதாரத்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.

அண்ணா பல்கலைக்கழக விவகாரம் உட்பட தமிழகத்தில் அடியோடு சீரழிந்திருக்கும் சட்டம் ஒழுங்கு பிரச்னைகளை திசை திருப்பவே திமுக போராட்டம் – திமுகவின் சந்தர்ப்பவாத அரசியலை தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள். மாண்புமிகு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களுக்கு எதிராக தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இன்று திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் ஏற்படுத்திக் கொண்டிருக்கும் அதிர்வலைகளை திசை திருப்பவும், பட்டிதொட்டியெங்கும் பரவியிருக்கும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் தாராளப் புழக்கத்தால் தினந்தோறும் அரங்கேறும் கொலை, கொள்ளை உள்ளிட்ட சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளை மூடி மறைக்கவுமே திமுக இந்தப் போராட்டத்தை நடத்தியிருக்கிறது என்பது வெட்ட வெளிச்சமாகத் தெரிகிறது. தமிழகத்தில் குழந்தைகள் முதல் வயதான மூதாட்டி வரை அனைத்து பெண்களுக்கும் பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதை கண்டித்து எதிர்க்கட்சிகள் நடத்திய போராட்டத்திற்கு அனுமதி மறுத்ததோடு, அதில் பங்கேற்க வந்த தலைவர்களையும் வழிமறித்து கைது செய்த காவல்துறை, இன்று திமுக சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற திமுகவினரையும் கைது செய்யாதது ஏன் ? திமுகவை சார்ந்தவர்களே பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபடுவதாகவும், குற்றச்சம்பவங்களுக்கு துணைபோவதாகவும் சொல்லப்படும் சூழலில், அனைவருக்கும் பொதுவான காவல் துறை ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டு, அக்குற்றசம்பவங்களில் இருந்து திமுகவினரை பாதுகாப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே, ஆட்சிக்கு வருவதற்கு முன்பு ஒரு நிலைப்பாடு, ஆட்சிக்கு வந்த பின்பு அதற்கு எதிரான நிலைப்பாடு என இரட்டை நிலைப்பாட்டை கொண்டிருக்கும் திமுக நடத்தும் இதுபோன்ற அரசியல் கபட நாடகங்களை உன்னிப்பாக கவனித்து வரும் தமிழக மக்கள் விரைவில் அதற்கான எதிர்வினையை ஆற்றுவார்கள் !

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.