கானல் நீராக மாறிவரும் சீர்மரபினர் சமூகத்தினருக்கான ஒற்றைச் சான்றிதழ் நடைமுறை – வாக்குறுதியளித்துவிட்டு அதனை நிறைவேற்ற மறுப்பது சீர்மரபினருக்கு திமுக அரசு இழைக்கும் நம்பிக்கைத் துரோகம் ஆகும். தென்மாவட்டங்களில் உள்ள சீர்மரபினர் சமூகத்தினர் மத்திய மாநில அரசுகளின் திட்டங்களை பெற ஒன்றைச் சான்றிதழ் வழங்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டு ஓராண்டாகியும் இதுவரை அதற்கான அரசாணை பிறப்பிக்கப்படவில்லை என நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. சீர்மரபு வகுப்பினர் (DNC) மற்றும் சீர்மரபு பழங்குடியினர் (DNT) என்ற இரட்டைச் சான்றிதழ் முறையை மாற்றி (DNT) என்ற ஒற்றைச் சான்றிதழ் வழங்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளுடன் கூடிய அரசாணை இதுவரை பிறப்பிக்காமல் இருப்பதால் சீர்மரபினர் மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களை பெறுவதில் சிக்கல் ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது. 2021 சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது, சீர்மரபினர்களுக்கு ஒற்றைச் சான்றிதழ் வழங்கப்படும் என வாக்குறுதியளித்துவிட்டு, 2024 நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிப்புக்கு ஒருசில மணி நேரங்களுக்கு முன்பாக அவசரகதியில் அதற்கான அறிவிப்பையும் வெளியிட்ட முதல்வர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் அதனை செயல்பாட்டிற்கு கொண்டுவராமல் காலம் தாழ்த்துவது ஒட்டுமொத்த சீர்மரபினர் சமூகத்திற்கும் இழைக்கும் நம்பிக்கை துரோகம் ஆகும். தேர்தலுக்கு முன்பாக எண்ணற்ற வாக்குறுதிகளை அள்ளிவீசுவதும், ஆட்சிக்கு வந்தபின்பு அந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற மறுப்பதும், மறந்து விடுவதும் திமுகவினரின் அடிப்படை குணம் என்பது, சீர்மரபினர் ஒற்றைச் சான்றிதழ் விவகாரத்தில் மீண்டும் ஒருமுறை நிரூபணமாகியுள்ளது. எனவே, இனியும் சீர்மரபினர் சமூகத்தினரை ஏமாற்றாமல், சீர்மரபு பழங்குடியினர் என்ற ஒற்றைச் சான்றிதழ் வழங்குவதற்கான அரசாணையை உடனடியாக வெளியிடுவதோடு, சீர்மரபினர் சமூகத்தினருக்கு சட்டப்பூர்வமான உரிமைகளும் சலுகைகளும் தொடர்ந்து கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.

தமிழகத்தில் அடுத்தடுத்து அரங்கேறும் படுகொலைச் சம்பவங்களால் பொதுமக்கள் பதற்றம் – அமைதிப் பூங்காவாக திகழ்ந்த தமிழகத்தை கொலைகளும், கொள்ளைகளும் நிறைந்த மாநிலமாக மாற்றிய திராவிட மாடல் அரசுக்கு கடும் கண்டனம். திருத்தணி அருகே இளைஞர் வெட்டிக் கொலை, ஈரோட்டில் ரவுடி வழிமறித்து படுகொலை, காரைக்குடியில் காவல்நிலையத்தில் கையெழுத்திட்டு வெளியே வந்தவர் ஓட ஓட விரட்டிக் கொலை, கும்பகோணத்தில் ஜாமீனில் வந்த ரவுடி கொலை என ஊடகங்களில் தினம்தோறும் வெளியாகிவரும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்துகின்றன. குடியிருப்புகள், பொது இடங்கள், தேசிய நெடுஞ்சாலைகள் முதல் தமிழகத்தின் பட்டிதொட்டிகள் வரை அடுத்தடுத்து அரங்கேறும் படுகொலைச் சம்பவங்கள் திமுக ஆட்சியில் சட்டமும் இல்லை ஒழுங்கும் இல்லை என்பதையே மீண்டும் மீண்டும் வெளிச்சம் போட்டு காட்டும் வகையில் அமைந்திருக்கின்றன. காவல்துறையின் கண்காணிப்பில் இருக்க வேண்டிய ரவுடிகள், துளியளவும் கட்டுப்பாடின்றி அவரவர் விருப்பம் போல எந்தவித அச்ச உணர்வுமின்றி செயல்படுவதே கொலைகளும், கொள்ளைகளும் நிறைந்த மாநிலமாக தமிழகம் மாறியிருப்பதற்கு முக்கிய காரணம் என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். முல்லைப் பெரியாற்றில் புதிய அணையை கட்டி தென் மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்க முயற்சிக்கும் கேரளம், காவிரி டெல்டா விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் மேகதாது அணையை கட்டியேத் தீருவோம் என பிடிவாதம் பிடிக்கும் கர்நாடகம் என தமிழகத்தின் உரிமைகளை பறிப்பதையே குறிக்கோளாய் கொண்டிருக்கும் அண்டை மாநில ஆட்சியாளர்களை அருகில் அமரவைத்துக்கொண்டு, அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத தொகுதி சீரமைப்பு தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடத்துவது தமிழகத்தில் அடியோடு சீர்குலைந்திருக்கும் சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளையும், அரசு நிர்வாகத்தின் மீதான ஊழல் புகார்களை திசைத்திருப்புவதற்கு திமுக அரசு நடத்தும் நாடகம் என்பதை தமிழக மக்கள் ஒவ்வொருவரும் நன்கு அறிவர். எனவே, நாளொரு நாடகம் பொழுதொரு நடிப்பு, என தன்னைத்தானே பெருமை பேசும் விளம்பர மோகத்தை விட்டொழித்து, திமுக ஆட்சியின் அடையாளமாகவே மாறிவிட்ட கொலை, கொள்ளை உள்ளிட்ட சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளை களைய தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்து மாவட்ட காவல் அதிகாரிகளுக்கும் உரிய உத்தரவுகளை வழங்கிடுமாறு முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.

பழனி முருகன் கோயிலில் தரிசனத்திற்காக காத்திருந்த பக்தர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழப்பு – இந்து சமய அறநிலையத்துறை இயங்குகிறதா ? உறங்குகிறதா ? திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயிலைத் தொடர்ந்து பழனி முருகன் கோயிலிலும் தரிசனத்திற்காக காத்திருந்த பக்தர் ஒருவர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்திருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வரும் முக்கியமான திருக்கோயில்களில், அவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கூட செய்து தராமல் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வைத்திருக்கும் இந்துசமய அறநிலையத்துறையின் அலட்சியப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது. ஒவ்வொரு முறையும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறும் போதும் அதனை தடுப்பதற்கான வழிகளை ஆராயாமல், தட்டிக் கழிப்பதிலும், புதுப்புது காரணங்களை புனைவதிலுமே முழு கவனம் செலுத்தும் இந்து சமய அறநிலையத்துறையின் மெத்தனப்போக்கே இதுவரையிலான மூன்று உயிரிழப்புகளுக்கு முக்கிய காரணம் என சக பக்தர்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே, திருக்கோயில்களில் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்கும் வகையில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை உடனடியாக ஏற்படுத்தி தருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என இந்து சமய அறநிலையத்துறையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.

அனைவரிடத்திலும் அன்பு செலுத்தி, தன்னால் இயன்றதை பிறருக்கு தர்மம் செய்து சகோதரத்துவத்துடன் வாழ வேண்டும் என்ற நபிகள் நாயகம் அவர்களின் போதனைகளை பின்பற்றி ஆன்மீக சிந்தனை, தொழுகை, ஏழைகளுக்கு உதவுதல் போன்ற நல்ல செயல்களுக்கு வழிவகுக்கும் வகையில் இஸ்லாமியப் பெருமக்களால் கடைபிடிக்கப்படும் ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்வு இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மாஅவர்களின் வழியில் செயல்படும்அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன்அவர்கள் தலைமையில் வரும் 26.03.2025, புதன் கிழமை அன்று மாலை 4.00 மணியளவில் சென்னை, எழும்பூரில் உள்ள சிராஜ் மஹாலில் நடைபெற உள்ளது. இந்நிகழ்வில் தலைமைக் கழக நிர்வாகிகள், தமிழகம் முழுவதும் உள்ள கழக சிறுபான்மையினர் நலப்பிரிவின் நிர்வாகிகள், மாவட்ட, பகுதி, ஒன்றிய, நகர, பேரூர், வார்டு/வட்ட, கிளைக் கழகம் மற்றும் அனைத்து சார்பு அணிகளின் நிர்வாகிகள், கழகத் தொண்டர்கள், இஸ்லாமிய சகோதரர்கள் என அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து 286 நாட்களுக்கு பிறகு பூமிக்கு பாதுகாப்பாக திரும்பியிருக்கும் விண்வெளி வீரர்கள் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோரை வரவேற்று மகிழ்கிறோம். எட்டு நாட்களில் முடிவடைய வேண்டிய விண்வெளிப் பயணம் ஒன்பது மாதங்கள் நீடித்தாலும், புதிய சூழ்நிலைக்கு ஏற்ப தங்களை தகவமைத்துக் கொண்டு அத்தகைய நிலையிலும் பல்வேறு விதமான ஆராய்ச்சிகளை மேற்கொண்ட இருவரின் வியக்கத்தக்க பணிகள் பாராட்டுக்குரியது. அதிலும், குறிப்பாக விண்வெளியில் நீண்டகாலம் தங்கிய முதல் பெண் என்ற சாதனையை படைத்திருக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் அவர்களின் விடா முயற்சியும், மன உறுதியும் விண்வெளி ஆராய்ச்சியில் சாதிக்க நினைக்கும் இளம் விண்வெளி வீரர்கள் ஒவ்வொருவருக்கும் தகுந்த பாடமாகவும் உந்து சக்தியாகவும் விளங்கும்.

நெல்லையில் ஓய்வுபெற்ற காவல் ஆய்வாளர் படுகொலை – அதளபாதாளத்திற்கு சென்று கொண்டிருக்கும் சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளை களைவது எப்போது ? நெல்லையில் அதிகாலை தொழுகை முடித்து விட்டு வீடு திரும்பிய ஓய்வுபெற்ற காவல் ஆய்வாளர் திரு.ஜாஹீர் உசேன் அவர்கள் அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டிருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. காவல்துறையில் இருந்து ஓய்வுபெற்ற பின் பல்வேறு சமூக நலன் சார்ந்த பணிகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டிருந்த திரு.ஜாஹீர் உசேன் அவர்கள் படுகொலை செய்யப்பட்டிருப்பது திட்டமிட்ட செயலாக இருக்கலாம் என்ற சந்தேகமும் அப்பகுதி மக்கள் மத்தியில் எழுந்திருக்கிறது. திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பின் தலைநகர் சென்னையில் தொடங்கி தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் சர்வ சாதாரணமாக நடைபெறும் இதுபோன்ற படுகொலைச் சம்பவங்கள், சட்டம் ஒழுங்கு சீர்கேடுகள் உச்சமடைந்திருப்பதையே வெளிச்சம் போட்டு காட்டுகின்றன. குறிப்பாக சமூக நலன் சார்ந்து இயங்கி வருவோர்கள் குறிவைத்து கொலை செய்யப்படுவதும் தொடர்கதையாகி வருகிறது. சாதாரண பொதுமக்கள் தொடங்கி, அரசு ஊழியர்கள், அரசியல் கட்சித்தலைவர்கள் வரை யாருக்குமே பாதுகாப்பற்ற சூழலை உருவாக்கியிருப்பது மட்டுமே திமுக அரசின் நான்காண்டு கால சாதனை என தமிழக மக்கள் கொந்தளிக்கத் தொடங்கியுள்ளனர். எனவே, ஓய்வுபெற்ற காவல் ஆய்வாளர் திரு.ஜாஹீர் உசேன் படுகொலை வழக்கில் உண்மைக் குற்றவாளிகளை கைது செய்து தகுந்த தண்டனை பெற்றுத் தருவதோடு, இனியாவது அதளபாதாளத்தில் இருக்கும் சட்டம் ஒழுங்கின் மீது கூடுதல் கவனம் செலுத்தி பொதுமக்களுக்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தித் தர வேண்டும் என முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.

முதல்வர் மருந்தகங்கள் திறக்கப்பட்ட ஒரே மாதத்திற்குள் மருந்துகள் தட்டுப்பாடு – ஏழை, எளிய மக்களை சிரமத்திற்குள்ளாக்கும் திமுக அரசின் அரசியல் காழ்ப்புணர்ச்சி கடும் கண்டனத்திற்குரியது. முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களால் கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி திறக்கப்பட்ட முதல்வர் மருந்தகங்களில் மருந்துகள் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. முதலமைச்சர் அறிவித்துவிட்டார் என்ற ஒரே காரணத்திற்காக மட்டும் கூட்டுறவு நிறுவனங்களுக்கு நெருக்கடி கொடுத்து அவசரகதியில் திறக்கப்பட்ட முதல்வர் மருந்தகங்களில் மக்களுக்கு தேவையான மருந்துகள் இல்லை என்ற புகாரும் எழுந்துள்ளது. ஏழை, எளிய மக்களுக்கு தரமான மருந்துகளை மலிவான விலையில் வழங்க வேண்டும் என்ற எண்ணத்தில் இதயதெய்வம் அம்மா அவர்களால் தொடங்கப்பட்ட அம்மா மருந்தகங்களை முடக்கிவிட்டு, முதல்வர் மருந்தகங்களை திறந்து அதனையும் பயன்பாடற்ற நிலையில் வைத்திருப்பது திமுக அரசின் அப்பட்டமான காழ்ப்புணர்ச்சியையே வெளிப்படுத்துகிறது. எனவே, இனியும் அவசரகதியிலும் அரசியல் காழ்ப்புணர்ச்சியிலும் திட்டங்களை தொடங்குவதை நிறுத்திவிட்டு அம்மா மருந்தகங்கள் போன்ற மக்களின் மகத்தான ஆதரவு பெற்ற திட்டங்களை தொடர்ந்து நடத்திட முன்வர வேண்டும் என முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.