June 2, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 தென்கொரியாவில் நடைபெற்ற ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தொடரில் 8 தங்கம், 10 வெள்ளி, 6 வெண்கலம் என மொத்தமாக 24 பதக்கங்களை குவித்து பதக்கப் பட்டியலில் இந்திய அணி இரண்டாவது இடம் பிடித்திருக்கும் செய்தி மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. 4*400 தொடர் ஓட்டத்தில் தங்கம் வென்ற இந்திய அணியில் இடம் பெற்றிருந்த தமிழக வீராங்கனை செல்வி சுபா வெங்கடேசன் அவர்கள், 4*100 தொடர் ஓட்டத்தில் வெள்ளி வென்ற செல்வி. அபிநயா நடராஜன் அவர்கள், கால் வீக்கத்தையும் பொருட்படுத்தாமல் 400 மீட்டர் தடை தாண்டுதலில் பங்கேற்று வெண்கலம் வென்ற செல்வி. வித்யா ராமராஜ் அவர்கள் உட்பட, பதக்கங்களை குவித்து தாய்நாட்டிற்கு பெருமை சேர்த்த வீரர், வீராங்கனைகளின் வெற்றிப் பயணம் மென்மேலும் தொடர வாழ்த்துகிறேன்.
June 2, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 அண்ணா பல்கலைக்கழக மாணவியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனை – சென்னை மகளிர் நீதிமன்றத்தின் தீர்ப்பு மிகுந்த வரவேற்புக்குரியது. தமிழகத்தையே உலுக்கிய அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகளுக்கு எந்த தண்டனை குறைப்பும் இல்லாத அளவிற்கு ஆயுள் தண்டனை விதித்திருக்கும் சென்னை மகளிர் நீதிமன்றத்தின் தீர்ப்பு வரவேற்புக்குரியது. பெண்களின் உரிமைக்கும் சுதந்திரத்திற்கும் உரிய மதிப்பளிக்காமல் அவர்களை போகப் பொருட்களாக மட்டுமே பார்த்து பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கும் குரூர மனம் படைத்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு விரைவில் தண்டனை நிச்சயம் என்பதை இவ்வழக்கின் விசாரணையை விரைந்து முடித்து தீர்ப்பு வழங்கிய மகளிர் நீதிமன்றம் உறுதிபடுத்தியுள்ளது. குற்றவாளி ஞானசேகரனுக்கு வழங்கப்பட்டிருக்கும் இந்த தண்டனை, தமிழகப் பெண்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் அமைந்திருந்தாலும், ஆட்சிப்பொறுப்பேற்ற நான்கு ஆண்டுகளில் அன்றாடம் ஏதோ ஒரு இடத்தில், ஏதோ ஒரு வகையில் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுவதை தடுக்கத் தேவையான நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
June 2, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 கிராமிய இசையில் தொடங்கி மேற்கத்திய சிம்பொனி இசை வரை, தலைமுறைகள் பல கடந்து இசை உலகின் ஈடு இணையற்ற மாமேதையாக திகழ்பவரும், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான இசைஞானி ‘பத்ம விபூஷண்’ திரு. இளையராஜா அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். ஒட்டுமொத்த தேசமும் பெருமைப் படும் அளவிற்கு இசை உலகின் ராஜாதி ராஜாவாக வலம் வரும் திரு.இளையராஜா அவர்கள் பூரண உடல் நலத்தோடும், நீண்ட ஆயுளோடும் மேலும் பல சாதனைகள் படைக்க எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். @ilaiyaraaja
June 2, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 தெலுங்கானா மற்றும் புதுச்சேரியின் முன்னாள் ஆளுநரும் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவருமான மருத்துவர் திருமதி.தமிழிசை சௌந்தரராஜன் அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். சகோதரி திருமதி.தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் நீண்ட ஆயுளோடும், நல்ல உடல் நலத்தோடும் தொடர்ந்து மக்கள் பணியாற்ற எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
May 31, 2025 In ticker‚ தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements‚ பத்திரிகை வெளியீடுகள் 0 மாவீரர் வல்லநாடு பகதூர் வெள்ளையத்தேவர் அவர்களின் பிறந்த தினம் – கழக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
May 31, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 தாய் நாட்டின் விடுதலைப் போரை தொடங்கிவைத்த பாஞ்சாலங்குறிச்சி மன்னன் வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களின் வீரம் செறிந்த தளபதியும், உற்ற, உயிர்காத்த தோழனுமாகிய மாவீரர் வல்லநாடு பகதூர் வெள்ளையத்தேவர் அவர்களின் பிறந்த நாள் இன்று. அறிவு மற்றும் ஆற்றலில் தலைசிறந்த படைத் தளபதியாகவும், ஆங்கிலேயர்களுக்கு எதிரான போர்க்களத்தில் ஈடு இணையற்ற மாவீரராகவும் திகழ்ந்த பகதூர் வெள்ளையத் தேவர் அவர்களின் வீரத்தையும், துணிச்சலையும் போற்றி வணங்கிடுவோம்.
May 31, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 தமிழக அரசுப் பணிகளில் இருந்து இன்று ஒரே நாளில் 8,144 ஊழியர்கள் ஓய்வு – காலிப்பணியிடங்களை நிரப்பாமல் தற்காலிக ஊழியர்களையும், ஆலோசகர்களையும் வைத்தே அரசு நிர்வாகத்தை நடத்த திட்டமிட்டிருக்கிறதா திமுக அரசு ? தமிழக அரசின் குரூப் ஏ, குரூப் பி, குரூப் டி உள்ளிட்ட பணியிடங்களைச் சேர்ந்த 8 ஆயிரத்து 144 அரசுப் பணியாளர்கள் இன்று ஒரே நாளில் ஓய்வுபெறுவதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. தமிழக அரசின் அனைத்து துறைகளிலும் காலியாக உள்ள 3.5 லட்சம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும், ஆண்டுதோறும் பத்து லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என வாக்குறுதியளித்த திமுக, ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகள் கடந்தும், அந்த வாக்குறுதியில் 25 சதவிகிதத்தை கூட நிறைவேற்றவில்லை என்பதற்கு அரசுத்துறைகளில் நிலவும் பணியாளர் பற்றாக்குறையே சாட்சியாக அமைந்திருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் பல்லாயிரக்கணக்கான அரசு ஊழியர்கள் பணி ஓய்வு பெறுவார்கள் என்பது முன்கூட்டியே தெரிந்திருந்தும், அதற்கு ஏற்ப அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் போதுமான எண்ணிக்கையில் அரசு ஊழியர்களை நியமிக்கத் தவறிய அரசு நிர்வாகத்தின் அலட்சியப் போக்கிற்கு முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் என்ன பதில் சொல்லப்போகிறார் ? அரசுப்பணி கனவில் லட்சக்கணகான இளைஞர்கள் இரவு, பகலாக போட்டித் தேர்வுகளுக்கு தயாராகிக் கொண்டிருக்கும் நிலையில், ஓய்வுபெற்ற ஊழியர்களையும், ஆலோசகர்களையும் மறைமுகமாக நியமித்து இளைய சமுதாயத்தின் எதிர்காலத்தை சீரழிப்பது தான் திராவிட மாடல் அரசின் சமூக நீதியா? என்ற கேள்வி அனைவரின் மத்தியிலும் எழுந்துள்ளது. கோடை விடுமுறை முடிந்து அரசுப்பள்ளிகள் நாளை மறுநாள் திறக்கப்பட உள்ள நிலையில், இன்று ஒரே நாளில் ஏராளமான ஆசிரியர்கள் ஓய்வுபெறுவது பள்ளி மாணவ, மாணவியர்களின் கல்வித்திறனுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதோடு, அரசுப்பணியாளர்களின் காலிப்பணியிடங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதால் மக்களுக்கு கிடைக்க வேண்டிய அரசு நலத்திட்டங்களும் உரிய நேரத்தில் சென்றடைவதும் கேள்விக்குறியாகியுள்ளது. எனவே, தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் அரசுத்துறைகளில் நிலவும் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்புவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு, திமுக ஆட்சிக்கு வந்த பின் அரசுத்துறைகளில் இதுவரை நிரப்பப்பட்ட காலிப்பணியிடங்களின் விவரங்களை வெளிப்படைத்தன்மையோடு வெளியிட வேண்டும் எனவும் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
May 30, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 சிவகிரி வயதான தம்பதி கொலை வழக்கின் குற்றவாளிகள் வாக்குமூலம் அளித்த ஓரிரு தினங்களில் விசாரணை அதிகாரி மாற்றம் – குற்றவாளிகளை நெருங்க முடியாத கொலை வழக்குகளில் அப்பாவி பொதுமக்களை கைது செய்து சிறையில் அடைக்கிறதா தமிழக காவல்துறை ? ஈரோடு மாவட்டம் சிவகிரியில் வயதான தம்பதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட மூவர், மேற்கு மாவட்டங்களில் கடந்த சில ஆண்டுகளில் அடுத்தடுத்து நடைபெற்ற கொலைச் சம்பவங்களை செய்தாக ஒப்புக்கொண்டதாக காவல்துறை தெரிவித்துள்ள நிலையில், குறிப்பிட்ட அதே கொலைச் சம்பவங்களில் கைது செய்யப்பட்டு நீண்ட நாட்களாக சிறையில் அடைக்கப்பட்டிருப்பது யார் ? என்ற கேள்வி அனைவரின் மத்தியிலும் எழுந்துள்ளது. கடந்த ஆண்டு திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே நடைபெற்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிகளை கண்டறிய முடியாத காவல்துறை, செய்யாத குற்றத்தை ஒப்புக்கொள்ளச் சொல்லி பழங்குடியின மக்களை கட்டாயப்படுத்தியதற்கும், சென்னிமலை மற்றும் ஒட்டன் குட்டையில் 2022 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற கொலைச் சம்பவத்திற்கு தொடர்புடையவர்கள் எனக்கூறி 11 பேரை கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டிருப்பதற்கும் நெருங்கிய தொடர்பிருப்பதாக கூறப்படும் செய்திகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. குற்றவாளிகளை நெருங்க முடியாத கொலை வழக்கில், தங்கள் மீதான அவப்பெயரை போக்க அப்பாவி மக்களை வற்புறுத்தி கொலை செய்ததாக வாக்குமூலத்தை பெற்று அவர்களை சிறையில் அடைக்கும் நடவடிக்கையில் காவல்துறை இறங்கியிருக்கிறதா ? இதுவரை எத்தனை கொலை வழக்குகளில் இது போன்ற அப்பாவிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள் ? என்ற அடுக்கடுக்கான கேள்விகளும் தற்போது எழுகிறது. மேலும், சென்னிமலை மற்றும் ஒட்டன்குட்டை கொலைச் சம்பவத்திற்கு தொடர்புடையதாக கூறி 11 பேரை சிறையில் அடைத்த விசாரணை அதிகாரி திரு.கோகுலகிருஷ்ணன் அவர்கள், சிவகிரி கொலை வழக்கு குற்றவாளிகள் வாக்குமூலம் அளித்த அடுத்த ஓரிரு தினங்களில் மாற்றப்பட்டிருப்பது கூடுதல் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த திரு .ஆம்ஸ்ட்ராங் அவர்கள் முதல், நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் திரு ஜெயக்குமார் தன்சிங் வரையிலான முக்கிய பிரமுகர்களின் கொலை வழக்கில் தொடர்புடைய உண்மை குற்றவாளிகள் இதுவரை கைது செய்யப்படவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டும் நிலையில், தமிழக காவல்துறையை தன் வசம் வைத்திருக்கும் முதலமைச்சர், ஸ்காட்லாந்து யார்டுக்கு இணையான காவல்துறை என பெருமை பேசுவது வெட்கக் கேடானது. எனவே, வழக்கின் விசாரணை அதிகாரியை மாற்றிவிட்டால் வழக்கு விசாரணை முடிந்து விடும் என தப்புக் கணக்கு போடாமல், சிவகிரி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் ஈரோடு, திருப்பூர் பகுதிகளில் கொலைச்சம்பவங்களில் ஈடுபட்ட உண்மையான குற்றவாளிகள் தானா ? என்பதை விரிவாக விசாரிப்பதோடு, காவல்துறை மீதான அழுத்தத்தை குறைக்க பொய்வழக்கில் அப்பாவி மக்கள் கைது செய்யப்பட்டிருப்பது உறுதியானால் அவர்களை எவ்வித நிபந்தனையுமின்றி உடனடியாக விடுவிக்க வேண்டும் என முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu
May 30, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 மதிமுக பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான திரு.வைகோ அவர்களின் சகோதரி திருமதி.சரோஜா அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக இயற்கை எய்திய செய்தி மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் அளிக்கிறது. சகோதரியை இழந்து வாடும் திரு.வைகோ அவர்களுக்கும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
May 30, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 ஊதிய உயர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்து பேச்சுவார்த்தையை புறக்கணித்த 30க்கும் அதிகமான தொழிற்சங்கங்கள் – போக்குவரத்து தொழிலாளர்களுக்கு எதிரான திமுக அரசின் விரோதப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது.தமிழக அரசின் போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு.சிவசங்கர் அவர்கள் தலைமையில் நேற்று நடைபெற்ற போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கான 15வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை தி.மு.க கூட்டணி தொழிற்சங்கமான சி.ஐ.டி.யூ உட்பட 30க்கும் அதிகமான தொழிற்சங்கங்கள் புறக்கணித்திருப்பதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.15 முதல் 20 சதவிகிதம் வரை ஊதிய உயர்வு கோரிய தொழிற்சங்கத்தினருக்கு வெறும் 6 சதவிகிதம் மட்டுமே ஊதிய உயர்வு வழங்கியதோடு, ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு 22 மாதங்களாக வழங்கப்படாமல் இருக்கும் பணப்பலன் குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு அரசு தரப்பிடம் இருந்து எந்தவித பதிலும் கிடைக்காததே பேச்சுவார்த்தையை புறக்கணிக்க முக்கிய காரணமாகவும் அமைந்திருக்கிறது.அதிலும், 01.09.2023 முதல் 6 சதவிகிதம் ஊதிய உயர்வு நிர்ணயம் செய்யப்பட்டிருப்பதாக அறிவிப்பு வெளியிட்டிருக்கும் நிலையில், மொத்தமாக வழங்க வேண்டிய 21 மாத நிலுவைத் தொகையில் 12 மாத நிலுவைத் தொகையை வழங்க முடியாது எனவும் அமைச்சர் கூறியிருப்பது ஒட்டுமொத்த போக்குவரத்து தொழிலாளர்களையும் வஞ்சிக்கும் செயலாகும்.பொதுமக்களுக்கு சேவை வழங்கும் நோக்கத்தில் தொடங்கப்பட்டிருக்கும் போக்குவரத்துக் கழகத்தில் ஏற்படும் நஷ்டத்தை காரணம் காட்டி, பண்டிகை காலங்களிலும் அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றும் போக்குவரத்துக் கழக பணியாளர்களுக்கு வழங்க வேண்டிய பணப்பலன்களை வழங்க மறுப்பது கடும் கண்டனத்திற்குரியது.எனவே, ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்து போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் கோரிய ஊதிய உயர்வை வழங்குவதோடு, ஓய்வூதியதாரர்களுக்கு பல ஆண்டுகளாக வழங்கப்படாமல் நிலுவையில் இருக்கும் பணப்பலன்களையும் உடனடியாக விடுவிக்க முன்வர வேண்டும் என போக்குவரத்துக் கழகத்தையும் தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.