கடலூர் மாவட்டம் வடலூர் வள்ளலார் சத்திய ஞானசபை பெருவெளி தைப்பூச நாளன்று பக்தர்கள் கூடுவதற்கான பொதுவெளியாகவே தொடர வேண்டும் – வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க மாற்று இடத்தை தமிழக அரசு தேர்வு செய்ய வேண்டும். சாதி, மதம், இனம் வேறுபாடுகளின்றி அனைத்து உயிர்களையும் தன் உயிரைப் போலவே பார்க்க வேண்டும் என வலியுறுத்திய வள்ளலார் அவர்கள் நிறுவிய சத்திய ஞான சபையின் பெருவெளியில் வள்ளலாரின் சர்வதேச மையத்தை அமைக்க முடிவு செய்து அதற்கான பணிகளை தமிழக அரசு தொடங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சமரச சத்திய நெறியை வளர்க்கும் நோக்கில் 200 ஆண்டுகளுக்கு முன்பாகவே வள்ளலார் அவர்களால் ஏற்படுத்தப்பட்ட ஞான சபை பெருவெளியில் ஒவ்வொரு தைப்பூச நாளன்றும் நடைபெறும் ஜோதி வழிபாட்டில் பங்கேற்பதற்காக பல லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுகின்றனர். இந்த நிலையில், வள்ளலாரின் கொள்கைகளுக்கு மாறாகவும், லட்சக்கணக்கான பக்தர்களுக்கு இடையூறாகவும் வடலூர் பெருவெளியில் வள்ளலார் சர்வதேச மையத்தை அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் என பக்தர்களும் அப்பகுதி பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். பெருவெளியில் புதிய கட்டுமானம், விவசாயம் உள்ளிட்ட எந்த பணிகளையும் மேற்கொள்ளாமல் மக்களின் வருகைக்கும் அருட்பெருஞ்சோதி ஆண்டவரின் அருளாட்சி புரிவதற்காக மட்டுமே அந்த பெருவெளி பயன்பட வேண்டும் என்பதை வள்ளலார் தனது பாடல்களிலும் ஆவணப்படுத்தியிருப்பதாக அவரின் பின்பற்றாளர்கள் கூறுகின்றனர். எனவே, ஆண்டாண்டு காலமாக லட்சக்கணக்கான பக்தர்கள் ஜோதி வழிபாட்டிற்காக பயன்படுத்தி வரும் வடலூர் பெருவெளியில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கும் பணியை கைவிடுவதோடு, மாற்று இடத்தை தேர்வு செய்து அதற்கான பணியை தொடங்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

மண்ணை விட்டு மறைந்தாலும், மக்கள் மனதில் இன்றளவும் வாழ்ந்து கொண்டிருக்கும் புரட்சித் தலைவர் அவர்களை பற்றிய திமுக துணைப்பொதுச்செயலாளர் ஆ.ராசா அவர்களின் நாகரீகமற்ற பேச்சு கண்டனத்திற்குரியது. திமுகவை தீயசக்தி எனக்கூறி தான் உயிரோடு இருக்கும் வரை ஆட்சிப் பொறுப்பிற்கு வரவிடாமல் அடியோடு சாய்த்த புரட்சித் தலைவர் அவர்கள் மறைந்த பின்பும் திமுகவிற்கு சிம்ம சொப்பனமாக திகழ்கிறார் என்பதையே ஆ.ராசா அவர்களின் தரம் தாழ்ந்த பேச்சு வெளிப்படுத்துகிறது. தனது இறுதி மூச்சு வரை மக்களுக்காகவே வாழ்ந்து பொதுவாழ்வில் நேர்மையின் அடையாளமாக திகழ்ந்த பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர் அவர்களை பற்றியும், இதய தெய்வம் அம்மா அவர்களை பற்றியும் விமர்சனம் செய்ய விஞ்ஞான ஊழல் செய்வதில் வல்லவர்கள் என பெயர் பெற்ற திமுகவினருக்கு என்ன தகுதியிருக்கிறது? ஒரு குடும்பத்தின் கட்டுப்பாட்டில் கட்சியும், ஆட்சியும் இன்று சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் நிலையில், அரை நூற்றாண்டுக்கும் முன்பாகவே அரசியலில் கடைக்கோடி தொண்டனும் உயர்ந்த பதவிக்கு வரமுடியும் என்பதை நிரூபித்துக் காட்டியவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள் என்பதை திமுகவினர் மறந்துவிடக்கூடாது. புரட்சித் தலைவர் அவர்களின் நேர்மையான வாழ்க்கைக்கு, வாழ்நாள் முழுவதும் அவருக்காக கூடிய கூட்டமே சாட்சியாக இருக்கும் போது, அரசியல் காரணத்திற்காக இழிவுப்படுத்தும் நோக்கிலான பேச்சுக்கள், புரட்சித் தலைவர் அவர்களின் பெயருக்கும், புகழுக்கும் எந்தவகையிலும் களங்கத்தை ஏற்படுத்தாது என்பதை திமுகவினர் உணர வேண்டும். மறைந்த தலைவர்கள் மீது தொடர்ந்து சர்ச்சைக்குரிய விமர்சனங்களை வைத்து வரும் திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா அவர்கள் இனியாவது தனது தகுதியை அறிந்து பேச வேண்டும். இல்லையெனில் அதற்கான பாடத்தை வரும் தேர்தல்களில் மக்கள் புகட்டுவார்கள் என்பதை எச்சரிக்கையாக விடுக்கிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.