பரந்தூர் பசுமை விமானநிலையம் அமைக்கும் பணிக்காக விவசாயிகளின் போராட்டத்திற்கு செவி சாய்க்காமல் விளைநிலங்களை கையகப்படுத்த அரசு பிறப்பித்திருத்திருக்கும் உத்தரவு கடும் கண்டனத்திற்குரியது. காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமையவுள்ள சென்னையின் இரண்டாவது விமான நிலையத்தால் பரந்தூர், வளத்தூர், தண்டலம், ஏகனாபுரம், எடையார்பாக்கம், அக்கம்மாபுரம், உள்ளிட்ட 13 கிராமங்களைச் உள்ளடக்கிய பகுதிகளில் விளைநிலங்கள் மற்றும் முக்கியமான நீர் நிலைகள் பாதிக்கப்படும் என்பதால் அப்பகுதி பொதுமக்களும் விவசாயிகளும் எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டம் நடத்தி வரும் நிலையில் அவர்களின் கோரிக்கைகளுக்கு மாறாக, நிலம் கையகப்படுத்துவதற்கான நிர்வாக அனுமதியை தமிழ்நாடு அரசு வழங்கியுள்ளது. பல்வேறு விதமான போராட்டங்கள் மூலமாக தங்களின் எதிர்ப்பை அறவழியில் பதிவு செய்துவரும் விவசாயிகளை கைது செய்து அடக்குமுறையை கையாள்வதும், பொதுமக்கள் ஒன்று கூடி கிராமசபை கூட்டத்தில் நிறைவேற்றி அனுப்பி வைத்த தீர்மானத்தை புறக்கணிப்பதும் அரசின் மக்கள் விரோதப் போக்கையே வெளிக்காட்டுவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும், விமான நிலையம் அமைய உள்ள இடத்தையும், நீர் நிலைகள் பாதிப்பு குறித்து ஆய்வு செய்த தொழில்நுட்பக் குழுவின் அறிக்கை கூட வெளியாகாத நிலையில், அவசரகதியில் நிலத்தை கையகப்படுத்துவது ஏன் ? என அப்பகுதி விவசாயிகளும் பொதுமக்களும் கேள்வி எழுப்புகின்றனர். எனவே, தமிழக அரசு தனது விடாப்பிடி தனத்தை கைவிட்டு, விளைநிலங்கள், ஏரி, குளங்கள், குடியிருப்புகளை அழித்து விமான நிலையம் தேவையில்லை என்ற முழக்கத்தை முன்னிறுத்தி ஓராண்டுக்கும் மேலாக போராடி வரும் விவசாயிகளை நேரில் சந்தித்து அவர்களின் வாழ்வாதார பிரச்னையை காது கொடுத்து கேட்பதோடு, விவசாயிகளின் அனுமதியின்றி அவர்களின் நிலத்தை கையகப்படுத்த பிறப்பித்த அரசின் உத்தரவை உடனடியாக திரும்ப பெற வேண்டும் எனவும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் புலிக்கொரடு கிராமம் ராஜிவ்காந்தி நகரில் நான்கு தலைமுறைகளாக வசித்து வரும் நூற்றுக்கும் அதிகமான கல்லுடைக்கும் தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு உடனடியாக வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்தையும் தமிழ்நாடு அரசையும் வலியுறுத்துகிறேன். காப்புக்காடு வன எல்லையோரத்தில் வசித்து வரும் கல்லுடைக்கும் தொழிலாளர்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பாகவே தாம்பரம் நகராட்சி நகர் மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி மாவட்ட ஆட்சியர் மற்றும் வன அலுவலருக்கு பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது. பட்டா வழங்கப்பட வேண்டிய நிலப்பரப்பிற்கு ஈடாக வேதநாராயணபுரம் கிராமம் தேவர்மலைப் பகுதியில் இருமடங்கு நிலம் தேர்வு செய்யப்பட்டு வனத்துறைக்கு பரிந்துரைக்கப்பட்ட நிலையிலும் பட்டா வழங்குவதில் எவ்வித முன்னேற்றமும் இல்லை என அப்பகுதி குடியிருப்புவாசிகள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே, ராஜிவ்காந்தி நகரில் வசிக்கும் கல்லுடைக்கும் தொழிலாளர்களின் நீண்டகால கோரிக்கையை ஏற்று அவர்களுக்கு உடனடியாக வீட்டுமனை பட்டா வழங்குவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகத்திற்கு அறிவுறுத்துமாறு தமிழ்நாடு அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

உச்சநீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதியும், தமிழ்நாட்டின் முதல் பெண் ஆளுநருமான பாத்திமா பீவி அவர்கள், உடல்நலக்குறைவு காரணமாக மரணமடைந்தார் என்ற செய்தி வேதனை அளிக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். புரட்சித் தலைவி அம்மா அவர்களின் ஆட்சிக்காலத்தின் போது தமிழ்நாட்டின் ஆளுநராக பதவி வகித்த பாத்தீமா பீவி அவர்கள் அரசுடன் இணக்கமாக செயல்பட்டு தமிழக மக்களின் நலனுக்கான கொண்டு வரப்பட்ட பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்துவதற்கு முக்கிய பங்காற்றியதையும் இந்த நேரத்தில் நினைவுகூறுகின்றேன். நீதித்துறையின் உயர்மட்ட பதவிகளில் பெண்களுக்கும் உரிய பிரதிநிதித்துவம் கிடைக்க தொடர்ந்து போராடி, சமத்துவமிக்க நீதியின் கலங்கரை விளக்கமாக திகழ்ந்த பாத்திமா பீவி அவர்கள் ஆற்றிய பணிகள் இந்திய நீதித்துறை வரலாற்றில் என்றென்றும் நிலைத்து நிற்கும்.

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.