தென்மாவட்டங்களில் இயங்கும் சமூக நீதி விடுதிகளில் வார இறுதி நாட்களில் உணவு சமைக்க மறுப்பதாகப் புகார் – விடுதிகளில் தங்கிப் பயிலும் ஏழை மாணவர்களுக்கான அடிப்படை வசதிகள் முழுமையாகக் கிடைப்பதைத் தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.தமிழக அரசின் ஆதி திராவிடர் நலத்துறையின் கீழ் செயல்படும் ஆயிரத்திற்கும் அதிகமான சமூக நீதி விடுதிகளில் வார இறுதி நாட்களில் உணவு சமைக்க மறுப்பதாகவும், அங்கு தங்கியிருக்கும் மாணவர்களை வெளியேறும்படி கட்டாயப்படுத்துவதாகவும் நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் செயல்படும் சமூகநீதி விடுதிகளில் ஆயிரக்கணக்கான ஏழை மாணவர்கள் தங்கி கல்வி பயின்று வரும் நிலையில், வார இறுதி நாட்களில் உணவை சமைக்க மறுப்பதும், கட்டாயமாக வெளியேறச் சொல்வதும் மாணவர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.பல்வேறு துறைகளின் கீழ் செயல்படும் விடுதிகள் சமூக நீதி விடுதிகள் என பெயர் மாற்றப்பட்டாலும் மாணவர்களுக்கான உரிமைகள், உதவிகள் மற்றும் சலுகைகள் தடையின்றி கிடைக்கும் என முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் உறுதியளித்த போதிலும், அடிப்படைத் தேவைகளில் ஒன்றான உணவைக் கூட முறையாக வழங்க மறுப்பது ஆதிதிராவிடர் நலத்துறையின் அலட்சியப் போக்கையே வெளிப்படுத்துகிறது. எனவே, தென்மாவட்டங்களில் மட்டுமல்லாது அனைத்து மாவட்டங்களிலும் இயங்கி வரும் சமூக நீதி விடுதிகளில் உரிய ஆய்வுகளை மேற்கொண்டு, அங்கு தங்கி கல்வி பயிலும் ஏழை மாணவர்கள் அனைவருக்கும் உணவு உள்ளிட்ட அனைத்து விதமான அடிப்படை வசதிகளும் முறையாகக் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே இரு தனியார் பேருந்துகள் நேருக்குநேர் மோதி ஏற்பட்ட விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மேலும் பலர் படுகாயமடைந்துள்ளதாகவும் வரும் செய்திகள் மிகுந்த வருத்தம் அளிக்கின்றன. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதோடு அவர்களின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். அதே நேரத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உயர்தர சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதி செய்யவேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

நெல் கொள்முதல் செய்வதற்கான ஈரப்பதத்தின் அளவை உயர்த்த மத்திய அரசு நிராகரித்திருப்பதாகத் தகவல் – தொடர் மழையால் பாதிக்கப்பட்டுள்ள தமிழக விவசாயிகளின் நலன் கருதி ஈரப்பத அளவை மத்திய அரசு உயர்த்தி அறிவித்திட வேண்டும்.டெல்டா உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பெய்த தொடர் மழையைக் கருத்தில் கொண்டு நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவை 17 சதவிகிதத்திலிருந்து 22 சதவிகிதமாக உயர்த்த வேண்டும் என்ற விவசாயிகள் மற்றும் தமிழக அரசின் கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்திருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. கடந்த ஆண்டுகளை ஒப்பிடும் போது நடப்பாண்டில் அதிகளவில் சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்களை முறையாகவும்,முழுமையாகவும் தமிழக அரசு கொள்முதல் செய்யவில்லை என்ற புகார் எழுந்த நிலையிலும், கொள்முதல் நிலையங்களிலும் போதுமான இடவசதியின்றி திறந்தவெளியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகளும் தொடர் மழையில் நனைந்து விவசாயிகளுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது. கனமழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை ஆய்வு செய்த மத்தியக் குழுவினர் அளித்திருக்கும் பரிந்துரையின் படி நெல் கொள்முதல் செய்வதற்கான ஈரப்பத அளவு அதிகரிக்கும் என நம்பியிருந்த தமிழக விவசாயிகளுக்கு மத்திய அரசு எடுத்திருப்பதாகக் கூறப்படும் இந்த முடிவு வேதனையுடன் கூடிய ஏமாற்றத்தையே தந்திருக்கிறது. எனவே, வடகிழக்கு பருவமழை வரும் நாட்களில் தீவிரமடையும் என வானிலை ஆய்வுமையம் எச்சரிக்கை விடுத்திருக்கும் நிலையில், தமிழக விவசாயிகளின் நலன்கருதி நெல் கொள்முதல் செய்வதற்கான ஈரப்பதத்தின் அளவை 17 சதவிகிதத்தில் இருந்து 22 சதவிகிதமாக உயர்த்தி அறிவித்திட வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்துகிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.