கழகத்தின் மீதிருந்த அளப்பரிய பற்றால் எத்தகைய இடர்பாடுகள் வந்தாலும் அதனைத் திறம்பட எதிர்கொண்டு, தான் சார்ந்த கழகத்தின் வளர்ச்சியை மட்டுமே குறிக்கோளாய் கொண்டிருந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எனது ஆருயிர் நண்பர் திரு வெற்றிவேல் அவர்களின் நினைவு தினம் இன்று. துரோகத்திற்கு எதிரான போரில் முதன்மை படைத் தளபதியாக, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொருளாளராக, நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் வழிகாட்டியாகத் திகழ்ந்த அன்பு நண்பர் திரு வெற்றிவேல் அவர்களின் நினைவு தினத்தில், நம் லட்சியப் பயணத்தின் இலக்கை அடைய நாம் அனைவரும் உறுதியேற்போம்.

எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி ஒரே நாள் இரவில் 47 தமிழக மீனவர்கள் கைது – இலங்கை கடற்படையின் அத்துமீறலும், அராஜகப் போக்கு தொடர்வதை இனியும் அனுமதிக்கக் கூடாது. ராமேஸ்வரத்திலிருந்து கடலுக்குச் சென்று நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 47 பேரை எல்லை தாண்டியதாகக் கைது செய்திருக்கும் இலங்கை கடற்படை, மீனவர்களின் விசைப்படகுகளையும் பறிமுதல் செய்திருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி பல்வேறுகட்ட போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், நேற்று ஒரேநாள் இரவில் மட்டும் 47 மீனவர்கள் கைது செய்யப்பட்டிருப்பது ஒட்டுமொத்த மீனவ சமுதாய மக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.தமிழக மீனவர்களை எல்லை தாண்டுவதாகக் கூறி கைது செய்வதையும், சிறையில் அடைத்து சித்ரவதை செய்வதையுமே வாடிக்கையாகக் கொண்டிருக்கும் இலங்கை கடற்படையின் அராஜகப்போக்கால், தமிழக மீனவர்கள் தங்களின் வாழ்வாதார மீன்பிடித் தொழிலுக்காகக் கடலுக்குள் செல்லவே அச்சப்படும் சூழல் உருவாகியுள்ளது.இலங்கைக்குத் தாரைவார்க்கப்பட்ட கச்சத்தீவை மீட்பதே தமிழக மீனவர்களின் பிரச்சினைகளுக்கு ஒரே தீர்வாக அமையும் என்ற குரல் பரவலாக எழுந்திருக்கும் நிலையிலும், அதனை மீட்பதற்கான எந்தவித ஆக்கப்பூர்வமான நடவடிக்கையும் முன்னெடுக்கப்படாமல் பேச்சளவில் மட்டுமே இருப்பதே, தமிழக மீனவர்கள் அடுத்தடுத்து கைது செய்யப்படுவதற்கான முக்கிய காரணம் எனக் கூறப்படுகிறது. எனவே, இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்கள் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுப்பதோடு, தமிழக மீனவர்கள் எந்தவித அச்சுறுத்தலுமின்றி தங்களின் மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறேன்.

முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தேர்வை நடத்தி முடிப்பதில் அவசரம் காட்டுவது ஏன் ? – புதிய பாடத்திட்டத்திற்கு ஏற்ப தேர்வர்கள் தயாராகும் வகையில் தேர்வைத் தள்ளிவைக்க ஆசிரியர் தேர்வு வாரியம் முன்வர வேண்டும். முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தேர்வைத் தள்ளி வைக்க வேண்டும் என்ற தேர்வர்களின் தொடர் வேண்டுகோளை ஏற்க மறுத்து, அக்டோபர் 12 ஆம் தேதி திட்டமிட்டபடி தேர்வு நடைபெறும் எனத் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்திருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. தேர்வர்கள் தொடர்ந்த வழக்கில் தேர்வுத் தேதியைத் தள்ளிவைப்பது தொடர்பாகப் பரிசீலிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையிலும், திட்டமிட்டபடி தேர்வை நடத்தியே தீருவோம் எனப் பிடிவாதம் பிடிக்கும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் செயல்பாடுகள் தேர்வர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.நடப்பாண்டில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தேர்வின் பாடத்திட்டங்கள் மாற்றப்பட்டிருக்கும் நிலையில், தேர்வுக்கு தங்களை முழுமையாக தயார்ப்படுத்திக் கொள்ளும் வகையில் கூடுதல் கால அவகாசம் வழங்கிய பின்னர் தேர்வை நடத்த வேண்டும் எனத் தேர்வர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். எனவே, தேர்வர்களின் வேண்டுகோளை ஏற்று அக்டோபர் 12 ஆம் தேதி நடைபெற இருக்கும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தேர்வை ஒத்திவைப்பதோடு, புதிய பாடத்திட்டத்திற்கு ஏற்ப தேர்வர்கள் தயாரான பின்னர் தேர்வை நடத்த வேண்டும் என ஆசிரியர் தேர்வு வாரியத்தையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.

தமிழ்நாடு அரசு கேபிளில் புதிய தலைமுறை தொலைக்காட்சி முடக்கமா ? – அரசுக்கும் மக்களுக்கும் இணைப்பு பாலமாகத் திகழும் ஊடகங்களைச் சுதந்திரமாக ஈடுபடத் தமிழக அரசு அனுமதிக்க வேண்டும்.தமிழ்நாடு அரசு கேபிளில் புதியதலைமுறை தொலைக்காட்சியின் ஒளிபரப்பு எந்தவித முன்னறிவிப்புமின்றி கடந்த ஐந்து நாட்களாக முடக்கப்பட்டிருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. அன்றாட நிகழ்வுகளை எழுத்து வடிவமாகவும், ஒளிஒலி வடிவமாகவும் வழங்கி அரசு நிர்வாகத்திற்கும் மக்களுக்கும் இணைப்பு பாலங்களாகச் செயல்படும் பத்திரிகைகள் மற்றும் ஊடகங்களை முடக்க முனைவது கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரானது என்பதோடு, ஜனநாயகத்திற்கும் விரோதமானது ஆகும். எனவே, ஜனநாயகத்தின் நான்காம் தூண்களாகப் போற்றப்படும் ஊடகங்கள், அதன் பணியில் சுதந்திரமாக ஈடுபட அனுமதிக்கும் வகையில் புதிய தலைமுறை தொலைக்காட்சியை அரசு கேபிளில் மீண்டும் ஒளிபரப்ப அரசு கேபிள் நிர்வாகத்தையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.

கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் குழந்தைகளைச் சேர்க்க விரும்பும் பெற்றோர்கள் அலைக்கழிக்கப்படுவதாகப் புகார் – மாணவர் சேர்க்கைக்கான நடைமுறையை எளிமைப் படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் (RTE) நடப்பாண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கான நடைமுறை நேற்று தொடங்கியிருக்கும் நிலையில், அத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் பெற்றோர்களைத் தனியார்ப் பள்ளி நிர்வாகங்கள் அலைக்கழிப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. மத்திய அரசு நிதி வழங்காததைக் காரணம் காட்டி தனியார்ப் பள்ளிகளில் இலவச சேர்க்கையை நிறுத்தி வைத்திருந்த தமிழக அரசால், ஏராளமான பெற்றோர்கள் தங்களின் சொந்த செலவிலேயே குழந்தைகளைப் பள்ளிகளில் சேர்க்க வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டிருந்தனர். இலவச கல்வி உரிமைச் சட்டத்தில் பதிவு செய்து சேர்க்கை பெறும் மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தைத் திரும்பப் பெறலாம் என்ற அரசின் விதிமுறைகளைத் தனியார்ப் பள்ளி நிர்வாகங்கள் பின்பற்றாமல் தங்களைத் தொடர்ந்து அலைக்கழிப்பதாகப் பெற்றோர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இலவச கட்டாய கல்வி சேர்க்கைக்காக இதுவரை பெற்றோர்களே இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கும் முறை நடைமுறையில் இருந்துவந்த நிலையில், நடப்பாண்டில் தனியார்ப் பள்ளிகளின் மூலமாகவே சேர்க்கைக்கான நடைமுறைகள் தொடங்க வேண்டும் என அறிவிக்கப்பட்டிருப்பதும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, கட்டாய கல்வி சட்டத்தின் கீழ் சேர்க்கை பெறும் மாணவர்கள் சேர்க்கை நடைமுறையை எளிதாக்குவதோடு, ஏற்கனவே பள்ளிகளில் சேர்ந்திருக்கும் மாணவர்களுக்கு இச்சட்டத்தின் கீழ் ஒதுக்கீடு பெறும் பட்சத்தில் அவர்கள் செலுத்திய கல்விக் கட்டணத்தைத் திரும்ப வழங்குவதற்கான நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டும் என பள்ளிக்கல்வித்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.