விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான ஜூனியர் ரோலர் ஸ்கேட்டிங் போட்டியில் தமிழகம் சார்பாகப் பங்கேற்ற அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தெற்கு ஒன்றியக் கழக செயலாளர் சகோதரர் திரு.ஆர்.எம். செல்வம் அவர்களின் புதல்வன் திரு.புகழ் அவர்கள் இரண்டு தங்கப்பதக்கங்களையும், புதல்வி செல்வி. இன்பா அவர்கள் ஒரு வெள்ளிப் பதக்கத்தையும் வென்றிருக்கும் செய்தி இரட்டிப்பு மகிழ்ச்சியைத் தருகிறது. தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களைக் குவித்து தமிழகத்திற்குப் பெருமை தேடித் தந்திருக்கும் இருவரும், அடுத்தடுத்த வெற்றிகளின் மூலம் விளையாட்டு உலகின் உச்சம் தொட்டு இந்தியாவிற்குப் பெருமை சேர்க்க மனதார வாழ்த்தி மகிழ்கிறேன்.

2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தப் பணிகளின் (SIR) அடிப்படையில் ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்டம் மற்றும் தொகுதிவாரியாக இந்தியத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. வரைவு வாக்காளர் பட்டியலில் விடுபட்ட வாக்காளர்கள், தங்களின் பெயர்களை மீண்டும் இணைக்க, புதிய வாக்காளர்களைச் சேர்க்க, திருத்தப் பணிகளை மேற்கொள்ள வரும் ஜனவரி 18 ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், அவரவர் தொகுதிக்கான வரைவு வாக்காளர் பட்டியலை முழுமையாகப் பெற்று, தங்களின் பகுதிகளில் தகுதி வாய்ந்த வாக்காளர்கள் எவரேனும் விடுபட்டிருந்தால் அவர்களை மீண்டும் வாக்காளர் பட்டியலில் இணைப்பதற்கும், புதிய வாக்காளர்களைச் சேர்ப்பதற்கும் அனைத்து விதமான உதவிகளையும் உடனிருந்து செய்திட வேண்டும் என அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

பணி நிரந்தர கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி நூற்றுக்கணக்கான செவிலியர்கள் தொடர் போராட்டம் – வாழ்வாதாரத்திற்காகப் போராடும் செவிலியர்களை அழைத்துப்பேசி அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசு முன்வர வேண்டும்.பணி நிரந்தரம், சம வேலைக்குச் சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை சிவானந்தம் சாலையில் போராடியதற்காக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு கிளாம்பாக்கத்தில் இறக்கிவிடப்பட்ட செவிலியர்கள் இரவு முழுவதும் தங்களின் போராட்டத்தைத் தொடர்ந்ததாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலம் தேர்வான செவிலியர்களை உரிய நேரத்தில் பணி நிரந்தரம் செய்யத்தவறிய சுகாதாரத்துறையின் அலட்சியமே, காவல்துறையால் கைது செய்யப்பட்ட பின்னரும் விடிய, விடியப் போராட வேண்டிய சூழலுக்கு அவர்களைத் தள்ளியுள்ளது. ஆட்சிக்கு வந்து நான்கரை ஆண்டுகள் கடந்த பின்பும், தங்களின் கோரிக்கைகளுக்குச் செவி சாய்க்காததோடு, சம வேலைக்குச் சம ஊதியம் என்ற நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்திருப்பது மன்னிக்கவே முடியாத குற்றம் என செவிலியர்கள் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர். எனவே,காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு தனியார் மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் செவிலியர்கள் அனைவரையும் எவ்வித நிபந்தனையுமின்றி உடனடியாக விடுவிப்பதோடு, அவர்களின் பிரதிநிதிகளை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்திய நியாயமான கோரிக்கைகளை ஏற்க முன்வர வேண்டும் என சுகாதாரத்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.

கழகத்தின் செயற்குழு – பொதுக்குழுக் கூட்டம்! ஜனவரி 5ஆம் தேதி தஞ்சாவூரில் நடைபெறுகிறது. அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம், கழகத் தலைவர் திரு.C.கோபால் (முன்னாள் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்) அவர்களின் தலைமையில் வருகின்ற 05.01.2026 திங்கட்கிழமையன்று காலை 9.00 மணியளவில் தஞ்சாவூர், மஹாராஜா மஹாலில் நடைபெற உள்ளது. அனைத்து கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களும் தங்களுக்கான அழைப்பிதழோடு தவறாமல் கலந்துகொள்ள வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.

திருப்பூர் அருகே குப்பைக் கிடங்கு அமைக்கும் பணிக்கு எதிராகப் போராடிய மக்கள் மீது வழக்குப்பதிவுவிவசாயத்திற்கும், சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் திட்டத்தைத் திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக கைவிட வேண்டும். திருப்பூர் மாவட்டம் இடுவாய் கிராமத்திற்கு அருகில் உள்ள சின்னகாளி பாளையத்தில் குப்பைக் கிடங்கு அமைக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் திருப்பூர் மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்திருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. இடுவாய் கிராமத்திற்கு உட்பட்ட பகுதிகளின் நிலத்தடி நீர், விவசாயம், கால்நடை வளர்ப்பு மற்றும் சுற்றுச்சூழலுக்கும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் குப்பைக் கிடங்கு அமைக்கும் முடிவை மாநகராட்சி நிர்வாகம் கைவிடும் வரை தங்களின் போராட்டம் தொடரும் என அப்பகுதி மக்களும், விவசாயிகளும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.ஆர்ப்பாட்டம், காத்திருப்பு போராட்டம், சாலைமறியல், கடையடைப்பு ஆகியவற்றோடு கிராமசபைக் கூட்டத்திலும் தீர்மானம் நிறைவேற்றி குப்பைக் கிடங்கு அமைக்கும் பணிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த பின்பும், அப்பணிகளைத் தொடர்வதும், எதிர்ப்பு தெரிவித்துப் போராடும் மக்களைக்  கைது செய்து அடக்குமுறையை ஏவுவது ஏற்றுக்கொள்ள முடியாதது. எனவே, குப்பைக் கிடங்கு அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்துப் போராடிய பொதுமக்கள் மீது போடப்பட்டிருக்கும் வழக்குப்பதிவை உடனடியாக திரும்பப் பெறுவதோடு, சுற்றுச்சூழலுக்கும், விவசாயத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும் குப்பைக் கிடங்கு அமைக்கும் முடிவைக் கைவிட வேண்டும் என திருப்பூர் மாநகராட்சி நிர்வாகத்தையும் தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.

திருவள்ளூர் அருகே அரசுப்பள்ளியில் பக்கவாட்டுச் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் மாணவர் ஒருவர் உயிரிழப்பு – அடிக்கடி அரங்கேறும் விபத்துக்களைத் தடுக்க அனைத்து அரசுப் பள்ளிக் கட்டடங்களையும் தமிழக அரசு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். திருவள்ளூர் மாவட்டம் கொண்டாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியின் பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்த விபத்தில் அப்பள்ளியில் ஏழாம் வகுப்பு பயின்று வந்த மாணவர் ஒருவர் உயிரிழந்திருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்துகின்றன. அங்கன்வாடி மையங்கள் தொடங்கி உயர்நிலைப் பள்ளிகள் வரை அடிக்கடி பெயர்ந்து விழும் மேற்கூரைகள் மற்றும் பாழடைந்த நிலையில் இருக்கும் வகுப்பறைக் கட்டடங்களின் அவலநிலை குறித்து பலமுறை சுட்டிக்காட்டியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததன் விளைவே, தற்போது மாணவர் ஒருவரின் உயிர் பறிபோகக் காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அரசுப்பள்ளிகளில் இதுபோன்று அடிக்கடி இடிந்து விழும் கட்டடங்களால் ஒட்டுமொத்த மாணவ, மாணவியர்களின் பாதுகாப்பு கேள்விக் குறியாகியிருப்பதோடு , ஒவ்வொரு ஆண்டு நிதிநிலை அறிக்கையிலும் அரசுப்பள்ளிகளின் உட்கட்டமைப்பை மேம்படுத்த ஒதுக்கப்படும் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் எங்கே செல்கிறது என்ற கேள்வியையும் எழுப்புகிறது. எனவே, மாணவரை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணத்தை உடனடியாக வழங்குவதோடு, இனியும் இதுபோன்ற துயரச் சம்பவங்கள் நிகழாத வகையில் அனைத்து அரசுப்பள்ளிகளின் கட்டடங்களையும் ஆய்வுக்கு உட்படுத்திட வேண்டும் என பள்ளிக்கல்வித்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.

தென்னிந்தியத் திருச்சபை தூத்துக்குடி நாசரேத் திருமண்டலம் ராபர்ட் கால்டுவெல் சபை மன்ற செயற்குழு உறுப்பினராகத் தேர்வாகியிருக்கும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தூத்துக்குடி மாநகர மாவட்டக் கழக செயலாளர் அன்புத் தம்பி திரு.P.ஜானியேல் சாலமோன் மணிராஜ் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். செயற்குழு உறுப்பினர்களுக்கான தேர்தலில் போட்டியின்றி வெற்றி பெற்றுள்ள அன்புத் தம்பி திரு.P.ஜானியேல் சாலமோன் மணிராஜ் அவர்கள் திருச்சபையின் மூலம் தன்னுடைய சமூக சேவையை மேன்மேலும் தொடர மீண்டும் ஒருமுறை வாழ்த்தி மகிழ்கிறேன்.

காவிரியின் குறுக்கே மேகதாது அணைக் கட்டும் பணியைத் தீவிரப்படுத்தும் கர்நாடக அரசின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது – தமிழகத்தைப் பாலைவனமாக்கும் கர்நாடக அரசின் சதித்திட்டத்தை ஆரம்ப நிலையிலேயே தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும். காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கான திட்டத்தைச் செயல்படுத்திட 30 அதிகாரிகள் கொண்ட குழுவை அமைத்து கர்நாடக அரசு உத்தரவு பிறப்பித்திருப்பதாக ஊடகங்களிலும் நாளிதழ்களிலும் செய்திகள் வெளியாகியுள்ளன. பாய்ந்தோடிக் கொண்டிருக்கும் நதிநீரை எந்தவொரு மாநிலமும் சொந்தம் கொண்டாட முடியாது என்பதோடு, கடைமடை பாசன மாநிலமான தமிழகத்தின் ஒப்புதலின்றி எந்தவொரு அணையையும் கட்ட முடியாது என உச்சநீதிமன்றம் உறுதிப்படுத்தியிருக்கும் நிலையில், மேகதாது அணையைக் கட்டியேத் தீருவோம் என பிடிவாதம் பிடிக்கும் கர்நாடக அரசின் போக்கு கடும் கண்டனத்திற்குரியது.காவிரி நதிநீர் விவகாரத்தில் தமிழகத்திற்கு சட்டப்படி உரிமையுள்ள பங்கைப் பெறுவதற்கே ஒவ்வொரு ஆண்டும் போராட வேண்டிய சூழலில், மேகதாது அணையைக் கர்நாடக அரசு திட்டமிட்டபடி கட்டி முடித்தால், காவிரிப் பாசனப் பகுதிகள் முழுவதும் பாலைவனமாகும் சூழல் உருவாகும் என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே, தமிழகத்தின் உயிர்நாடியான காவிரியின் குறுக்கே மேகதாது அணைக்கட்டும் கர்நாடக அரசின் முயற்சியை ஆரம்ப நிலையிலேயே தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை சட்டரீதியாக மேற்கொண்டு காவிரிப் பாசன விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்திட வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.