இலங்கை அதிபரின் இந்திய வருகையின் போது தமிழக மீனவர்கள் மீதான அந்நாட்டு கடற்படையின் அடக்குமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் – இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் அனைவரும் தாயகம் திரும்புவதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் . இலங்கையின் புதிய அதிபராக பொறுப்பேற்றிருக்கும் மாண்புமிகு அனுர குமார திசநாயக அவர்கள் இரண்டு நாள் பயணமாக நாளை இந்தியாவிற்கு வர இருப்பதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இலங்கை அதிபரின் இந்திய வருகையை பயன்படுத்தி நீண்ட நாட்களாக நீடித்துவரும் இலங்கை கடற்படையின் தொடர் அத்துமீறலுக்கும், அட்டூழியத்திற்கும் முடிவுகட்டி தங்களின் மீன்பிடித் தொழிலையும், வாழ்வாதாரத்தையும் பாதுகாத்திட வேண்டும் என ஒட்டுமொத்த தமிழக மீனவர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். எனவே, இருநாட்டு நல்லுறவை வலுப்படுத்தும் விதமாக இந்தியா வரும் இலங்கை அதிபரிடம் பேச்சுவார்த்தை நடத்தி இலங்கை கடற்படையின் அராஜகப்போக்கிற்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைப்பதோடு, இதுவரை அந்நாட்டு கடற்படையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் தமிழக மீனவர்களையும், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளையும் விடுவிக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வெளியுறவுத்துறையையும் மத்திய அரசையும் வலியுறுத்துகிறேன்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான திரு.ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் உடல்நலக்குறைவால் உயிரிழந்த செய்தி மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் அளிக்கிறது. சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத தலைவராக திகழ்ந்த திரு.ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

தென்மாவட்டங்களில் தொடரும் கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிப்பு – கடந்த ஆண்டு மழை பாதிப்பிலிருந்து பாடம் கற்காத திமுக அரசின் நிர்வாகத் தோல்வியே பொதுமக்களின் பாதிப்புக்கு முக்கிய காரணம். திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி உட்பட பல்வேறு தென்மாவட்டங்களில் கடந்த இரு தினங்களாக பெய்துவரும் தொடர்மழையால் அம்மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியுள்ளது. கடந்த ஆண்டு இதே மாதத்தில் பெய்த தொடர் மழையால் தாமிரபரணியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு ஏற்படுத்திய பாதிப்பிலிருந்து மீண்டு வருவதற்குள், தற்போது பெய்து வரும் கனமழை அப்பகுதி மக்களை மீளவே முடியாத அளவிற்கான துயரத்திற்கு உள்ளாக்கியுள்ளது. வானிலை ஆய்வு மையம் மூலமாக அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்ட பின்பும் கூட எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காத திமுக அரசால், ஆயிரக்கணக்கான குடியிருப்புகள் வெள்ளநீரில் தத்தளித்துக் கொண்டிருப்பதாக பாதிக்கப்பட்ட மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஒவ்வொரு பருவமழையின் போதும் குடியிருப்புகள் மற்றும் விளைநிலங்களை மழைநீர் சூழ்வதும், உடமைகளை முழுமையாக இழந்து உணவு, குடிநீர் போன்ற அத்தியாவசியத் தேவைகள் கூட கிடைக்காமல் மக்கள் போராடுவதும் வாடிக்கையாகி வருவது ஒட்டுமொத்த அரசு நிர்வாகத்தின் தோல்வியையே வெளிப்படுத்துகிறது. எனவே, மேலும் இரு தினங்களுக்கு கனமழை நீடிக்கும் என்ற வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையை முறையாக பின்பற்றி மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை துரிதப்படுத்துவதோடு, பாதிப்புக்குள்ளான மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை போர்க்கால அடிப்படையில் செய்து தருமாறு தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் தொடரும் கனமழை – முறையான முன்னறிவிப்புக்கு பின்னரே அணைகள் திறக்கப்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியின் காரணமாக நேற்று இரவு முதல் தற்போது வரை தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் சூறைக்காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே,விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திருவண்ணாமலை, என பல மாவட்டங்களில் ஃபெஞ்சல் புயல் ஏற்படுத்திய தாக்கத்திலிருந்து மீண்டு வராத நிலையில், கனமழை நீடிக்கும் என்ற தற்போதைய வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கை அம்மாவட்ட மக்கள் மத்தியில் அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளது.மேலும், எந்தவித முன்னறிவிப்பின்றி கடந்த சில நாட்களுக்கு முன்பாக சாத்தனூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட ஒரு லட்சத்திற்கும் அதிகமான கன அடி நீரால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, வடமாவட்டங்களில் உள்ள பல கிராமங்களை சூழ்ந்து பொதுமக்களின் வாழ்வாதாரத்தை கடுமையாக பாதிப்படையச் செய்துள்ளது. மழை பாதிப்புக்கு பின்பு, வரலாறு காணாத மழை, கணித்ததை விட அதிகளவிலான மழைப்பொழிவு என காரணத்தை தேடாமல், வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையை பின்பற்றி முறையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவதே கனமழை பாதிப்பிலிருந்து பொதுமக்களை பாதுகாக்க ஒரே வழியாக அமையும்.எனவே, ஆற்றங்கரையோரம், தாழ்வான பகுதிகள் மற்றும் மலைப்பகுதிகளில் வசிக்கும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதோடு, முறையான எச்சரிக்கைக்கு பின்னரே அணைகளில் இருந்து நீர் திறக்கப்பட வேண்டும் என முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களையும் தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.

தமிழக முதல்வரின் கேரளப் பயணம் தென்மாவட்ட மக்களுக்கு பயனுள்ளதாக அமைய வேண்டும் – முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் நல்ல முடிவுடனே முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தமிழகம் திரும்பிட வேண்டும். வைக்கம் நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி கேரள மாநிலம் கோட்டயத்தில் பெரியார் நினைவகம் மற்றும் நூலகத்தை நேரில் திறந்து வைக்க தமிழக முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் கேரள மாநிலத்திற்கு சென்றிருக்கிறார். முல்லைப்பெரியாறு அணையில் ஆண்டுதோறும் நடைபெறும் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதி மறுப்பதோடு, நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கார் பார்க்கிங் அமைக்கும் பணியை தீவிரமாக மேற்கொண்டு வரும் கேரள அரசின் பிடிவாதப்போக்கிற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வாய்ப்பை இந்த நிகழ்வு ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. டெல்டா மாவட்டங்களில் பயிரிடப்பட்ட பயிர்கள் போதுமான நீரின்றி கருகிய நிலையிலும், கடந்த ஆண்டு பெங்களூரு சென்று கூட்டணிக்கட்சி கூட்டத்தில் பங்கேற்ற முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், அம்மாநில முதலமைச்சரை காவிரிநீரை திறந்துவிட வலியுறுத்தாமல் திரும்பியது போல் இல்லாமல், இம்முறை கேரள முதல்வர் திரு.பினராயி விஜயன் அவர்களை சந்தித்து முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் சுமூக தீர்வை ஏற்படுத்த முயற்சிக்க வேண்டும். முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் கேரள மாநிலத்திற்கான பயணம் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்ட மக்களின் குடிநீர் மற்றும் பாசனத் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் பயனுள்ளதாக அமைய வேண்டும் என தமிழக விவசாயிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். எனவே, சுயநலத்திற்காகவும், கூட்டணி தர்மத்திற்காகவும் மாநில உரிமைகளையும், மக்களின் வாழ்வாதாரத்தையும் மீண்டும் ஒருமுறை அடகு வைக்காமல், இந்த வாய்ப்பை பயன்படுத்தி முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் நல்ல முடிவோடு தமிழகம் திரும்ப வேண்டும் என தமிழக முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.

மத்திய அரசின் விஸ்வகர்மா திட்டம் குலக்கல்வி திட்டம் என்றால் மாநில அரசின் கைவினைத் திட்டம் குலத்தை வலுப்படுத்தும் திட்டமா ? தந்தையின் பெயரை சூட்டுவதற்காகவே திட்டங்களை உருவாக்கும் முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் செயல்பாடு கண்டனத்திற்குரியது. நகை செய்தல், சிகையலங்காரம், காலணிகள் தயாரித்தல், சுடுமண் வேலைகள் உள்ளிட்ட வேலைகளுக்கு பயிற்சி, பிணையற்ற கடன் உதவி, வட்டி மானியம் வழங்கும் வகையில் “கலைஞர் கைவினைத் திட்டத்தை” தமிழக அரசு உருவாக்கியிருப்பதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. மாண்புமிகு பிரதமர் மோடி அவர்களால் கொண்டு வரப்பட்ட விஸ்வகர்மா திட்டம் சாதி அடிப்படையிலான தொழில்முறையை வலுப்படுத்தும் எனக்கூறி அதனை செயல்படுத்த முடியாது என அறிவித்த முதல்வர், தற்போது அதே சிறப்பம்சங்களை உள்ளடக்கி கலைஞர் கைவினைத் திட்டத்தை உருவாக்கியிருப்பதன் நோக்கம் என்ன ? கைவினைக் கலைஞர்களின் வாழ்க்கைத் தரத்தையும், பொருளாதாரத்தையும் உயர்த்தும் நோக்கில் மத்திய அரசால் செயல்படுத்தும் திட்டங்களை காப்பியடித்து தன் தந்தையின் பெயரில் திட்டங்களை உருவாக்குவது தான் முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான திராவிட மாடல் அரசின் சமூகநீதியா ? என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர். எனவே, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு, மக்கள் நலனுக்கான திட்டங்களை செயல்படுத்த வேண்டுமே தவிர, தன் தந்தையின் பெயரை சூட்டுவதற்காக புதிய திட்டங்களை உருவாக்கக் கூடாது என முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை கேட்டுக் கொள்கிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:
தலைமைக் கழக அலுவலகம்
எண்: 15, வெஸ்ட் காட் ரோடு, ராயப்பேட்டை,
சென்னை – 600 014
மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.