மன்னர்கள் காலத்திலேயே மக்களாட்சி முறையை நடைமுறைப் படுத்திய மாமன்னரும், சோழ சாம்ராஜ்யத்தின் பிரம்மாண்ட வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தவருமான பொன்னியின் செல்வன் ராஜராஜசோழனின் 1038 வது சதயவிழா இன்று. ஆயிரம் ஆண்டுகளை கடந்தும் உலகப் புகழ் பெற்றதாக திகழும் தஞ்சை பெரிய கோவிலை கட்டியதோடு, சிறந்த நிர்வாகம், நீர் மேலாண்மை, விவசாயம், கட்டடக்கலை, பொதுமக்களின் பொருளாதார வளர்ச்சி என அனைத்து துறைகளுக்கும் வழிகாட்டியாக திகழ்ந்த மாமன்னன் ராஜராஜ சோழனின் வீரத்தையும், ஆளுமையையும் எந்நாளும் போற்றி வணங்குவோம்.

சீனாவில் நடைபெற்று வரும் பாரா ஆசிய விளையாட்டு போட்டிகளில் F51 கிளப் எறிதல் மற்றும் ஆடவர்களுக்கான உயரம் தாண்டுதலில் மூன்று பதக்கங்களையும் வென்ற இந்திய அணி வீரர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். ஆடவர் உயரம் தாண்டுதலில் சைலேஷ்குமார் தங்கமும், தமிழ்நாட்டைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு வெள்ளியும், ராம் சிங் வெண்கலமும் வென்று அசத்தியுள்ளனர். அதே போல F51 கிளப் எறிதலில் பிரணவ் சூர்மா தங்கமும், தராம்பீர் வெள்ளியும், அமித்குமார் சரோஹா வெண்கலமும் வென்றுள்ளனர். கடின உழைப்பு மற்றும் விடா முயற்சியால் சாதனை படைத்திருக்கும் இந்திய வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து நடைபெறும் போட்டிகளிலும் பதக்கங்களை குவித்து தாய்நாட்டிற்கு மென்மேலும் பெருமை சேர்க்க வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

விவசாயத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அரியலூர் மாவட்டத்தில் ஓ.என்.ஜி.சி நிர்வாகம் சார்பாக 10 இடங்களில் அமைக்கவிருக்கும் எண்ணெய் கிணறுகளைத் தடுத்து நிறுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன். காவிரி டெல்டா மாவட்டங்களில் ஏற்கனவே தோண்டப்பட்டிருக்கும் எண்ணெய் கிணறுகளில் இருந்து கசிவு ஏற்பட்டு நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதாக புகார் எழுந்திருக்கும் நிலையில், தற்போது அரியலூர் மாவட்டத்தில் புதியதாக 10 இடங்களில் எண்ணெய் கிணறுகள் அமைக்க ஓ.என்.ஜி.சி நிறுவனம் முயற்சிப்பது இயற்கை வளங்களை முற்றிலுமாக அழிக்கும் முயற்சியாகும். கடந்த 2020ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட காவிரி டெல்டா வேளாண் மண்டல சட்ட மசோதாவில் தொழிற்சாலைகளை காரணம் காட்டி அரியலூர் மாவட்டத்தின் குறிப்பிட்ட சில பகுதிகள் விடுபட்ட காரணத்தினால் அப்பகுதிகளில் எண்ணெய் கிணறுகளை அமைக்க ஓ.என்.ஜி.சி நிறுவனம் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனவே, மத்திய அரசுக்கு உரிய அழுத்தம் கொடுத்து ஓ.என்.ஜி.சி நிறுவனத்தின் எண்ணெய் கிணறுகள் அமைக்கும் திட்டத்தை ஆரம்ப நிலையிலேயே தடுத்து நிறுத்துவதோடு, எண்ணெய் கிணறுகள் அமைக்கும் முயற்சிகளை நிரந்தரமாக தடுக்கும் வகையில் அரியலூர் உட்பட காவிரி டெல்டா பகுதிகள் முழுவதையும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் விண்கல திட்டத்தின் மாதிரி சோதனை ஓட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்த இஸ்ரோ விஞ்ஞானிகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து அனுப்பப்பட்ட ககன்யான் மாதிரி விண்கலம் திட்டமிட்டபடி விண்ணில் பயணித்து வங்கக் கடலில் இறங்கியுள்ளது. ககன்யான் திட்டம் மூலம் வரும் 2025ஆம் ஆண்டில் இந்திய விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் விண்வெளி ஆய்வுக்காக அனுப்ப உள்ள நிலையில் அதற்கான முதற்கட்ட சோதனை இன்று வெற்றிகரமாக நடைபெற்று முடிந்திருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது. முதற்கட்ட சோதனையைப் போலவே அடுத்தடுத்த சோதனைகளையும் வெற்றிகரமாக நடத்தி அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனாவுக்கு பிறகு விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் நான்காவது நாடு என்ற சாதனையைப் படைக்க இஸ்ரோ விஞ்ஞானிகள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தேனி வடக்கு மாவட்ட இதயதெய்வம் அம்மா தொழிற்சங்கப் பேரவையின் இணைச் செயலாளர் திரு.சுரேஷ்குமார் அவர்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்திய திமுகவினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறையைக் கேட்டுக் கொள்கிறேன். தேனி கான்வெண்ட் அருகே நேற்று இரவு தனியார் உணவகத்தில் வாகனத்தை நிறுத்திச் சென்ற திரு.சுரேஷ்குமார் அவர்களை திமுகவைச் சேர்ந்த சிலர் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் தாக்கியதில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் பூரண குணமடைந்து விரைவில் வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். திரு.சுரேஷ்குமார் அவர்களைத் தாக்கிய திமுகவினர் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, ஆளுங்கட்சி என்ற அராஜகப் போக்கில் செயல்படும் திமுகவினரை இதுபோன்ற செயல்களில் ஈடுபடாத வகையில் எச்சரிக்க வேண்டும் எனவும் முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

கத்தார் மாஸ்டர் செஸ் தொடரின் 7வது சுற்றில் உலக சாம்பியனும், முதல்நிலை வீரருமான மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி சாதனைப் படைத்திருக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர் கார்த்திகேயன் முரளி அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். செஸ் தொடரில் விஸ்வநாதன் ஆனந்த், ஹரிகிருஷ்ணன் ஆகியோரை தொடர்ந்து, கிளாசிக் போட்டியில் உலகின் நம்பர் ஒன் வீரரான மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்திய மூன்றாவது இந்தியர் என்ற பெருமையை கார்த்திகேயன் முரளி பெற்றுள்ளார். 7 சுற்றுகள் நிறைவடைந்த நிலையில் முதலிடம் வகிக்கும் கார்த்திகேயன் முரளி எஞ்சிய சுற்றுகளிலும் வெற்றிபெற்று தாய்நாட்டிற்கு மென்மேலும் பெருமை சேர்க்க எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.