திமுக ஆட்சி பொறுப்பேற்று 27 மாத காலம் ஆகியும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படாமல் இருப்பது கண்டிக்கத்தக்கது. ஏழை எளிய மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக தொலைநோக்குப் பார்வையுடன் புரட்சித்தலைவி அம்மா அவர்களால் கொண்டுவரப்பட்ட விலையில்லா மடிக்கணினி திட்டம், பழனிசாமி ஆட்சிக்காலத்தில் படிப்படியாக குறைக்கப்பட்டு திமுக ஆட்சிக்கு வந்தபிறகு முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. ஆட்சிக்கு வந்ததும் லேப்டாப்-க்கு பதிலாக டேப் கொடுக்கிறோம் என்று கூறிவிட்டு பிறகு டேப் வழங்குவது சரியாக இருக்காது நாங்கள் மடிக்கணினியை வழங்குகிறோம் என்று கூறி வந்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், சமீப காலமாக போதுமான உற்பத்தி இல்லை போதுமான நிதி இல்லை என்று கூறி தட்டிக்கழிப்பது மாணவர்களையும் மக்களையும் முட்டாளாக்க முயலும் செயல். எழுதாத பேனாவிற்கு 90 கோடியில் சிலை வைப்பதற்கு நிதி இருக்கும் போது மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்க மட்டும் நிதி இல்லையா? இதுதான் திராவிட மாடல் ஆட்சியா? ஆட்சிக்கு வரும் முன் ஒரு பேச்சு, ஆட்சிக்கு வந்ததும் ஒரு பேச்சு என இரட்டை வேடம் போடும் திமுக, வெற்று விளம்பரங்களுக்காக மட்டும் ஆட்சி நடத்தாமல், மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு உடனடியாக அனைத்து மாணவர்களுக்கும் மடிக்கணினிகளை வழங்கிடுமாறு தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

சென்னை பூந்தமல்லி மற்றும் திருவாரூரில் கேபிள் பதிக்கும் பணிக்காகவும், சாலை விரிவாக்க பணிகளுக்காகவும் தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து இளைஞர்கள் இருவர் பலியான சம்பவம் அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பூந்தமல்லி அருகே தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் இரவு பணிக்காக தனது நண்பருடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது கேபிள் பதிக்கும் பணிக்காகத் தோண்டப்பட்ட ராட்சத பள்ளத்தில் எதிர்பாராத விதமாக விழுந்து உயிரிழந்தாதகவும், அவருடன் வந்த நண்பர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. இதே போன்று திருவாரூரில் சாலை விரிவாக்க பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. விபத்து நிகழ்ந்த இடங்களில் போதிய அளவு முன்னெச்செரிக்கை பலகைகளோ, மின்விளக்குகளோ வைக்கப்படவில்லை என்றும் அரசுத்துறை அதிகாரிகளின் அலட்சியமே இவ்விபத்துகளுக்கு காரணம் எனவும் அப்பகுதியை சேர்ந்தோர் குற்றம் சாட்டுகின்றனர். அரசுத்துறைகள் அலட்சியமாக செயல்படுவது தொடர்கதையாகி வரும் சூழலில், மக்கள் உயிரின் மீது அக்கறை இல்லாத விடியா அரசு இன்னும் இது போன்ற பல மரணங்களுக்குப் பின்னர்தான் நடவடிக்கை எடுக்குமா? ஏற்கனவே மழைநீர் வடிகால் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளங்களில் வைக்கப்பட்ட தடுப்புகள் பாதிப்படைந்துள்ளதும், பணிகள் முடிவடைந்த இடங்களில் பள்ளங்கள் சரிவர மூடப்படாத சூழலிலும் விபத்துகள் தொடர்ந்து நடைபெற்று வருவது வருத்தமளிக்கிறது. இளைஞர்கள் உயிரிழக்க காரணமான தனியார் நிறுவனம் மற்றும் உரிய பாதுகாப்பு நெறிமுறைகள் செய்யப்பட்டிருக்கிறதா என்பதை உறுதி செய்யாத அரசு அதிகாரிகளின் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகம் முழுவதும் பல்வேறு பணிகளுக்காக பள்ளங்கள் தோண்டுவதற்கு முறையான அனுமதி பெறவும், கண்காணிக்கவும், விபத்துகள் நேரிடா வண்ணம் பாதுகாப்பை உறுதி செய்யவும் கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று தமிழ்நாடு அரசை வலியுறுத்துகின்றேன்.

தமிழ் மொழி வளர்ச்சிக்கும், மக்களிடையே அன்றாட செய்திகள் குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்திய மாலைமுரசு அதிபர் மறைந்த பா.ராமசந்திர ஆதித்தனார் அவர்களின் பிறந்த நாள் இன்று. தமிழர் தந்தை என போற்றப்படும் ஆதித்தனார் அவர்களின் வழியில் தமிழ் இன உணர்வு கொண்டவராகத் திகழ்ந்து, தமிழர்களின் நலனுக்காகவும், உரிமைக்காகவும் மாலைமுரசு நாளிதழ் மூலம் தமது இதழியலை முன்னெடுத்தவர் பா.ராமசந்திர ஆதித்தனார் அவர்கள். தமிழ்ப் பத்திரிகை உலகில் ஜாம்பவானாகத் திகழ்ந்த ராமச்சந்திர ஆதித்தனார் அவர்களின் பிறந்த நாளில் அவரது தமிழ் இனப்பற்று, மொழிப்பற்று, ஆகியவற்றை நினைவுகூர்ந்து போற்றிடுவோம்.

சென்னை வண்ணாரப்பேட்டையில் அமைக்கப்பட்டுள்ள புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் திருவுருவச்சிலை அவமதிக்கப்பட்டிருக்கும் செயல் கண்டிக்கத்தக்கது. புரட்சித்தலைவரின் சிலையை அவமதிப்பது என்பது தமிழ்நாட்டு மக்களையும், அவரது கோடிக்கணக்கான தொண்டர்களையும் அவமதிப்பதாகும். ஏழைகளின் காவலர் பொன்மனச்செம்மலின் சிலையை அவமதித்த நபர்களைத் தமிழ்நாட்டு மக்கள் ஒரு போதும் மன்னிக்கமாட்டார்கள். எம்.ஜி.ஆர் சிலையில் மர்ம நபர்கள் பூசிய பெயிண்ட்டை அகற்றி புதுப்பிக்கவும், இது போன்ற சம்பவங்கள் தொடராமல் இருக்கவும் தமிழ்நாடு அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

டாஸ்மாக் கடை மற்றும் அதன் அருகாமைப் பகுதிகளில் நடக்கும் சட்டம் ஒழுங்கு பிரச்னைகளால் டாஸ்மாக் பணியாளர்கள், பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். திருநெல்வேலி மாவட்டம் வன்னிகோனேந்தல் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் நேற்று இரவு மதுவாங்கும்போது தகராறில் ஈடுபட்ட மதுப்பிரியர்கள் சிலர் கும்பலாகச் சேர்ந்து, டாஸ்மாக் விற்பனையாளரும் கழக தொழிற்சங்க உறுப்பினருமான பால்துரை, உதவி விற்பனையாளரும் கழக தொழிற்சங்க உறுப்பினருமான பாலமுருகன் ஆகியோரை அரிவாளால் கொடூரமாக தாக்கப்பட்டதாக வெளியான தகவல் அதிர்ச்சியளிக்கிறது. படுகாயம் அடைந்த டாஸ்மாக் பணியாளர்கள் இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்களுக்கு வரும் மது பிரியர்களால் ஆங்காங்கே இது போன்ற சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் அதிகரித்திருப்பதை திமுக அரசு கண்மூடித்தனமாக வேடிக்கை பார்த்து வருவது ஏற்கதக்கதல்ல. மது விற்பனையை மட்டும் அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கும் விடியா அரசு, அதில் பணியாற்றும் அரசு ஊழியர்களைப் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்காதது கண்டிக்கத்தக்கதாகும். இனியும் தாமதிக்காமல் டாஸ்மாக் கடையில் மதுப்பிரியர்களால் ஏற்படும் சட்டம் ஒழுங்கு பிரச்னைகளைச் சீர் செய்ய தமிழ்நாடு அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றேன். அதே நேரத்தில் படுகாயம் அடைந்த டாஸ்மாக் பணியாளர்கள் இருவரும் விரைவில் குணம் பெற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன்.

கிருஷ்ணகிரி மாவட்டம் பழைய பேட்டையில் உள்ள பட்டாசு குடோனில் தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக நேரிட்ட விபத்தில் 8 பேர் உயிரிழந்த செய்தி வருத்தமளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதுடன், அவர்களின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன். இந்த விபத்தில் காயமடைந்தோருக்கு உயர் மருத்துவ சிகிச்சைகள் கிடைப்பதையும், அவர்கள் மீண்டும் வாழ்வாதாரத்தை தொடங்க போதுமான நிவாரண உதவிகளையும் பெற்றிட அரசு வழிவகை செய்ய வேண்டும். மேலும், தீபாவளி பண்டிகை வரவிருப்பதால் பட்டாசு தயாரிப்பு பணிகள் அனைத்து தொழிற்சாலைகளிலும் மும்முரமாக நடைபெற்றுவரும் நிலையில், பணியாளர்களுக்கு போதிய பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதா என்பதையும், தொழிற்சாலைகள் முறையாக பராமரிக்கப்படுகின்றனவா என்பதையும் தமிழக அரசு உறுதிப்படுத்தி, இதுபோன்ற விபத்துகள் ஏற்படாதவாறு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகின்றேன்.

இரண்டாவது நிலக்கரி சுரங்க விரிவாக்கத்திற்காக என்.எல்.சி. நிறுவனம் நெல் வயலை அழித்து கால்வாய் தோண்டும் பணியை மேற்கொண்டதை எதிர்த்து விவசாயிகளுக்கு ஆதரவாக பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் ஜனநாயக முறைப்படி மேற்கொண்ட போராட்டத்தை ஒடுக்க முயன்ற தமிழ்நாடு அரசின் செயல் கண்டனத்திற்குரியது. ஜனநாயக முறைப்படி நடக்கும் போராட்டங்களை முறையாகக் கையாளாமல் காவல்துறையை ஏவி, தடியடி நடத்தி, கண்ணீர் புகைக்குண்டு வீசி போராட்டத்தை ஒடுக்க தமிழ்நாடு அரசு நினைப்பது நியாயமல்ல. அதே நேரத்தில், ஜனநாயக முறைப்படி நடத்திய போராட்டத்தில் உணர்ச்சிவசம் கொண்டு காவல்துறையினர் மீது பா.ம.க தொண்டர்கள் கல் எறிந்ததாக வந்த செய்தியும் துரதிஷ்டவசமானது. விவசாயிகளின் உணர்வை மதித்து அவர்களின் கோரிக்கையின்படி நிலத்தை திருப்பி தருவதற்கோ அல்லது நிலம் கையகப்படுத்துவதைக் கைவிடவோ நடவடிக்கை எடுக்காமல் என்.எல்.சி. நிர்வாகத்திற்கு ஆதரவாக தமிழ்நாடு அரசும், காவல் துறையும் செயல்படுவது ஏற்புடையதல்ல. இந்த விஷயத்தில் நெற்பயிர் விளைந்த நிலத்தில் பொக்லைன் இயந்திரம் கொண்டு கால்வாய் தோண்டியது குறித்து சென்னை உயர்நீதிமன்றமே அதிருப்தி தெரிவித்திருப்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். என்.எல்.சி.க்கு ஆதரவாக செயல்படாமல் விவசாயிகளுக்கு உரிய நீதி கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுப்பதே இந்த நேரத்தில் அவசியமான செயலாகும். மேலும், கைது செய்யப்பட்டவர்களை எந்தவித பாரபட்சமுமின்றி உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.